Monday, December 30, 2024

என்றென்றும் புன்னகை

பகுதி 7 - வெற்றிக்கொடி கட்டு

அன்று அத்தனை பேரும் என்னை திரும்பிப் பார்க்க வீணா அத்தனை சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் என்னை பார்த்து சொன்னாள் 

'ஏய், நீதான் க்ளாஸ் பர்ஸ்ட்' 

எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் 'என்ன சொல்ற, நிஜமாவா' என்றேன்.

'ஆமா, சிவகாமியைக்காட்டிலும் 5 விழுக்காடு அதிகம், உன் பக்கத்துல கூட யாரும் வர முடில, கன்கிராஜுலேஷன்ஸ்.....' என கையை நீட்டினாள்.  

'5 சப்ஜெக்ட்டில் 3இல் நீதான் பர்ஸ்ட்' என்றாள்.

'Maths III?' என்றேன்

'அதிலும் நீதான் பர்ஸ்ட்' என்றாள். என்னாலேயே நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மையாக இருந்தது.

அவளுடன் கைகுலுக்கிவிட்டு திரும்பவும் ஏகப்பட்ட பேர் வந்து கைகுலுக்கினர். சம்பத் 'சூப்பர் மாமா' என கைகுலுக்கினான். கோகுல் 'ஐ நோ மேன், யூ வில் டூ இட், நான்தான் அப்போவே சொன்னேன்ல, யூ ஆர் டேலண்ட்டட்னு' என்றான். திரும்பி பார்த்தால் வீணாவை காணவில்லை. 

ஸ்டாஃப் ரூமுக்கு வர சொல்லி அங்கே தெரிந்த ஆசிரியர்கள், தெரியாத ஆசிரியர்கள் என எல்லாரும் வாழ்த்துக்கள் சொன்னனர். யாரெனவே தெரியாத சில சீனியர்களும் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உண்மையில் எதிர்பாராது நிகழ்ந்த அந்த வெற்றியை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை. சில தினங்கள் நாம் ஏதும் செய்யாமலே மிக வெற்றிகரமான நாளாக அமையும். அப்படி ஒரு நாளாகத்தான் அந்த நாள் அமைந்தது. சம்பத்துக்கு அன்று சந்தோஷம் தாங்கவில்லை, வாத்தியார்களிடமெல்லாம் போய் வாயடித்துக் கொண்டிருந்தான், 'பாத்தீங்கல்ல, பாய்ஸ்தான் கெத்து' என்று, வேங்கடம் எனும் நாமம் வாத்தியார் 'நீ மார்க் வாங்கி கிழிச்சிருந்தா கூட பரவால்ல, அவன் மார்க் வாங்குனதுக்கு நீ இங்க வந்து அனத்திகிட்டுருக்க' என அவனை வாரினார். 'யார், வாங்கினா என்ன சார், பசங்கதான முதல்ல வந்தது, ' என அவரிடம் வம்படி செய்து கொண்டிருந்தான்.

அவன் அலப்பறை அன்று மாலை கல்லூரி பஸ்ஸிலும் அடங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பாராட்டு விழாவே நடத்தி விட்டான். 'சிவகாமி யாவது, கருமாரி யாவது வந்து பின்னாடி நிக்க சொல்லுடா..... மாமா எப்டி தூக்கி நிப்பாட்னான் பார்..... இவளுங்கெல்லாம் காலேஜ் விட்டதும் அடுத்த 5 நிமிடத்தில் ஹாஸ்டல்ல இருக்காளுக, படிக்க எவ்வளவு நேரம் இருக்கும், ஆனா மாமா பாரு காலைல 3 மணி நேரம், சாயங்காலம் 3 மணி நேரம் ட்ராவல் பண்ணி அதுக்கப்றமும் படிச்சிருக்கான்....' என ஏகத்துக்கும் அள்ளி விட்டுக்கொண்டிருந்தான். காலேஜ் டாப்பர் லிஸ்டில் என் பெயர் வந்ததனால் அன்று முதல் என் பெயரை 'சூப்பர்' என மாற்றிவிட்டான். 

'மச்சி, ஓவரா போறடா, நான் பர்ஸ்ட் வரணும்னெல்லாம் படிக்கலடா, ஏதோ ஃப்ளூக்ல நடந்துருக்கு, நீ பாட்டுக்கு ஓவரா ஏத்தி விடாத, அடுத்த செமஸ்டர்ல எனக்கு இது தேவையில்லாத ப்ரஷர் க்ரியேட் பண்ணிவிடும்' என்றேன்.

'அதெல்லாம் இல்லடா சூப்பர், உன்ன பத்தி உனக்கே தெர்ல, Maths lll ல இவ்ளோ மார்க் வாங்கிருக்கன்னா உனக்கு மண்ட ஜாஸ்தி, நீ இன்னும் நெறய செய்வ, நீ கலக்கு மாப்பு, உன்ன வச்சே இவளுகள ஓட விட்றேன் பார்....' என சொல்லிக்கொண்டே வந்தான்.

அன்றாவது வீணா கல்லூரியில் என்னுடன் வந்தமர்ந்து பஸ்ஸில் பேசியது போல நெருக்கமாக பேசுவாள் என எதிர்பார்த்தேன், என் வெற்றியின் போது என்னவள் போல அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு மனநிலை. ஆனால் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வருவதும், எதேச்சையாக சிரிப்பதும், பிறகு தோழிகளை காண ஓடிவிடுவதுமாகவே இருந்தான். சரி நாமாக போய் பேசலாம் என நினைத்தால் கூட இனிப்பை ஈ மொய்ப்பது எப்போதும் ஓரிரண்டு பெண்களோ அல்லது ஆண்களோ அவளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை விலக்கி விட்டு அவளுடன் போய் பேச எனக்கு விருப்பமில்லை. 

வீட்டில் அப்பாவுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை, என்னிடம் 'கஷ்டப்பட்டு உழைத்தால் பலன் கிடைக்கும் ' என்ற டயலாக் மட்டும் சொல்லிட்டு, அக்கம் பக்கத்தினர், எப்போவாவது வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்கள் என எல்லோரிடமும் ஒரே புகழாரம் தான். அம்மாவும் அதே போல்தான் அக்கம்பக்கத்து அத்தைகளுடன் இதைப்பற்றிய பேச்சுதான். இது போக வீட்டில் அண்ணன் என ஒரு கேரக்டர் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் LKG படிக்கும் வரை அது என் மீது பாசமாகத்தான் இருந்தது, அதன் பிறகு என்ன ஆனதென்றே தெரியாது, என்னைக்கண்டாலே ஆகாது. வேலைக்கு போவான், வீட்டுக்கு வருவான், பாட்டு கேப்பான், அதுவும் அவன் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படித்து அவனே அஸெம்பிள் செய்த ஒரு டேப்ரிக்கார்டர் செட். அதை எக்காரணம் கொண்டும் நான் தொட்டு விடக்கூடாது, நண்பர்கள் என யாருமே கிடையாது, டிப்ளமோ படித்த போது உடன்படித்த ஒரு நண்பனை தவிர, அதுவும் பழம். எப்போதும் முகத்தில் ஒரு மாதிரி சிடுமூஞ்சித்தனம். வாழ்க்கையில் அவனுக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது போலவும், எனக்கு மட்டும் எல்லாம் சரியாக நடக்கிறது என்பது போலவும் அவனுக்குள் ஒரு ஆற்றாமை. 'தம்பி காலேஜ்ல பர்ஸ்ட் ரேங்க், வாங்கிருக்கானாம்டா' என அம்மா சொன்ன போது கூட 'ம்....' என ஒரு பதில்தான். 

சரி மீண்டும் கல்லூரிக்கு வருவோம். அந்த ரிசல்ட்டுக்கு பிறகு என் மீதான எதிர்பார்ப்பு மாணவர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் அதிகமானது. என்னையும், சிவகாமியையும், வித்யப்பிரியாவையும் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்து கல்லுரி மேகஸினில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் என போட்டோவுடன் பிரசுரித்தனர். அந்த புத்தகத்தை பார்த்ததும் வித்யப்பிரியா வேண்டுமானால் இருந்து விட்டு போகட்டும், சிவகாமிக்கு பதில் (என் பக்கத்தில்) வீணா இருந்திருக்கலாம் என தோன்றியது. வீணா திறமைசாலிதான் ஆனால் விளையாட்டுத்தனம். படிப்பதை காட்டிலும் நண்பர்களோடு அரட்டை அடிப்பதில் ஆர்வம். அவளுடன்‌ பேச அவளுடனான அடுத்த பயணம் வரை நான் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் இம்முறை அவள் தனியாக இல்லை. அன்றைய தினம் இன்னும் சில பெண்களும் கூட இருந்தனர். ஷீலா என்று எங்கள் ஏரியா பெண் ஒருத்தியும் அன்று வந்திருந்தாள், அவள் மட்டுமில்லாது அவள் வீட்டுக்கு கூட்டிப்போகிறேன் என கூட ரெண்டு தோழிகளையும் கூட்டி வந்து விட்டாள். வெளியூர் ஹாஸ்டல் பெண்கள் சில வார இறுதியில் இப்படி எந்த தோழி வீட்டிலாவது தங்குவது வழக்கம். அன்று நானும் வீணாவும், ஷீலாவும் இன்னும் இரண்டு பெண்களும் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். அன்று C6 வரவில்லை. வேறு ஒரு பஸ் வந்தது, ஏற்கெனவே பாதி நிறைந்து தான் வந்தது. இருந்தாலும் அதிலேறி பெண்கள் எல்லோரையும் அங்கங்கே இருந்த இடத்தில் அமர வைத்து விட்டு நான் நின்று கொண்டு வந்தேன். ஷீலாவும் வீணாவும் ஒரே சீட்டில் அமர்ந்து கொண்டனர் மற்ற இரண்டு பெண்களும் இன்னொரு சீட்டில். போச்சுடா இன்றும் வீணாவுடன் பேசும் சந்தர்ப்பம் போய் விட்டதே என நினைத்துக்கொண்டே நின்று கொண்டிருந்தேன்.

பின் சற்று நேரத்தில் பஸ்ஸில் பின் படிக்கெட்டுக்கு பக்கதிலிருக்கும் சீட் காலியானது. நான் வீணாவிடம் 'நான் அங்க போய் உட்கார்றேன்' என சொல்லி விட்டு போய் அமர்ந்தேன்.

அங்கு போய் அமர்ந்ததும் அவளை பார்த்தேன். ஒரு நிமிடம் என்னை திரும்பி பார்த்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவள் இருக்கையிலிருந்து எழுந்து அவள் பையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்து வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். எனக்கு சற்றே இன்ப அதிர்ச்சி தான். அவள் வந்து உட்கார்ந்ததும் கேட்டேன் 'நீ எதுக்கு இப்போ அங்கிருந்து இங்க வந்தே' என்று.

