மகேஷ் பேரைக் கேட்டதும் சற்று நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்து விட்டு, 'அவனைப்பற்றி என்ன இருக்கு சொல்றதுக்கு. உனக்கு தான் எல்லாம் தெரியுமே' என்றாள்.
'எனக்கு அவன் தரப்பு கதைகள் தான் தெரியும், உன் புறத்தில் என்ன நடந்ததென்றும், நீ என்ன நினைக்கிறாய் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றேன்.
'அவன் கூட சகஜமாதான் பழகினேன், அவன் அப்படி பண்ணுவான்னு நெனக்கல, அதெப்படி ஶ்ரீதேவிய லவ் பண்ணிட்டே எனக்கும் லவ் லெட்டர் தருவானா அவன்', 'சரி, எனக்கு லவ்லாம் பண்ண முடியாதுன்னு சொன்னா உட வேண்டியதான, அதென்ன எப்ப பாத்தாலும் என்ன மொறைக்றது, இரிடேட் பண்ற மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டியது, இதனாலெல்லாம் தான் சுத்தமா அவன புடிக்காம போயிடுச்சு ' என்றாள்.
'ஶ்ரீதேவிய அவன் லவ் பன்றான்னு தெரிஞ்சப்போ, நீ ரொம்ப ஃபீல் பண்ணியாமே'
'நான் ஏன் ஃபீல் பண்ண போறேன், தினமும் தான பேசறோம், இது எப்ப நடந்ததுனு சொல்லவே இல்லையே என கேஷுவலாதான் கேட்டேன்'
'அவன் எழுத்து ரொம்ப பவர்ஃபுல்னானே'
'அப்டிலாம் ஒன்னும் இல்ல, பூரா ஸ்பெல்லிங் மிஸ்டேக், லவ் பண்றான்றது மட்டும் ஏதோ புரிஞ்சது'
'அப்போ ட்டூர்ல அவன் கூட தனியா பேசனும்னு, நீ ரூம்ல வெய்ட் பண்ணது?'
'அப்டிலாம் ஒன்னும் இல்ல, அவன் அங்க இருந்தானான்னு கூட தெரியாது, சீனியர்ஸ்தான் ஜெம்மா, முகத்துல துணிய கட்டிட்டு வந்து ஹெல்ப் பண்ணாங்க'
'இப்பதான் எனக்கு எல்லாம் புரியுது'
'என்ன புரிஞ்சுது'
'அவன் நல்லா என் தலைல மொளகா அறச்சிருக்கான்னு'
களுக்கென்று சிரித்தாள்.
'என்டெ ஈஷ்வரா.... இப்டியெல்லாம் வேற சொல்லி வச்சிருக்கானா உன் கிட்ட'
'ஆமாம் எனக்கு அப்போ உன்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது, நீங்க ரெண்டு பேரும் தான் நல்லா பேசுவீங்க, அவன் சொல்றததான் நான் கேக்கனும்'
'இப்ப தெரிஞ்சிச்சா என்னப் பத்தி '
'இப்பதான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன்'
அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.
'ஓக்கே அப்போ! பை.... பாக்கலாம், ஹேப்பி வீக்கென்ட்' சொல்லி விட்டு இறங்கியதும் மீண்டும் ஒருமுறை சிரித்த முகத்துடன் அவள் டாடா காட்ட பஸ் கிளம்பியது. என் கைகளில் அவளுக்கும் எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு 6 ரூபாய் டிக்கெட். வீட்டுக்கு வந்ததும் இந்த சம்பவத்தை அப்படியே டைரியில் எழுதிவிட்டு அதில் அந்த டிக்கெட்டுகளை வைத்து மூடினேன்.
அந்த வாரயிறுதி முழுவதும் அவளுடன் பயணம் செய்ததும், அவள் பேசியதும், சிரித்ததும் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த பயணத்தின் மூலம் அவள் எனக்கு நெருக்கமானவளாகி விட்டாள் என நினைத்தேன்.