'நீதான கூப்ட்ட.....' என்றாள்.

'நான் எங்க கூப்ட்டேன்.... இங்க இடம் இருக்கு நான் போய் உட்க்கார்றேன்னு தான் சொன்னேன்.....' என்றேன்.

'அப்படியா.....' என அசட்டுத்தனமாக சிரித்தாள். 'சரி விடு.....இனி திரும்ப அங்க போய் உட்கார முடியாது....' என அவள் சொல்ல இருவருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஷீலா ஒருமுறை எங்களை திரும்பிப்பார்த்ததாய் நியாபகம்.

"ஹ்ம், அப்றம், எப்டி போகுது உன்னோட டாப்பர் லைஃப்....' என்றாள். 

'ரொம்ப வித்தியாசமா இருக்கு, என் மேல திணிக்கப்படும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என சந்தேகமா இருக்கு'  என்றேன்.

'ஏன்டா, அதெல்லாம் நீ பண்ணிடுவ....' என்றாள்.

'சம்பத்க்கு பயங்கர சந்தோசம் போல, நீ கேர்ள்ஸ பர்ஸ்ட் மார்க் வாங்க உடலன்னு' என்றும் கேட்டாள்.

'ஆமாம், ஆனா நான் அப்டிலாம் யோசிக்கல, அவன விடு, நீ எதுவுமே சொல்லல, வந்து பேசவுமில்ல, உனக்கு சந்தோஷமா இல்லையா? ' என்றேன்.

அவள் இதை சற்றும் எதிர்பார்க்காதவள் போல 'என்னடா இப்டி கேக்ற, நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டலாம் எவ்வளவு பெருமையா சொல்லிட்ருந்தேன் தெரியமா.... சுப்ரமணி தான் க்ளாஸ் பர்ஸ்ட் னு' என வேகமாக பதிலுரைத்தாள்.

அப்பாடா என் பெயரை முதல் முறை சொல்லி விட்டாள் என தோன்றியது.

'தெரியும், சொல்லிருப்பன்னு..... சும்மா கேட்டேன்' என்றேன்.

'தெரியுதுல்ல, அப்றம் ஏன் கேக்ற' என மிரட்டும் தொனியில் கேட்டாள். 

'நீ எப்ப முதல் மார்க் வாங்க போற' என்றேன்

'எனக்கெதுக்குடா அதெல்லாம், அதான் நீ வாங்கறல்ல, போதும்' என சிரித்தாள்.

பின் வழக்கம்போல அவளின் கதைகள். இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்க வாசலில் ஃபுட்போர்ட் அடிப்பவர்கள் அவர்களின் பைகளை எங்கள் மடியில் திணிக்க, சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் கழுத்து வரை பைகள். மறக்க முடியாத மற்றுமொரு பயணம்.

அன்று வீணா அவளின் வீட்டு லேண்ட்லைன் நம்பர் தந்தாள்,  வீக்கெண்ட் கால் பண்ணு என்று.  எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுமளவு ரைமிங்காக இருந்தது நம்பர். என் வீட்டு நம்பரையும் குறித்துக்கொண்டாள். அந்த வார இறுதியில் என் பிறந்த நாள் வருகிறதென்று அவளுக்கு தெரியும். ஞாயிற்றுக்கிழமை காலை அவளிடமிருந்து ஃபோன் வந்தது. 'ஹாய், ஹேப்பி பர்த்டே.... ' நேரில் பேசுவதை காட்டிலும் கணீரென இருந்தது அவள் குரல். காதுக்குள்ளேயே வந்து அமர்ந்து கொண்டு பேசுவதை போல. 

'தேங்க்யூ.... கரெக்ட்டா ஃபோன் பண்ட்ட' என்றேன்.

'பின்ன, விட்ருவோமா.... ' என்றாள் 

'அப்றம் இன்னக்கி என்ன என்ன ஸ்பெசல்...' என்றாள் 

'பெருசா ஒன்றுமில்லை.... வழக்கம் போலதான்' என்றேன். பிறந்தநாள் எல்லாம் என் வீட்டில் ஒரு பெரிய விஷயம் எல்லாம் இல்லை, நினைவிருந்தால் இன்னக்கி உனக்கு பிறந்தநாள் என்பாள் அம்மா. அப்பாவுக்கு அதுவும் சொல்ல வராது. அம்மா சொன்னால் அப்படியா என்பார், அவ்வளவே...

'அப்றம், இன்னிக்கு என்ன ப்ளான்' என்றாள் 

'ப்ளான் ஒன்னு இருக்கு, ஆனா அதுக்கு நீ ஒத்துக்கனும்.....' என்றேன்

'என்ன....?' என்றாள் 

'நீ இன்னக்கி என் வீட்டுக்கு வரணும்...' என்றேன்.

மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை 

- தொடரும்

Saturday, December 28, 2024

என்றென்றும் புன்னகை

பகுதி 6 - நீயா பேசியது 

மகேஷ் பேரைக் கேட்டதும் சற்று நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்து விட்டு, 'அவனைப்பற்றி என்ன இருக்கு சொல்றதுக்கு. உனக்கு தான் எல்லாம் தெரியுமே' என்றாள். 

'எனக்கு அவன் தரப்பு கதைகள் தான் தெரியும், உன் புறத்தில் என்ன நடந்ததென்றும், நீ என்ன நினைக்கிறாய் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றேன்.

'அவன் கூட சகஜமாதான் பழகினேன், அவன் அப்படி பண்ணுவான்னு நெனக்கல, அதெப்படி ‌‌‍ ‌ஶ்ரீதேவிய லவ் பண்ணிட்டே எனக்கும் லவ் லெட்டர் தருவானா அவன்', 'சரி, எனக்கு லவ்லாம் பண்ண முடியாதுன்னு சொன்னா உட வேண்டியதான, அதென்ன எப்ப பாத்தாலும் என்ன மொறைக்றது, இரிடேட் பண்ற மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டியது, இதனாலெல்லாம் தான் சுத்தமா அவன புடிக்காம போயிடுச்சு ' என்றாள்.

 'ஶ்ரீதேவிய அவன் லவ் பன்றான்னு தெரிஞ்சப்போ, நீ ரொம்ப ஃபீல் பண்ணியாமே'

'நான் ஏன் ஃபீல் பண்ண போறேன், தினமும் தான பேசறோம், இது எப்ப நடந்ததுனு சொல்லவே இல்லையே என கேஷுவலாதான் கேட்டேன்'

'அவன் எழுத்து ரொம்ப பவர்ஃபுல்னானே' 

'அப்டிலாம் ஒன்னும் இல்ல, பூரா ஸ்பெல்லிங் மிஸ்டேக், லவ் பண்றான்றது மட்டும் ஏதோ புரிஞ்சது' 

'அப்போ ட்டூர்ல அவன் கூட தனியா பேசனும்னு, நீ ரூம்ல வெய்ட் பண்ணது?' 

'அப்டிலாம் ஒன்னும் இல்ல, அவன் அங்க இருந்தானான்னு கூட தெரியாது, சீனியர்ஸ்தான் ஜெம்மா, முகத்துல துணிய கட்டிட்டு வந்து ஹெல்ப் பண்ணாங்க'

'இப்பதான் எனக்கு எல்லாம் புரியுது' 

'என்ன புரிஞ்சுது'

'அவன் நல்லா என் தலைல மொளகா அறச்சிருக்கான்னு'

களுக்கென்று சிரித்தாள்.

'என்டெ ஈஷ்வரா.... இப்டியெல்லாம் வேற சொல்லி வச்சிருக்கானா உன் கிட்ட'

'ஆமாம் எனக்கு அப்போ உன்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது, நீங்க ரெண்டு பேரும் தான் நல்லா பேசுவீங்க, அவன் சொல்றததான் நான் கேக்கனும்' 

'இப்ப தெரிஞ்சிச்சா என்னப் பத்தி '

'இப்பதான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன்'

அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.

'ஓக்கே அப்போ! பை.... பாக்கலாம், ஹேப்பி வீக்கென்ட்' சொல்லி விட்டு இறங்கியதும் மீண்டும் ஒருமுறை சிரித்த முகத்துடன் அவள் டாடா காட்ட பஸ் கிளம்பியது. என் கைகளில் அவளுக்கும் எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு 6 ரூபாய் டிக்கெட். வீட்டுக்கு வந்ததும் இந்த சம்பவத்தை அப்படியே டைரியில் எழுதிவிட்டு அதில் அந்த டிக்கெட்டுகளை வைத்து மூடினேன்.

அந்த வாரயிறுதி முழுவதும் அவளுடன் பயணம் செய்ததும், அவள் பேசியதும், சிரித்ததும் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த பயணத்தின் மூலம் அவள் எனக்கு நெருக்கமானவளாகி விட்டாள் என நினைத்தேன்.

அந்த வார இறுதி முடிந்து திங்கட்கிழமை கல்லூரி சென்றதும் அன்று பஸ்ஸில் பேசியது போல இன்றும் என்னுடன் வந்து பேசுவாள், இந்த பேச்சு அப்படியே தொடருமென எதிர் பார்த்தேன். சொல்லப்போனால் கடைசி நிமிடத்தில் தான் வகுப்பிற்குள்ளேயே வந்தாள். வந்தவுடன் என்னை பார்ப்பாள் என நினைத்தேன். பரபரப்பாக வந்து அவள் இருக்கையில் அமர்ந்தவள் மருந்துக்கு கூட என்னை திரும்பி பார்க்க வில்லை. சரி இடைவேளை நேரத்தில் வந்து பேசுவாள் என நினைத்தேன். அப்போதும் அவள் ஹாஸ்டல் தோழிகளை காண வேறு வகுப்பிற்கு சென்று விட்டாள். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த மாதிரியே அவள் காட்டிக்கொள்ள வில்லை. எதிர்ப்படும் போது எதார்த்தமாக சிரித்தாளே தவிர தனிப்பட்ட முறையில் பார்க்கவோ பேசவோ இல்லை. அந்த வாரம் முழுவதுமே அப்படிதான் சென்றது. அடுத்த வெள்ளி வந்தது. அன்று மதிய உணவு இடைவேளையின் போது அவள் தோழிகள் அவளைக்காண வந்திருந்தனர். அவர்களை கடந்து நான் சென்ற போது 'ஓய்' என பின்னாலிருந்து கேட்டது வீணாவின் குரல். நான்கு வருடங்கள் அவள் என்னிடம் படித்திருந்தாலும் அவள் என்னை பேர் சொல்லி அழைத்தது ஒரு நான்கைந்து முறைதான் இருக்கும். எப்போதும் 'ஏய், ஓய்' தான். வகுப்பில் மற்ற எல்லோரும் 'சுப்பு' என்றுதான் அழைப்பார்கள், வித்யப்பிரியா மட்டுமே என்னை வாய் நிறைய 'சுப்ரமணி' என அழைப்பாள்.

'இன்னிக்கு வீட்டுக்கு போறல்ல' - வீணா

'நான் தினமும்தான் போறேன்' - நான் 

'அப்போ இன்னிக்கு என்ன கூட்டிட்டு போ'

'ஆமா, சுப்பு பாத்து பத்திரமா கூட்டிட்டு போ என்ன' - அவள் தோழிகள் (சற்றே கிண்டல் தொனியில்) 

'ப்பா, ஒரு வாரம் ஆயிருக்கு, இவளுக்கு என் கூட பேச' என்று மனதுக்குள் நினைத்தேன்.

'சரி' என்றேன் அவளிடமும் அவள் தோழிகளிடமும்.

அன்றும் அதே C6 பஸ் வந்தது. இருவருமே அதைப் பார்த்து சிரித்துக்கொண்டோம். பின் அதிலேறி அதே போல பக்கத்தில் அமர்ந்து பயணம், இம்முறை அவள் சொல்லவில்லை நானாகவே அமர்ந்து கொண்டேன் அவள் பக்கத்தில். கடந்த வாரம் எப்படி பேசினாளோ அதே போலவே இந்த வாரமும். கலகலப்புக்கு குறைவே இல்லை. 

'நீ எப்பவுமே இப்படித்தானா?'

'எப்படி?'

'எப்படி இப்படி நான்ஸ்டாப்பா பேசுற? நான் லாம் 2 வார்த்தை பேச 4 வாட்டி யோசிப்பேன்,   (இன்ட்ரோவெர்ட் எனும் வார்த்தை இருப்பதே அப்போது தெரியாது எனக்கு) எனக்குள்ள ஒருத்தன் பேசுவதற்கு முன்பு இது சரிதானா, இதை சொல்லலாமா வேணாமா என கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். அதற்கெல்லாம் பிறகுதான் வார்த்தை வெளியே வரும், ஆனா‌ நீ பேசுற வேகத்துக்கு உனக்கு அந்த மாதிரி எல்லாம் யோசிக்க நேரமிருக்குமா தெரில, ஆனா நல்லா பேசுற' என்றேன்.

'அப்டியா' என ஆர்வத்துடன் விழியுயர்த்தி கேட்டவள் 'அது எப்பவுமே அப்படிதான்' என்றாள்.

அந்த வார இறுதி முடிந்து மீண்டும் கல்லூரி வந்த பிறகும் அதே போல்தான் அவள் கண்டு கொள்ளவே இல்லை. ஏன்‌ இப்படி இருக்கிறாள் என்ற யோசனையில் என்னை அறியாமலே அவள் மீதான என்‌பார்வை சிறிது நேரம் நிலைத்திருக்க குறுக்கே முகத்தை நுழைத்தான் சம்பத். 'ஒன்னும் சரியில்லை டா.....' என அவனுக்கே உரிய தொனியில் (அட வெக்கங் கெட்டவைங்களா என வடிவேலு காட்டும் முகபாவனை போல) தலையை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். அசடு வழிய நானும் எழுந்து சென்றேன். எப்படி சொல்வேன் அவனிடம் இரண்டு வாரங்களாக நான் அவளுடன் பக்கத்தில் அமர்ந்து பயணித்தேன் என்று.

3rd Semester செமஸ்டர் தேர்வு வந்தது. இன்ஜினியரிங் படிப்பில் இரண்டாமாண்டு வரும் முதல் தேர்வு. மிக கடினமான தேர்வு என்றும், இதில் அரியர் வைத்தால் கடைசி வருடம் வரை எழுத வேண்டி இருக்கும், அதிலும் குறிப்பாக Maths III எனும் சப்ஜெக்ட் பாஸ் பண்ணவே முடியாது என கல்லூரி முழுவதும் பரவலாக பேச்சு அடிபட்டது. +1, +2 வில் பல முறை சில பாடங்களில் ஃபெயில் ஆகி இருந்தேன் அது இப்போதும் தொடர்ந்து விடுமோ என ஒரு பயம் அப்போதே தொற்றிக்கொண்டது என்னுள். +2 வில் குறைந்த மார்க் எடுத்த போதும் இவனை எப்படியாவது இன்ஜினீயரிங் படிக்க வைத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கனவாக இருந்தது. எனவே மெரிட்டில் கிடைக்காத இடத்தை பணம் கட்டியாவது வாங்கி விடலாம் என தன் தகுதிக்கும் மீறி கடன்‌ வாங்கி சேர்த்து விட்டார். சொல்லப்போனால் குடும்பத்தில் இன்ஜினீயரிங் படிக்க போன முதல் ஆள் நான். ஃபெயில் ஆனால் எல்லோரும் மிக வருத்தப்படுவார்கள் என்பதனால் பாஸ் மட்டும் ஆகிவிட்டால் போதும் என்றுதான் படித்தேன் தேர்வும் எழுதினேன்.

அன்று ரிசல்ட் வந்த நாள். கல்லூரியே அன்று பரபரப்பாக இருந்தது.இன்று போல் அன்று கம்ப்யூட்டர் இன்டர்நெட் எல்லாம் கிடையாது.‌ ஒவ்வொரு பாடத்திலும் தனித்தனி மார்க்குகளை அறிவிப்பார்கள். பிறகு எல்லா பாடங்களின் கூட்டலை எடுத்து பிறகு அதன் ஆவரேஜை கணக்கிட்டுதான் யார் முதலாவது யார் இரண்டாவது என வரிசைப்படுத்த வேண்டும். அன்று அந்த வேலையை வீணாதான் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் எல்லா பாடத்திற்கான மதிப்பெண் வந்ததும் எல்லோர் பார்வையும் அவர்கள் மீது திரும்பும். கோகுல் 1 விரல் காண்பித்தாள் - ஒன்று போய் விட்டதென அர்த்தம். சம்பத் 2 விரல். 5 விரலையும் காட்டினான் ஒருவன். எனக்குள் பயம் ஏறிக்கொண்டே இருந்தது அன்று வீணா மார்க்குகளை கணக்கிட அவளை சுற்றி ஒரு கூட்டமே நின்று பார்த்துக் கொண்டிருந்தது. கணக்கிட்ட வரை சிவகாமி முதல் மதிப்பெண் அடுத்து வித்யப்பிரியா. என் மதிப்பெண்களை‌ கணக்கிட்டு முடித்ததும், வீணாவும் அவளைச் சுற்றி இருந்த கூட்டமும் ஒரே நேரத்தில் என்னை திரும்பிப்பார்த்தனர்.

- தொடரும்
 

Tuesday, December 24, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 5

பகுதி 5 - கண்ணாமூச்சி ஏனடா

அந்த கிஃப்ட்டை எடுத்துக்கொண்டு முதல் மாடியில் இருந்து வேகமாக இறங்கி தரை தளத்திற்கு வந்தபோது எதிரே மகேஷ் வந்து கொண்டிருந்தான். அவனை அங்கேயே நிறுத்தினேன். அந்த கிஃப்ட்டை அவன் கைகளில் திணித்தேன். 

'போதும் மகேஷ், இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.அவதான் உன்ன புடிக்கலன்னு சொல்லிட்டால்ல, அப்றமும் ஏன்‌ அவளுக்கு தொல்லை குடுத்துட்டே இருக்க'  என்றேன்.

அவன் 'கேம்காகதான்....' என ஆரம்பித்தான் 

'சும்மா சமாளிக்காத.... அவ பேர நீ தெரிஞ்சிதான் எடுத்திருக்க, அது யாருக்கில்லன்னாலும் எனக்கு தெரியும். நீ கூப்ட்டதும் உன்‌ கூட வர டைப் இல்ல வீணா, அவ வேற, உனக்கது புரியாது,  எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கோ.‌ இனியும் அவள தொல்ல பண்ணாத' என எச்சரிக்கும் தொனியிலேயே சொன்னேன். அவனால் மறு வார்த்தை பேச முடியவில்லை.

இது நடந்து கொண்டிருந்த போதே வீணா எனக்கு பின்னால் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த வாட்டம் இன்னும் போகவில்லை. ஒரு நிமிடம் இருவருமே அவளை பார்ந்தோம். பின் நான் தொடர்ந்தேன் 'பார் அவளை, அவள நாம என்னிக்காவது இப்படி பார்த்திருக்கிறோமா. இன்னிக்கு உன்னாலதான் அவ இப்டி இருக்கா.... காதலிக்கிறேன்ற பேர்ல அவள தொடர்ந்து காயப்படுத்தாதே' என்றேன். அவன் பதிலேதும் கூறாமல் வேகமாக படியேறி வகுப்பறைக்குள் சென்று விட்டான். மீண்டும் ஒருமுறை அவளிடம் தோற்றதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குமே எப்படிதான் அவனிடம் அப்படி பேச முடிந்ததென தெரியவில்லை. என் நட்பு வட்டத்தில் யாரையுமே இப்படி நேருக்கு நேர் நின்று எதிர்த்து பேசியதில்லை. அன்று அந்த சம்பவம் அவளால், அவளுக்காக நிகழ்ந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கும் அவனுக்கும் இருந்த பேச்சு சுத்தமாகவே நின்று போனது.

சிறிது நேரத்திற்கு பிறகு வகுப்பிற்குள் சென்ற போது எல்லாம் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தது எல்லோரும் அவரவர் கிறிஸ்மா யாரென தெரிந்து கொள்ளும் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. என் கிறிஸ்மா யாரென கிஃப்ட்டை திறந்து பார்த்தால் அட நம்ம வித்யப்ரியா. மாதவரத்து மங்கை. அவளைக்காண்போர் அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை குடும்ப குத்துவிளக்கு. மாநிறம், சுருள் முடி, முத்துப்போல பல்வரிசை. என் நண்பர்கள் சிலர் அவள் முடியை கிண்டல் செய்யும் விதமாக 'புஸ்' என்றுதான் கூப்பிடுவார்கள், நான் அப்படி கூப்பிட்டதில்லை, எனக்கு அவளை பார்த்தால் பழைய அம்மன் படங்களில் வரும் KR விஜயா தான் நியாபகத்துக்கு வரும். தலையில் கிரீடமும், கையில் சூலாயுதமும் குடுத்து சிரித்த மேனிக்கே கர்ப்பக் கிரகத்துக்குள் உட்கார வைத்து விடலாம். சின்சியராக படிப்பவள், எப்போதும் எதையும் நேர்மையாக மட்டுமே செய்ய தெரியும்.  ஏதாவது தவறு செய்தால் தானாகவே உண்மையை ஒத்துக் கொண்டு தண்டனையையும் கேட்டு வாங்கிக்கொள்ளும் உண்மை விளம்பி.  கிஃப்ட்டை பிரித்ததும் அவளே வந்தாள் 'நான்தான், உன் கிறிஸ்மா' கடைசி வரைக்கும் உன்னால கண்டு பிடிக்க முடியல பாத்தியா' என்றாள். கொஞ்சம் பேச்சு குடுத்தால் 'எனக்கு நம்ம க்ளாஸ்மேட்ஸ் எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனும், எல்லாரையும் எங்க வீட்ல சாப்பிட வைக்கனும் ' என ஆரம்பித்து விடுவாள். 