அந்த வார இறுதி முடிந்து திங்கட்கிழமை கல்லூரி சென்றதும் அன்று பஸ்ஸில் பேசியது போல இன்றும் என்னுடன் வந்து பேசுவாள், இந்த பேச்சு அப்படியே தொடருமென எதிர் பார்த்தேன். சொல்லப்போனால் கடைசி நிமிடத்தில் தான் வகுப்பிற்குள்ளேயே வந்தாள். வந்தவுடன் என்னை பார்ப்பாள் என நினைத்தேன். பரபரப்பாக வந்து அவள் இருக்கையில் அமர்ந்தவள் மருந்துக்கு கூட என்னை திரும்பி பார்க்க வில்லை. சரி இடைவேளை நேரத்தில் வந்து பேசுவாள் என நினைத்தேன். அப்போதும் அவள் ஹாஸ்டல் தோழிகளை காண வேறு வகுப்பிற்கு சென்று விட்டாள். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த மாதிரியே அவள் காட்டிக்கொள்ள வில்லை. எதிர்ப்படும் போது எதார்த்தமாக சிரித்தாளே தவிர தனிப்பட்ட முறையில் பார்க்கவோ பேசவோ இல்லை. அந்த வாரம் முழுவதுமே அப்படிதான் சென்றது. அடுத்த வெள்ளி வந்தது. அன்று மதிய உணவு இடைவேளையின் போது அவள் தோழிகள் அவளைக்காண வந்திருந்தனர். அவர்களை கடந்து நான் சென்ற போது 'ஓய்' என பின்னாலிருந்து கேட்டது வீணாவின் குரல். நான்கு வருடங்கள் அவள் என்னிடம் படித்திருந்தாலும் அவள் என்னை பேர் சொல்லி அழைத்தது ஒரு நான்கைந்து முறைதான் இருக்கும். எப்போதும் 'ஏய், ஓய்' தான். வகுப்பில் மற்ற எல்லோரும் 'சுப்பு' என்றுதான் அழைப்பார்கள், வித்யப்பிரியா மட்டுமே என்னை வாய் நிறைய 'சுப்ரமணி' என அழைப்பாள்.
'இன்னிக்கு வீட்டுக்கு போறல்ல' - வீணா
'நான் தினமும்தான் போறேன்' - நான்
'அப்போ இன்னிக்கு என்ன கூட்டிட்டு போ'
'ஆமா, சுப்பு பாத்து பத்திரமா கூட்டிட்டு போ என்ன' - அவள் தோழிகள் (சற்றே கிண்டல் தொனியில்)
'ப்பா, ஒரு வாரம் ஆயிருக்கு, இவளுக்கு என் கூட பேச' என்று மனதுக்குள் நினைத்தேன்.
'சரி' என்றேன் அவளிடமும் அவள் தோழிகளிடமும்.
அன்றும் அதே C6 பஸ் வந்தது. இருவருமே அதைப் பார்த்து சிரித்துக்கொண்டோம். பின் அதிலேறி அதே போல பக்கத்தில் அமர்ந்து பயணம், இம்முறை அவள் சொல்லவில்லை நானாகவே அமர்ந்து கொண்டேன் அவள் பக்கத்தில். கடந்த வாரம் எப்படி பேசினாளோ அதே போலவே இந்த வாரமும். கலகலப்புக்கு குறைவே இல்லை.
'நீ எப்பவுமே இப்படித்தானா?'
'எப்படி?'
'எப்படி இப்படி நான்ஸ்டாப்பா பேசுற? நான் லாம் 2 வார்த்தை பேச 4 வாட்டி யோசிப்பேன், (இன்ட்ரோவெர்ட் எனும் வார்த்தை இருப்பதே அப்போது தெரியாது எனக்கு) எனக்குள்ள ஒருத்தன் பேசுவதற்கு முன்பு இது சரிதானா, இதை சொல்லலாமா வேணாமா என கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். அதற்கெல்லாம் பிறகுதான் வார்த்தை வெளியே வரும், ஆனா நீ பேசுற வேகத்துக்கு உனக்கு அந்த மாதிரி எல்லாம் யோசிக்க நேரமிருக்குமா தெரில, ஆனா நல்லா பேசுற' என்றேன்.
'அப்டியா' என ஆர்வத்துடன் விழியுயர்த்தி கேட்டவள் 'அது எப்பவுமே அப்படிதான்' என்றாள்.