வகுப்பில் எல்லாரும் மாறி மாறி கிஃப்ட் குடுத்துக்கொள்வதையும், கூடி கூடி பேசிக்கொள்வதையும் வெளியே குட்டி செவுத்தில் உக்காந்து கொண்டு பார்த்துக் (முறைத்துக்) கொண்டிருந்தான் சம்பத்.

என்னதான் அந்த நாள் யதார்த்தமாக நகர்ந்தாலும் ஒரே நாளில் வீணாவை அத்தனை சந்தோஷத்துடனும், கண்ணீருடனும் கண்ட காட்சிகள் மனதை விட்டு நீங்கவே இல்லை. சில நாட்களில் அவள் அவளின் பழைய சகஜ நிலைக்கு திரும்பி விட்டாள். என்னிடம் சகஜமாக‌ பேச ஆரம்பித்தாள். வழக்கமான ஒரு வார இறுதி நாள். அவள் வீட்டுக்குச் செல்லும் நாள். இப்போது காலேஜ் பஸ் எல்லாம் மாறி இருந்தது. இப்போது பாரிஸ் கார்னர் வரை. அங்கிருந்து பஸ் பிடித்து அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். வீணாவும் நானும் மற்றும் சிலரும் பாரிஸில் இறங்கி விட்டோம். அங்கிருந்து எல்லோரும் வெவ்வேறு பஸ்ஸுக்கு செனறு விட நானும் வீணாவும் கிட்டத்தட்ட ஒரே ரூட் என்பதால் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். C6 எனும் பஸ் . ஹேகோர்ட் to டோல்கேட் எங்கு ஏறினாலும் இறங்கினாலும் ஒரே டிக்கெட் 6 ரூபாய். பஸ் காலியாக வந்தது. இருவரும் ஏறினோம் அவள் ஜன்னல் சீட்டில் அமர்ந்தாள் நான் அவளுக்கு பின் சீட்டில் அமரப்போனேன். 'ஏய், அங்க எங்க போற, இங்க உக்காரு' என‌அவள் பக்கத்தில் உட்கார சொன்னாள்.‌ ஆஹா, வாழ்க்கையில் முதல் முறை ஒரு பெண்ணுக்கு பக்கத்தில் உட்காரப்போகிறேன். அஞ்சாங்கிளாசில் அரைப்பாவடை போட்டவளுடன் உட்கார்ந்தது அதற்குப்பிறகு இப்போதுதான் உட்கார போகிறேன். அவளுடனான இரண்டாவது பயணம். இம்முறை படியில் தொங்க சம்பத்துமில்லை, அவள் பக்கத்து இருக்கையை ஆக்கிரமிக்க அவள் தோழியுமில்லை. நானும் அவளும் மட்டும். பஸ் கிளம்பியது, அவளின் பேச்சும் தொடங்கியது. வென்கலக்கிண்ணத்தை உருட்டுவதை போல 'கொட, கொட' வென ஏதேதோ டாப்பிக்குகள் உருண்டோடிக்கொண்டிருந்தன. பயண தூரம் பாதி கடந்து விட்டது. எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நல்ல ட்ராஃபிக்கில் பஸ் மெதுவாகத்தான் நகர்ந்தது, இன்னும் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்றே இருந்தது எனக்கு. பேச்சின் நடுவே கொஞ்சம் என்னைப்பற்றியும் டாபிக் வந்தது. 

'காலேஜ் பஸ்ஸில் உன்னை அவ்வளவு பரிகசிக்கிறார்களே உனக்கு கொஞ்சம் கூட கோபமே வராதா, எவ்ளோ பொறுமைசாலியா இருக்கான்னு, ஹாஸ்டலில் பேசிக்கொள்வோம் ' என்றாள்.

 'ஓ, என்னப் பத்தி எல்லாம் பேசுவீங்களா' என கேட்டேன். 

'அல்லாத பின்னே, சாரி மலையாளம் வந்திடுச்சி..... இல்லியா பின்ன, நீ நல்லா படிக்கிற பையன் வேற, அப்பப்போ உன்ன பத்தியும் பேசுவோம்' என்றாள்.

'ஒரு பாடத்தில் முதல் மார்க் வாங்கினா நல்லா படிக்றதா அர்த்தமா. அதுக்கெல்லாம் சிவகாமி இருக்கா' என்றேன்

நன்றாக உரையாடல் போய்க்கொண்டிருந்த போது நான்தான் ஆரம்பித்தேன். 'மகேஷ்' என.

ஒரு நிமிடம் மௌனமானாள்.

-- தொடரும் 

Monday, December 23, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 4

பகுதி 4 - இதயம் ஒரு கண்ணாடி

விடுமுறை முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது. ரிசல்ட்டும் வந்தது.  முதலாமாண்டு இன்ஜினீயரிங் ட்ராயிங் மாஸ்டர் எங்கள் வகுப்பிற்குள் வந்து மார்க்குகளை அறிவித்தார். நான் முதல் மார்க் எனக்கு அடுத்து வீணா அவளுக்கடுத்து வித்யப்பிரியா எனும் மாணவி. எனக்கு கோயில் கோபுரம் போன்று ஒரு ஷீல்டும், வீணாவுக்கு ஒரு சிறு விநாயகர் சிலையும் வித்யப்பிரியாவுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்து விட்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போனார். கல்லூரியில் நான் முதலில் வாங்கிய பரிசு அதுதான். ஆனால் முதல் வருடத்துக்கு பிறகு இன்ஜினீயரிங் ட்ராயிங் சப்ஜெக்ட் கிடையாது என்பது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. 

சம்பத்துக்கு ஒரே பெருமை எல்லா பாடத்திலும் பெண்களே முதல் மார்க், பசங்க மானத்தை இந்த ஒரு பாடத்திலாவது நான் காப்பாற்றினேனே என்று. சிவகாமி எனும் ஐயர் மாமிதான் பெரும்பாலும் எல்லா பாடத்திலும் முதல் மார்க். பெண்கள் முதல் மார்க் வாங்குவதே அவனுக்கு பிடிக்காது, ஆசிரியர்களிடம் கூட ஆண் வாத்தியார்களிடம்தான் நன்றாக பேசி அரட்டை அடித்துக்கொண்டிருப்பான், பெண் ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் கூட 2 வார்த்தைக்கு மேல் பேச மாட்டான் அவர்கள் முகம் பார்த்தும் பதில் சொல்ல மாட்டான். சில ஆசிரியைகள் 'நான் இங்க இருக்கேன் எங்க பாத்து பேசிட்ருக்க' என்று கேட்டே விடுவார்கள். மின்னலே ஆரம்பத்தில் வரும் மாதவன், மௌனம் பேசியதே சூர்யா போன்ற கேரக்டர்களை அந்த படங்கள் வரும் முன்னரே அவன் ரூபத்தில் பார்த்து விட்டோம் நாங்கள்.

கோகுலும் வந்து கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொன்னான். எனக்கு தெரியும் மச்சி நீதான் 1st வருவன்னு, சிவகாமிலாம் மக்கப் பண்ணி மார்க் வாங்குறவ, ஆனா இது புரிஞ்சு பண்ணாதான் வரும் அதனாலதான் இதுல அவளாள மார்க் வாங்க முடில. நீ புரிஞ்சி படிக்றவன்னு எனக்கு தெரியும். இதே மாதிரி படி, நல்லா வருவ என சொல்லி விட்டு போனான். சில விஷயங்கள் சில பேர் சொல்லும் போதுதான் நம்மைப்பற்றி நமக்கே புரியும். அதை அவன் அடிக்கடி எனக்கு செய்து கொண்டிருந்தான்.

இரண்டாமாண்டு கல்லூரி தொடங்கி சில நாட்களில் கிறிஸ்துமஸ் மாதம் வந்தது. அந்த நேரத்தில் கிறிஸ்மா (Chris Ma) கிறிஸ் ச்சைல்ட் (Chris Child) என ஒரு விளையாட்டு விளையாட வேண்டுமாம். வாழ்க்கையில் அப்படி ஒரு விளையாட்டை நான் கேள்விப்பட்டதே இல்லை. அதாவது எல்லோர் பேரையும் சீட்டில் எழுதி குலுக்கிப்போட்டு எடுக்க வேண்டுமாம், அதில் நமக்கு யார் பெயர் வருகிறதோ அவர்களுக்கு நாம் தினமும் ஒரு டாஸ்க் கொடுக்க வேண்டுமாம். ஆனால் அதை நாம்தான் கொடுக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியக்கூடாது, அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் இடத்தில் துண்டு சீட்டில் எழுதி வைக்கலாம், அல்லது யார் மூலமாவது குடுத்து குடுக்க சொல்லலாம். அப்படி டாஸ்க் குடுப்பவர்கள் கிறிஸ்மா டாஸ்க் செய்பவர்கள் கிறிஸ் ச்சைல்ட். பின் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள் நான்தான் உன் கிறிஸ்மா என கிஃப்ட் குடுத்து கிறிஸ் ச்சைல்ட்டிடம் சர்ப்ரைஸ்ஐ உடைக்க வேண்டும். ஒருவாறு புரிந்தது. சீட்டுக்குலுக்கி போட்டு பெயர்களை எடுத்தாகி விட்டது ஆனால் விளையாட்டு தொடங்கப்படவில்லை. ஏதோ ஒன்று சரியாயில்லை. மகேஷ் நீங்கள் தப்பாக குலுக்கிக் போட்டு விட்டீர்கள், நான் கிறிஸ்டியன் பள்ளியில் படித்தவன் எனக்கு இந்த கேம் நன்றாக தெரியும். ஆண்கள் பெயர் பெண்களுக்கும் பெண்கள் பெயர் ஆண்களுக்கும்தான் வர வேண்டும் என சண்டை பிடித்தான். அதன்படியே செய்து அவனே பெயர்களை எழுதி மீண்டும் சீட்டுக்குலுக்கி போட்டு எடுக்க வைத்து விட்டான். சம்பத் என்னை எல்லாம் இந்த ஆட்டத்தில் சேர்க்கக்கூடாது என முதலிலேயே கண்டிசனாக சொல்லி விட்டான். எனக்கு கஜலெஷ்மி எனும் பெண்ணின் பெயர் வந்தது. மகேஷுக்கு சொல்லி வைத்தாற்போல வீணாவின் பெயர், நான் சந்தேகப்பட்டது சரியாய் போனது. இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறான் என புரிந்தது. வீணாவை அவனுக்கு பிடித்த நிறத்தில் உடை அணிந்து வர வைத்தான், இரு கால்களிலும் வெவ்வேறு செருப்பு அணிந்து வரச்செய்தான், வகுப்பில் விசில் வாங்கி வந்து ஊத வைத்தான், இப்படி தினமும் ஏதாவதொரு டாஸ்க், அவளும் இவன்தான் என தெரியாமல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். நானும் கெஜலெஷ்மிக்கு சிற்சில டாஸ்க்குகள் கொடுத்தேன். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது விளையாட்டு.

கிறிஸ்துமஸ் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது மகேஷ் ஒரு நாள் அவனுக்கு என்ன டாஸ்க் கொடுப்பதென்று தெரியவில்லை, நீயே எதாவது எழுதி அவளுக்கு கொடுத்து விடு என சொல்லி விட்டு சென்று விட்டான். நானும் ஒரு துண்டு சீட்டில் அவளுக்கான டாஸ்க்கை எழுதிக்கொண்டிருந்தேன். வீணா அதை ஜன்னல் வழியே பார்த்திருப்பாள் போல, பிறகு நானே அதை அவளிடம் கொண்டு போய் குடுக்க நான் தான் அவள் கிறிஸ்மா என முடிவே செய்து விட்டாள் போல. அவள் தோழிகளிடத்தும் சொல்லி விட்டாள் போல. அடுத்த நாள் உண்மையை உடைக்க வேண்டிய கடைசி நாள். எனக்கு என்ன ஆகப்போகிறதோ என்று இருந்தது. அடுத்த நாள் காலை மகேஷ் ஒரு வெளிர் நீல நிற ரோஜா மொட்டை என்னிடம் குடுத்து இதையும் நீயே குடு அப்புறம் மெய்ன் கிஃப்ட்டை என் பெயர் எழுதி பிறகு அவளுக்கு தந்து கொள்கிறேன் என்றான். எனக்கு அந்த ரோஜாப்பூவை குடுக்க தயக்கம் தான் இருந்தாலும் கொண்டு போய் குடுத்தேன். 'ஐ எனக்கா!' என என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து தன் தோழிகளுடன் கை கோர்த்துக் கொண்டு வந்தவள் என் எதிரே வந்ததும் 'ஏய், பாத்தியா' என ஒரு சுற்று சுற்றி அவள் தலையில் நான் தந்த பூ இருப்பதை காண்பித்தாள். 'நல்லாருக்கா' என கேட்டாள். அவள் முகத்தில் நீதான் என் கிறிஸ்மா என்பதை கண்டு பிடித்து விட்டேன், நீயே சீக்கிரம் சொல் எனும் தொனி தெரிந்தது. எனக்கும் ஒரு நிமிடம் நானே அவளுக்கு கிறிஸ்மா வாக இருந்திருக்கலாம் என தோனியது. இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மகேஷ் அவள் உட்காரும் இடத்தில் அவளுக்கான கிஃப்ட்டை வைத்து விட்டு அதில் அதனுள் அவன் தான் அவளின் கிறிஸ்மா என்பதையும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீணா அதை எப்போது பிரித்து பார்த்தாள் என தெரியாது. நான் அப்போது வகுப்பிலும் இல்லை. சிறிது நேரம் கழித்து நான் வகுப்பிற்குள் வந்து பார்த்த போதுதான் அங்கு ஏதோ நிலைமை சரியில்லை என புரிந்தது. வீணா தலை குனிந்த நிலையில் அவள் இடத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைச்சுற்றிலும் அவளின் ஹாஸ்டல் தோழிகள், எல்லோருக்கும் தோய்ந்த முகமும் அதோடு சேர்ந்த கோபமும். நான் அவளை நெருங்கி சென்று என்ன ஆனது என கேட்கும் முன்னரே சுனிதா குறுக்கிட்டாள். 'உனக்கு தெரிஞ்சுதான் நீ பண்ணியா. மகேஷ் உன்ன மீடியேட்டரா யூஸ் பன்றான்னு உனக்கு தெரியலயா' என்றாள். நான் வீணாவை பார்த்தேன். அவள் முன்னே இருந்த டெஸ்க்கில் அவன் குடுத்த கிஃப்ட்டும், அதன் மேலே நான் குடுத்த பூவும் இருந்தது. அவள் குரல் தழுதழுத்த நிலையில் வெளி வந்தது 'நான் நீ ன்னு தான் நெனச்சேன்' என்று தலை குனிந்தவாறே சொன்னாள். அவள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அவள் இமை தாண்டி கன்னத்தில் விழுந்தது. அது என்னை ஏதோ செய்தது. அந்த கிஃப்ட் பாக்ஸையும் பூவையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விறுவிறுவென கிளம்பினேன்.

- தொடரும்

Sunday, December 22, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 3

பகுதி 3 - ஊலலலா

அந்த வார இறுதி முடிந்து திங்கள் காலை கல்லூரி பஸ்ஸில் ஏறும் வரைக்கும் எனக்கு தெரியவில்லை எனக்கொரு விசாரணை கமிஷனே காத்திருக்கிறதென்று. நான் தாம்பரம் வரை ட்ரெய்னில் சென்று அங்கிருந்துதான் காலேஜ் பஸ்ஸில் ஏறுவேன். ஆனால் பஸ் கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜில் இருந்தே கிளம்பும் அங்கேயே ஏறுபவன் சம்பத். அன்று நான் அவனை அம்போவென விட்டுவிட்டு வீணாவுடன் கடலை போட கிளம்பிவிட்டேன் என ஒட்டுமொத்த பஸ்ஸுக்கும் பரப்பிவிட்டான். அதெப்படி அவனை விட்டுவிட்டு அவளுடன் பேசப்போகலாம் என அத்தனை நண்பர்களும் கட்டம் கட்டி விட்டனர். அன்றைய நாள் இதன் காரணம் எல்லோருக்கும் நன்றாக நேரம் போயிருக்கும். மற்ற எல்லோரும் மறந்தாலும் சம்பத் விடுவதாயில்லை. பார்க்குமிடமெல்லாம் சொல்லித்திரிந்தான். 'அன்னக்கி இவன் என்ன பண்ணான் தெரியுமா, என்று முதலிலிருந்து ஆரம்பிப்பான்'. 'யப்பா சாமி, தெரியாம பன்டேன், வேணா பாரு‌ அடுத்த வாட்டி உங்கூடவே இருக்கேன்' னு சத்தியம் பணணாத குறையாக சமாளித்தேன். 'ஒன்ன எல்லாம் இனி நம்ப மாட்டன்டா' என ஓட்டிக் கொண்டே தான் இருந்தான். இதெல்லாம் நடக்கும் போது வீணா பஸ்ஸில்தான் இருந்தாள் அவளுக்கும் இதெல்லாம் கேட்டிருக்க வேண்டும். அன்று இடைவேளையின்‌போது கேட்டாள். 'நல்லா மாட்டிக்கிட்ட போல, ஒழுங்கா அவன் கூடவே இருந்திருக்கலாம்ல' என கிண்டல் தொனியிலேயே அவளும் கேட்டாள். 

முதலாமாண்டு காலேஜ் கல்ச்சுரல்ஸ் அறிவித்தார்கள்.‌எல்லா டிபார்ட்மென்ட்களிலும் பாட்டு, டான்ஸ் ப்ராக்டிஸ் என 2ஆம் பாதி எந்த வகுப்பும் நடக்காமல் இருந்தது. நான் எதிலும் பங்கேற்க வில்லை. சொல்லப்போனால் அந்த நேரம் எனக்கு ஓய்வெடுக்க ஏதுவாக இருந்தது. காலை 4:30 மணிக்கு எழுந்து கிளம்பி இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய எனக்கு அந்த ஓய்வு தேவைப்பட்டது. வீணாவும் அவள் தோழிகளும் ஆடிடோரியத்தில் ஊலலலா பாட்டிற்கு ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்திருப்பார்கள் போல. நான் வகுப்பில் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது வீணாவின் தோழி சுனிதா வந்து என்னை எழுப்பினாள். வீணா உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாள். அவள் டான்ஸ் பர்பார்மென்ஸில் நீ ஒரு போர்ஷன் பண்ண வேண்டுமாம் என்று சொன்னாள். நானும் ஆடிடோரியம் போனேன் வீணா அங்கே டிஸ்பென்சரில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாள், நான் கூப்பிட்டதும் சட்டென திரும்பியவள் பின்னால் நின்று கொண்டிருந்த பையன் மேல் இடித்து விட்டாள், 'பாத்து' என்றேன், நாக்கை கடித்து கொண்டு அவனிடம் சாரி சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தாள். 'வா , உக்காரு' ஒரு ஹெல்ப் வேணும் என்றாள். நானும் ப்ரபுதேவா போர்ஷன் ஆடதான் கேட்கப்போகிறாள் என நினைத்தேன். 'நாங்கள் ஆடும்போது பின்னாடி பெய்ன்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு செல்லும் ஒரு கேரக்டர் வேண்டும், நீ செய்ய முடியுமா? தப்பா நெனச்சுக்காத' என்றாள். நம்ம ஒர்த் அவ்வளவுதான் போல என தோன்றினாலும் அவள் தயங்கிதான் கேட்கிறாள் என புரிந்தது. 'சரி செய்றேன்' என்றேன். ஆனால் அதன்பின் அவளிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நானும் கேட்டுக்கொள்ள வில்லை. கல்ச்சுரல்ஸ் நாளும் வந்தது. ஊலலலா பாடலுக்கு அவளும் தோழிகளும் ஆடினார்கள் நன்றாகவே இருந்தது அவளின் பர்பார்மன்ஸ். ப்ரபுதேவா போர்ஷனுக்கு யார்தான் ஆடப்போகிறார்கள் என காண காத்துக்கொண்டிருந்தேன். அந்த பீட் ஆரம்பித்ததும் கூட்டத்துக்கு நடுவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. 'அட சுனிதா! பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு அவள்தான் வந்து ஆடிக்கொண்டிருந்தாள்' எந்த ஆணையும் சேர்க்கக்கூடாதென முடிவு செய்து விட்டார்கள் போல என நினைத்துக்கொண்டே கை தட்டிக்கொண்டிருந்தேன்.