அந்த வார இறுதி முடிந்து மீண்டும் கல்லூரி வந்த பிறகும் அதே போல்தான் அவள் கண்டு கொள்ளவே இல்லை. ஏன் இப்படி இருக்கிறாள் என்ற யோசனையில் என்னை அறியாமலே அவள் மீதான என்பார்வை சிறிது நேரம் நிலைத்திருக்க குறுக்கே முகத்தை நுழைத்தான் சம்பத். 'ஒன்னும் சரியில்லை டா.....' என அவனுக்கே உரிய தொனியில் (அட வெக்கங் கெட்டவைங்களா என வடிவேலு காட்டும் முகபாவனை போல) தலையை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். அசடு வழிய நானும் எழுந்து சென்றேன். எப்படி சொல்வேன் அவனிடம் இரண்டு வாரங்களாக நான் அவளுடன் பக்கத்தில் அமர்ந்து பயணித்தேன் என்று.
3rd Semester செமஸ்டர் தேர்வு வந்தது. இன்ஜினியரிங் படிப்பில் இரண்டாமாண்டு வரும் முதல் தேர்வு. மிக கடினமான தேர்வு என்றும், இதில் அரியர் வைத்தால் கடைசி வருடம் வரை எழுத வேண்டி இருக்கும், அதிலும் குறிப்பாக Maths III எனும் சப்ஜெக்ட் பாஸ் பண்ணவே முடியாது என கல்லூரி முழுவதும் பரவலாக பேச்சு அடிபட்டது. +1, +2 வில் பல முறை சில பாடங்களில் ஃபெயில் ஆகி இருந்தேன் அது இப்போதும் தொடர்ந்து விடுமோ என ஒரு பயம் அப்போதே தொற்றிக்கொண்டது என்னுள். +2 வில் குறைந்த மார்க் எடுத்த போதும் இவனை எப்படியாவது இன்ஜினீயரிங் படிக்க வைத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கனவாக இருந்தது. எனவே மெரிட்டில் கிடைக்காத இடத்தை பணம் கட்டியாவது வாங்கி விடலாம் என தன் தகுதிக்கும் மீறி கடன் வாங்கி சேர்த்து விட்டார். சொல்லப்போனால் குடும்பத்தில் இன்ஜினீயரிங் படிக்க போன முதல் ஆள் நான். ஃபெயில் ஆனால் எல்லோரும் மிக வருத்தப்படுவார்கள் என்பதனால் பாஸ் மட்டும் ஆகிவிட்டால் போதும் என்றுதான் படித்தேன் தேர்வும் எழுதினேன்.
அன்று ரிசல்ட் வந்த நாள். கல்லூரியே அன்று பரபரப்பாக இருந்தது.இன்று போல் அன்று கம்ப்யூட்டர் இன்டர்நெட் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனி மார்க்குகளை அறிவிப்பார்கள். பிறகு எல்லா பாடங்களின் கூட்டலை எடுத்து பிறகு அதன் ஆவரேஜை கணக்கிட்டுதான் யார் முதலாவது யார் இரண்டாவது என வரிசைப்படுத்த வேண்டும். அன்று அந்த வேலையை வீணாதான் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் எல்லா பாடத்திற்கான மதிப்பெண் வந்ததும் எல்லோர் பார்வையும் அவர்கள் மீது திரும்பும். கோகுல் 1 விரல் காண்பித்தாள் - ஒன்று போய் விட்டதென அர்த்தம். சம்பத் 2 விரல். 5 விரலையும் காட்டினான் ஒருவன். எனக்குள் பயம் ஏறிக்கொண்டே இருந்தது அன்று வீணா மார்க்குகளை கணக்கிட அவளை சுற்றி ஒரு கூட்டமே நின்று பார்த்துக் கொண்டிருந்தது. கணக்கிட்ட வரை சிவகாமி முதல் மதிப்பெண் அடுத்து வித்யப்பிரியா. என் மதிப்பெண்களை கணக்கிட்டு முடித்ததும், வீணாவும் அவளைச் சுற்றி இருந்த கூட்டமும் ஒரே நேரத்தில் என்னை திரும்பிப்பார்த்தனர்.
- தொடரும்
No comments:
Post a Comment