கோகுல் வகுப்பில் எனக்கு கிடைத்த இன்னொரு நட்பு. ஆண்பாவம் பாண்டியன் சாயல். தடித்த மீசை. சிரித்தால் சிம்பு போல பல்வரிசை. பெண்கள் அவனிடம் தானே வந்து பேச ஆசைப்படுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் சீனியர்கள் உட்பட அத்தனை பேரையும் ஓரங்கட்டிய தடகள வீரணாக இருந்தான். விளையாட்டு போட்டிகள் நடந்த ஒரே நாளில் அத்தனை கோப்பைகளையும் தட்டி எங்கள் டிபார்ட்மெண்ட்க்கே பெருமை சேர்த்தான். ஒரே நாளில் கல்லூரி முழுதும் தெரியுமளவு பிரபலமாகி விட்டான். பெண்கள் மத்தியிலும். நண்பர்களை தேர்ந்தெடுப்பதிலும் மிக தெளிவாக இருப்பான். எல்லோரிடமும் சகஜமாக பேசினாலும் ஒரு சிலரை மட்டுமே நெருங்கிய வட்டத்துக்குள் வைத்துக் கொள்வான். அவன் என்னை கூட வைத்துக் கொள்ள நினைப்பான் என அப்போது நான் நினைக்கவில்லை. நான் இன்ஜினியரிங் ட்ராயிங் நன்றாக வரைவதை பார்த்து தான் என்னிடம் பேச ஆரம்பித்தான். நமக்கெல்லாம் வராத ஒன்று இவனுக்கு இவனுக்கு இத்தனை லாவகமாக வருகிறதென்றால் இவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவனுக்கு தோணியிருக்க வேண்டும். நான் யார், எங்கிருந்து வந்திருக்கிறேன், என்‌பின்புலம் என்ன என எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான். பின் பேசும்போதெல்லாம் ஏதோஒரு விதத்தில் நீ திறமைசாலி, நீ நிறைய செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பான். கோகுலுடன் பழக ஆரம்பித்த பின்னரே மகேஷுக்கும் எனக்குமான நெருக்கம் குறைய ஆரம்பித்தது. அவன் சுற்றிய ரீல்களும். 

முதலாமாண்டு முழு ஆண்டு தேர்வும் வந்தது. மற்ற பாடங்களில் நான் சுமார்தான் என்றாலும் இன்ஜினீயரிங் ட்ராயிங்கில் நான் முதல் மார்க் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்‌ மீது திணிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதும் போல்தான் தேர்வு அறைக்குள் சென்றேன். அன்று என் போறாத காலமா தெரியவில்லை. ட்ராஃப்டரில் 'L' வடிவில் இருக்கும் ஸ்கேலை மாட்டி நாபை திருக்கி ட்டைட் செய்யும்போது கொஞ்சம் அதீத அழுத்தம் கொடுத்து விட்டேன் போல பொட்டென உடைந்து போனது. என்ன செய்யப்போகிறோம் என புரிய வில்லை, இனி வாத்தியாரிடம் சொல்லி இன்னொரு ட்ராஃப்டர் ஏற்பாடு செய்வதற்குள் நேரம் போய்விடும். திரும்பி வீணாவை பார்த்தேன், அவளும் என்ன ஆனது என கண்களாலேயே வினவினாள். ஒன்று மில்லை என்பது போல் தலையசைத்தேன். அப்போது என்னவோ எனக்குள் ஒரு எண்ணம் உதித்தது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று. உடைந்த நாபை எடுத்து வைத்து விட்டு கைகளிலேயே ஸ்கேலுக்கு இறுக்கம் கொடுத்து வரைய ஆரம்பித்தேன். முழுத்தேர்வையும் அப்படியே வரைந்து முடித்து விட்டு வெளியே வந்து விட்டேன். வீணாவும் வந்தாள். 'என்னடா ஆச்சு?' என்றாள். உடைந்த நாபை காட்டினேன். 'ஐயோ, இது இல்லாம எப்டிடா வரஞ்சே?' என்றாள். 'எதோ சமாளிச்சிட்டேன்' என்றேன். பிறகு விடுமுறை வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம். இப்போது போட்டியே எனக்கும் அவளுக்கும் தான். யார் முதல் மார்க் வாங்கப்போகிறார்கள் என. 

விடுமுறை முடிந்து பார்ப்போம்

- தொடரும்

Thursday, December 19, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 2

பகுதி 2 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 

அடுத்த நாள் காலை பெரும் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தான் மகேஷ். காலை  போகும்போதே அது காதல் கடிதம்தான் என என்னிடம் சொல்லி விட்டான். கவலைப்படாதே உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என எழுதியிருக்கிறேன் என்றான். கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. 'என் எழுத்துக்கள் வலிமையானவை, அவள் எப்படியும் இன்று ஒத்துக்கொள்வாள், அவள் மனதில் ஒரு சின்ன தடைதான் இருக்கிறது அதை இக்கடிதம் மூலம் உடைத்து விட்டேன்' என மிக நம்பிக்கையுடன் கூறினான். எனக்கென்னவோ எதுவும் சரியாக படவில்லை. அன்று வகுப்பிற்குள் வீணா நுழைந்தாள், அவள் முகத்தில் வழக்கம்போலிருக்கும் உற்சாக மில்லை. மகேஷ் அவளை கண்டும் காணாதது போல் இருந்தான். வகுப்பு தொடங்கி நடக்க ஆரம்பித்தது. இடைவேளை நேரம் வந்தது. வீணா எழுந்தாள், அவள் பையிலிருந்து அந்த நோட்டை எடுத்தாள், அதை சுற்றியிருந்த தாள் கிழிந்த நிலையில் இருந்தது. அதை அவனிடம் திருப்பி கொடுத்துவிட்டு 'இதெல்லாம் செட் ஆகாது' என சொல்லிவிட்டு அவன் முகத்தை கூட சரியாக பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள். மனதுக்குள் ஒரு நிமிடம் 'வீணா டா' என்பது போலிருந்தது. மகேஷ் முகம் சுருங்கி விட்டது. அன்று முழுதும் அவன் யாரிடத்தும் சரியாக பேசவில்லை. மாலை மணியடித்ததும் யாருடனும் பேசாமல் வீட்டுக்கு சென்று விட்டான். அடுத்த நாளும் அவன் விடுப்பு எடுத்ததாக நியாபகம். வீணாவும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அப்போது வீணா எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை, ஆனால் அன்று வீணா ஒருவேளை அவனுக்கு ஓகே சொல்லியிருந்தால் அவள் மீது நான் வைத்திருந்த பிம்பம் அன்றே உடைந்திருக்கும்.

வீணா ஹாஸ்டலில் தங்கி படித்தவள், நாங்கள் தினம் வீடு சென்று வந்தவர்கள். வீணா வின் ஹாஸ்டலில் அவள் ரூம் மேட்ஸ் 3 பேர், அவர்களுக்கு வீணாவின் மேல் அலாதி ப்ரியம். அக்கடிதத்தை வீணா ஹாஸ்டலில் அவர்கள் முன்பு வைத்தே படித்திருப்பாள் போல, கேட்கவா வேண்டும் அடுத்த நாளே மொத்த கல்லூரிக்கும் தெரிந்து விட்டது, அது ஸ்ரீதேவிக்கும் தெரியவர அவளும் சண்டையிட்டு பிரிந்து விட்டாள், அது மகேஷை இன்னும் கொஞ்சம் கோபப்படுத்தி விட்டது. உள்ளதும் போச்சிடா நிலைக்கு தள்ளப்பட்டான். வகுப்பில் அவன் இடத்தை மாற்றினான். வீணாவுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. ஆனால் என்னிடம் காலை மாலை பயணத்தின் போது வழக்கம்போலதான் பேசினான், வீணா பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டான்.

நாட்கள் சில சென்றது. முதல் வருடம் கல்லூரி சுற்றுலா அறிவித்தார்கள். 2500 ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வீட்டில் கேட்டேன், உன்னை படிக்க வைக்கதான் வீடு அடமானத்தில் இருக்கிறதென்றார் அப்பா, சம்பாதித்த பிறகு போய்க்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். என்னைப்போலவே சிலரும் போகாமல் வகுப்பில் துணையாயிருந்தனர். வீணா போயிருந்தாள் மகேஷும் போயிருந்தான். ஒரு வாரம் இருந்திருக்கும். ஊட்டி, பெங்களூர் இஸ்கான் கோயில், மைசூர் பேலஸ் எல்லாம் முடித்து விட்டு வந்த கூட்டம் பல கதைகள் பேசியது. ஊட்டி குளிரில் வீணா வின் தோழி சுனிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, ஏற்கெனவே மது அருந்தியிருந்த சில சீனியர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து சுனிதாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிப்போக உதவி புரிந்த சம்பவம் விமரிசையாக பேசப்பட்டது. பிலிம் கேமராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பிரின்ட் போடப்பட்டு எல்லோரிடத்தும் காண்பிக்கப்பட்டது. மகேஷ் சொல்லப்போகும் கதைக்குத்தான் காத்திருந்தேன். அன்று இரவு நடந்த சம்பவத்தின் அவன் வெர்ஷன் இதுதான். அன்றிரவு சீனியர்களுடன் இவனும் போனானாம். அவள் ஆஸ்பத்திரியிலிருந்து அறைக்கு திரும்ப கூட்டி வந்ததும் அறையிலிருந்த இன்னொரு தோழி அவனிடம் சொன்னாளாம். 'உன்னை தனியே சந்தித்து பேச அங்கே இன்னொரு அறையில் வீணா காத்திருக்கிறாள், நீ போய் பார்' என்றாளாம். ஆனால் அவன் அவளை பார்க்காமலே வந்து விட்டானாம். 

சம்பத் வகுப்பிலிருந்த இன்னொரு முக்கியமான வித்தியாசமான கேரக்டர். பெண்கள் என்றாலே ஆகாது. காலேஜ் பஸ்ஸில் கடைசி சீட்டில் பையன்கள் சூழ தான் உட்காந்திருப்பான். வகுப்பிலும் அப்படிதான். ஒரே காலேஜ் பஸ் என்பதால் அதுவேதான் போகும் வழியில் பெண்கள் ஹாஸ்டலிலிருந்து மாணவிகளை ஏற்றிச்செல்லும். அப்போது ஏறும் பெண்கள் கிடைக்குமிடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அப்படி அமரும்போது தப்பித்தவறி கூட பெண்கள் அவன் பக்கத்தில் உட்காந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னை சுற்றி இருக்கும் எல்லா சீட்களிலும் பையன்களை நிரப்பி வைத்திருப்பான். அதில் நானும் அடக்கம். திமுக விஸ்வாசி, கலைஞரின் வெறியன், அப்போது அவன் பெயரும் அவனின் இந்த வித்தியானமான குணாதிசயங்களும்தான் தெரியும் எனக்கு. 

 வார இறுதி நாட்களில் ஹாஸ்டல் பெண்களும் வீட்டுக்கு போய் வர காலேஜ் பஸ்ஸிலேயே வருவார்கள். அப்படியொரு வார இறுதி நாளில் காலேஜ் பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது படாரென ஒரு சத்தம். பஸ்ஸின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே நீளமாக சுழன்று கொண்டிருக்கும் இரும்பு உருளைக் கம்பி கழண்டு தரையில் விழுந்திருந்தது. சரி இனி பஸ் தேறாது என எல்லோரும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து செங்கல்பட்டு ரெயில்வே ஸ்டேஷன் நான்கு கிலோமீட்டர். எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தே வந்து விட்டோம். அங்கிருந்து தாம்பரம் வந்தோம். தாம்பரத்தில் இறங்கி பீச் ஸ்டேஷன் போக வீணாவும் அவள் தோழியும் டிக்கெட் எடுத்தனர். எனக்கு பாஸ் இருந்தது. உடன் சம்பத் இருந்தான். அவன் போக வேண்டியது நுங்கம்பாக்கம். வீணாவும் அவள் தோழியும் ட்ரெய்னில் வந்தமர்ந்ததும் அவள் எதிரில் நான் சென்று அமர்ந்தேன். சம்பத் வரவே இல்லை ட்ரெய்ன் வாசலிலேயே நின்று கொண்டு பிரயாணம் செய்தான். அவனுக்கு பெண்கள் அலர்ஜி என தெரியுமென்பதால் நானும் கூப்பிட வில்லை, வண்டி தாம்பரத்திலேயே முழு கூட்டமாகி விட்டது.  அன்றுதான் முதல் முறை வீணாவுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். சொல்லப்போனால் அவள் பேச்சை கேட்டுக்(ரசித்துக்)கொண்டே வந்தேன். அவள் தலை அசைவிற்கேற்றாற்போல குலுங்கிக்கொண்டே இருந்த கம்மலையும். என்னென்னவோ பேசினாள் காலேஜில், ஹாஸ்டலில், வகுப்பில், லேப் இல் நடந்தவை, அவளின் தோழிகள், தோழர்கள், கல்லூரியில் உலவும் காதல்கள், ஆசிரியர்கள், அலைபாயுதே, மாதவன், மணிரத்னம், ரஹ்மான், என எல்லாவற்றைப் பற்றியும் மிக கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தாள், மகேஷை தவிர. அவளை சுற்றியிருக்கும் உலகம் எத்தனை அழகாயிருக்கிறது என்று தோன்றியது. அவள் பேசிய அனைத்தும் என் மனக்கண்ணில் காட்சிகளாக ஓடியது, அவையனைத்தும் ஒரு நல்ல நகைச்சுவை திரைப்படம் போல இருந்தது, சோகமில்லை, துன்பமில்லை, கஷ்டங்களை குறித்த புலம்பலில்லை, சாதிக்க வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை, ப்ரச்சனைகள் குறித்த பயமில்லை, எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே கடந்து விடலாம் எனும் எதார்த்தம் மட்டுமே இருந்தது. அந்த உலகத்துக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற ஆசை அன்று என்னுள் எழுந்தது. அன்றைய நாள் பயணம் துளியும் எனக்கு சலிப்பு தட்ட வில்லை. தான் பயணம் செய்ய வேண்டிய தூரம் , தன்னை சுற்றியிருக்கும் கூட்டம் என எதையுமே கண்டு கொள்ளவில்லை அவள். அவளை சுற்றியிருக்கும் சூழலை கலகலப்பாக மாற்றும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள். இடையில் ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குபவர்களுக்கு வழிவிடுவதற்காக நடைமேடையில் இறங்கிய சம்பத் ஜன்னல் வழியே என்னை எட்டிப்பார்த்தான். 'என்னடா இன்னும் நுங்கம்பாக்கம் இன்னும் வரலியா' என கேட்டு விட்டேன். முறைத்துக்கொண்டே மீண்டும் ஏறிக்கொண்டான். மீண்டும் தொடங்கியது அவள் பேச்சு. நுங்கம்பாக்கத்தில் சம்பத் கையை மட்டும் காட்டி விட்டு வேகமாக சென்று விட்டான். நான் இறங்க வேண்டிய பார்க் ஸ்டேஷனும் வந்தது. பை ... சொல்லி விட்டு இறங்கி விட்டேன். 

அது போலொரு பயணம் இனியும் நடக்குமா என எதிர்பார்த்தேன். நடந்தது. 

- தொடரும்

Friday, December 13, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 1

பகுதி 1 - அலைபாயுதே 

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு, வருடம் 1999, முதல்நாள் வகுப்பு. புதிய வளாகம், புது நண்பர்கள், புதிய கல்வி முறை என வித்தியாசமானதொரு அனுபவத்திற்கு தயாராகி இருந்த சமயம். முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த விரிவுரையாளர் எங்களை ஒவ்வொருவராக எழுந்து நின்று அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார். திக்கென்று இருந்தது, பள்ளிப்படிப்பு வரை வருகைப்பதிவேட்டை பார்த்து ஆசிரியர் பெயர் சொல்லி அழைக்க 'ப்ரெசன்ட் சார்' சொன்னதோடு சரி, மற்றபடி அறிமுகப்படுத்திக்கொள்ளுமளவிற்கெல்லாம் அறிவு கிடையாது, அதுவும் ஆங்கிலத்தில். அப்படியே இருந்தாலும் என்னவென்று அறிமுகப்படுத்திக்கொள்வது? ஆனந்த விகடன் படிப்பவன் என்றா? முதல் நாளே மானம் போகப்போகிறது, அதுவும் பெண்கள் முன்னால், என்றெல்லாம் மனதிற்குள் ஓட.... 

'மை நேம் இஸ் ஆனந்த், ஐ அம் ஃப்ரம் தாம்பரம், ஐ ஸ்டடீய்ட் இன் சென்ட் ஜான்ஸ், மை ஹாபிஸ் ஆர் ப்ளேயிங் க்ரிக்கெட், வாட்சிங் மூவிஸ்' என பளிச்சென்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடடான் முதல் பென்ச் முதல் மாணவன், ஆபத்பாந்தவன், நிறைய அறிமுகம் செய்து கொண்டிருப்பான் போல. அறிமுகம் என்பதை இப்படிதான்  செய்ய வேண்டும் என காட்டிவிட்டான். அவன் சொன்ன அதே ஆர்டரில் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பெயர், எங்கிருந்து வந்திருக்கிறோம், படித்த பள்ளியின் பெயர், பின் ஹாபிஸ், வெய்ட்..... மற்றதெல்லாம் சரி ஹாபிஸ் என்ன சொல்ல அவன் சொன்னதையே சொன்னால் காப்பியடிப்பது போலாகிவிடும். யோசித்துப்பார்க்கிறேன், அந்த சமயங்களில் நான் அதிகநேரம் லயித்திருந்தது A R Rahman இன் இசையை கேட்பதில்தான் மட்டும்தான். ரோஜா முதல் உயிரே வரை அத்தனை கேஸட்டுகளையும் வரிசையாக அடுக்கி வைத்து கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வர அதையே சொல்லி விடுவோம் என முடிவு பண்ணி என் முறை வந்ததும் 

'மை நேம் இஸ் ...... , ஐ அம் ஃப்ரம் திருவொற்றியூர், ஐ ஸ்டடீய்ட் இன் வெள்ளையன் செட்டியார் ஹையர் செகண்டரி ஸ்க்கூல், மை ஹாபி இஸ் லிசனிங் A R Rahman மியூஸிக்' என ஒப்பித்து விட்டு உட்காரப்போன என்னை நிறுத்தினார் ஆசிரியர், 'அதென்ன A R Rahman மியூஸிக்? அப்ப இளையராஜா போட்றதெல்லாம் மியூசிக் இல்லையா? லிசனிங் டு மியூஸிக் னு சொல்லு' என்று சொல்லி அமர சொன்னார். ராஜா ரசிகர் போல.

முதல் நாள் மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். 'வெள்ளஞ்செட்டியா (வெள்ளையன் செட்டியார் பள்ளியின் உள்ளூர் வட்டார சொல்) நீ' என்று ஒரு குரல் கணீரென்று ஒலித்தது, கேட்டவள் வீணா. என் அளவே உயரம், மெலிந்த உருவம், மாநிறத்துக்கும் கூடுதலான வனப்பு, அகன்ற வாய், தடித்த உதடுகள், குறும்புப்பார்வை, பருக்கள் நிறைந்த கன்னம் (இன்றைய சாய் பல்லவியை அன்றே கண்டது போல) நேர்த்தியான ஆடை, சரிந்து விழும் துப்பட்டைவை சரிசெய்து கொண்டே இருக்கும் மேனரிசம் என சக மாணவியாய் புன்னகையுடன்  எதிரில் நின்று கொண்டிருந்தாள் வீணா. அதுதான் அவளுடனான என் முதல் அறிமுகம். 'ஆமாம் நான் வெள்ளஞ்செட்டிதான்' என்றேன். 'நான் முருகதனுஷ்கோடி தண்டையார்பேட்டை, கேர்ள்ஸ் ஸ்க்கூல்' என்றாள். 'ஹ்ம் தெரியும், உன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது கேட்டேன்' என்றேன்.  எங்கள் கல்லூரி சென்னையிலிருந்து வெகு தொலைவில் இருந்ததாலும் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தாலும் அவள் இருக்கும் இடத்திற்கு பக்கத்திலிருக்கும் இடத்திலிருந்து வந்தவன் நான் என்கிற ஒரு அண்மை உணர்வு அவளுக்குள் வந்திருக்கலாம்.

எங்கள் கல்லூரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல பாஷை பேசுபவர்களும் சேர்ந்திருந்தனர். ஒருநாள் காலை வகுப்பிற்குள் ஏறியபோது ஜன்னல் வழியே இறங்கிய சூரியக்கதிர்கள்  வீணாவின் முகத்தில் பட்டு பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அவள் கையில் ஒரு கடிதம் அதை அவள் தன் தோழிகளுக்கு முன் வாசித்துக்கொண்டிருந்தாள். அது ஒரு மலையாளக்கடிதம், மலையாளம் வாசிக்கத்தெரியாத ஏதோ ஒரு தோழிக்காக அவள் வாசித்துக்காண்பித்திருக்க வேண்டும். அழுத்தம் திருத்தமாக அவள் வாசித்ததை கேட்ட போது முதல்முறை மலையாளம் எனும் பாஷை எத்தனை அழகாக, ஈர்ப்பு மிக்கதாக இருக்கிறது என்று அன்றுதான் முதல்முறை புரிந்தது, அவள் மலையாளி என்பதும் அன்றுதான் தெரிந்தது. 'எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுற' என கேட்டே விட்டேன், 'ஏய் நான் சின்ன வயசுலருந்தே சென்னைலதான் இருக்கேன், வீட்டுக்குள்ள மட்டும்தான் மலையாளம் மத்தபடி வெளில எல்லாம் தமிழ்தான்' என்றாள். என்னதான் அவள் தமிழ் சரளமாக பேசினாலும் இடையிடையே வரும் குருவாயூரப்பாவும், ஈஷ்வராவும் அவள் மலையாளி என்பதை அவ்வப்போது நினைவு படுத்தியது.

இன்ஜினீயரிங் ட்ராயிங் முதலாமாண்டு எங்களுக்கு இருந்த பாடம். டிராஃப்டர் வைத்து கேட்கிற கேள்விக்கேற்றாற்போல படம் வரைய வேண்டும். ஒட்டு மொத்த வகுப்பும் அந்த பாடத்தில் திண்டாட எனக்கும் வீணாவுக்கும் அது சர்வசாதாரணமாக வந்தது, வாத்தியார் கேள்வியை கொடுத்து விட்டு, வரைங்க என சொல்லி விட்டு, கையை பின்னால் கட்டிக்கொண்டு குறுக்க மறுக்க நடந்து கொண்டிருப்பார். நான் சட்டென வரைந்து முடித்து விட்டு அவளை பார்ப்பேன், அவள் நானும் முடித்து விட்டேன் என்பது போல ஒரு பார்வை பார்ப்பாள் பிறகு இருவருக்கும் ஒரு புன்னகை வரும், அவ்வளுவுதான் எங்களுக்கிடையே அப்போதிருந்த பரிபாஷை. அவளின் சில குறும்புத்தனங்களை என்ன மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தெரியாது. ஒருநாள் நாள் நான் வரைந்து முடித்த என் ச்சார்ட் பேப்பரை வந்து பார்த்தவள் சட்டென அவள் பென்சிலை எடுத்து அவள் பெயரை எழுதி விட்டு, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு போனாள். கையெழுத்து அழகாக இருந்தது அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

மகேஷ் என் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவன், முதல் நண்பன். பையன் நல்ல ஸ்மார்ட், காதலர் தினம் குணால் ஹேர்ஸ்டைல். அவன் இருக்கும் உயரத்திற்கு அவன் முதல் பென்ச்சில் உட்க்காரத்தேவை இல்லைதான் இருந்தாலும் உட்காந்திருந்தான், எனக்கு வலப்புறத்தில், அவனுக்கு வலப்புறத்தில் வீணா ஆனால் இருவருக்குமிடையே ஆண் பெண் பாலருக்கான இடைவெளி இருந்தது. மகேஷிடம் கொஞ்சம் ஹீரோயிச நடவடிக்கைகள் இருந்தது, வீணாவிடம் பேனா வாங்குவது, வட்டம் போட வளையல் வாங்குவது, அவள் நோட்டுக்களை எடுத்துச் செல்வது, இவன் நோட்டுக்களை அவளிடம் கொடுத்து படம் வரையச் சொல்வது, அவளின் கைக்குட்டையை, லேப் கோட்டை, துப்பட்டாவை எடுத்து வைத்துக்கொள்வது, அடுத்த நாள் அவளிடம் அவற்றை திருப்பி கொடுப்பது என அவளை இவனுக்கு நெருக்கமானவள் என காட்டிக்கொள்ளும் அத்தனை வேலைகளையும் பார்த்தான். வீணாவும் அவனுக்கு படம் வரைந்து கொடுப்பது , லேபில் அவள் ப்ராஜெட்களை முடித்து விட்டு அவனுக்கு உதவி செய்வது என்றுதான் இருந்தாள். எந்த ஆணிடம் பேசவோ பழகவோ எந்த தயக்கமும் இருந்ததில்லை வீணாவுக்கு. எல்லாவற்றையும் மிக எதார்த்தமாக கையாளும் திறன் அவளிடம் இருந்தது. சிரிப்பும், சிறு அக்கறையும் தான் அவள்.

கல்லூரி தொடங்கி முதல் ஒரு மாதத்திலேயே எங்கள் வகுப்பிலிருந்த ஸ்ரீதேவி எனும் இன்னொரு பெண்ணும் மகேஷும் காதலர்களானார்கள். எங்கள் கல்லூரிக்கு ஒரே ஒரு பஸ்தான்  அதுவும் ஓடி முடிந்து ஓய்வு பெறும் நிலையிலிருந்த பழைய டூரிஸ்ட் பஸ். அதில் இடம் போதாததினால் மிச்சமிருந்த கொசுறு மாணவர்களை ஏற்றிவர ஒரு மஹிந்த்ரா வேனும் விட்டிருந்தார்கள். அதுவும் தாம்பரத்திலிருந்து தான். அந்த வேனில்தான் நான், மகேஷ் ஸ்ரீதேவி இன்னும் சில மாணவர்களும் செல்வோம். அந்த வேனில் ஆரம்பித்தது அவர்கள் காதல் , வழக்கமாக எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஒருநாள் சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள் கைகோர்த்துக்கொண்டு.... புரிந்து விட்டது. கல்லூரி முழுவதும் அவர்களின் காதலைப்பற்றி தெரிந்து விட வீணாவும் மகேஷிடம் ஃபோனில் அதைப்பற்றி விசாரித்ததாக கூறினான். ஆனால் அவள் ஒரு கவலையுடனும், ஏக்கத்துடனும் விசாரித்ததாக கூறினான். என்னால் நம்ப முடியவில்லை. தாம்பரத்திலிருந்து மீட்டர் கேஜ் ட்ரெய்னில் நாங்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவன் பேச்செல்லாம் வீணாவைப் பற்றிதான் இருக்கும். அவள் என்னை காதலிக்கிறாள் போல , நான்தான் அவசரப்பட்டு ஸ்ரீதேவிக்கு ஓக்கே சொல்லி விட்டேன், எங்கள் வீட்டுக்கு ஸ்ரீதேவியை காட்டிலும் வீணாதான் பொருத்தமான மருமகளாய் இருப்பாள் என்றெல்லாம் பேசினான்.  எனக்கெல்லாம் அடுத்தநாள் காலை ரெக்கார்ட் நோட் பொருத்தமாக சப்மிட் செய்ய வேண்டிய எண்ணம் தான் இருக்கும். காதலெல்லாம் எட்டாக்கனி தான் எனக்கு, ஆகவே காதல் புரிபவர்கள் கொஞ்சம் பெருமைக்குரியவர்களாகத்தான் பார்க்கப்பட்டனர். 

முதல் வருடம் மாணவர்களின் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் வண்ணம் சில ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். சில மாணவர்கள் ஜோக் அடித்தனர், சிலர் மிமிக்ரி செய்தனர், சிலர் சினிமா டயலாக்குகளை அப்படியே பேசினர். மகேஷ் முறை வந்ததும் என்னை கைகாண்பித்து இவன் பாடுவான் என சொல்லி விட்டான், உடனே எல்லாரும் பாடு பாடு என்றார்கள், வகுப்பு கொஞ்சம் அமளியானது, நான் கொஞ்சம் தயங்கினேன், என் பார்வை வீணா பக்கம் திரும்பியது அவள் சும்மா பாடு என்பது போல் கண்களாலெயே என்னை கன்வின்ஸ் செய்தாள், அடுத்த நொடி கண் மூடி பாட ஆரம்பித்தேன் 'சந்தோஷ கண்ணீரே....' பாடல் ஒட்டு மொத்த வகுப்பும் அமைதியானது. பாதி பாடலை பாடி நிறுத்தினேன். சில நிமிடங்கள் ரஹ்மான் ஆகி விட்ட உணர்வு. கைதட்டல்கள் எதிரொலித்தன. ஆசிரியர் நன்றாக பாடினாய் என பாராட்டி விட்டு போனார். மணியடித்து இடைவெளி நேரமும் வந்தது. நான் வீணாவை நோக்கி போனேன் அவளும் சிரிப்புடன் எனை நோக்கி இருந்தாள். சட்டென நடுவே ஒரு கை நீண்டது அது வீணாவுக்கு பின்னால் அமர்ந்திருத்த சவீதா, கைகுடு சுப்பு நீ படம் தான் வரைவன்னு நெனச்சேன் பாட்டும் பாடுவியா என ஆச்சர்யமாக கை கொடுத்தாள். வீணா இடை மறித்தாள், அதென்ன சுப்பு அதான் முழு பெயர் சுப்ரமணினு இருக்குல்ல அப்டியே கூப்ட வேண்டியதான என சவீதாவை நோக்கி சொன்னாள். முதல் முறை என் பெயரை முழுதாக அவள் உச்சரிக்க கேட்கிறேன். அது வரை 'ஏய், நீ, வா, போ' தான். பிறகு 'ஏய், நல்லாயிருந்தது' என புன்னகையுடன் கூறி விட்டு சென்றாள். 

மகேஷ் ஸ்ரீதேவி ஜோடி உருவான அதே நேரத்தில் மற்ற எல்லா வகுப்புகளிலும் பல ஜோடிகள் உருவாகி இருந்தனர். தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு ஒன்று முதல் மூன்று மாதங்களே தேவைப்பட்டன. அவர்கள் எல்லோரும் அழகானவர்களாகவே இருந்தனர். சரி மீண்டும் மகேஷுக்கு வருவோம். மகேஷ் அவ்வப்போது கல்லூரிக்கு விடுப்பு எடுப்பது வழக்கம். அப்போது அவனிடமிருக்கும் ஏதோ ஒரு வீணாவின் பொருளை என்னிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்வான். அப்படிதான் ஒரு நாள் என்னிடம் ஒரு நோட்டை கொடுத்தான். காலை நான் மீட்டர் கேஜ் ட்ரெய்னில் செல்லும் வழியில் சென்ட் தாமஸ் மவுன்ட் ஸ்டேஷனில் என்னை பார்த்து குடுத்து விட்டு போனான். ஆனால் இது ஒரு பரிசுப்பொருள் போல மேலே பேப்பர் சுற்றியிருந்தது. எனக்கு சந்தேகம்தான் இருந்தாலும் எதுவும் கேட்காமல் வாங்கிக்கொண்டு போய் விட்டேன். அன்று கல்லூரியில் இடைவெளி நேரத்தில் வீணா கையில் ஒரு ஆடியோ கேஸட், அலைபாயுதே, அதன் அட்டையை வெளியே எடுத்தாள் அது நீளமாக விரிந்தது. மாதவனும் ஷாலினியும் தலைகீழாக முகம் பார்த்து படுத்திருக்கும் ஒரு ஸ்டில், மாதவன் எம்பி குதித்து காலை விரித்திருக்கும் ஒரு ஸ்டில், என வரிசையாக இருந்தது. அவள் உடனிருந்த தோழி யாரு இந்த ஹீரோ என கேட்டாள் . மாதவன் sea hawks ஹிந்தி சீரியல்ல வருவான் என விளக்கிக்கொண்டிருந்தாள். வீணா என கூப்பிட்டு மகேஷ் உன்னிடம் இதை குடுக்க சொன்னான் என குடுத்தேன். அப்டியா என சிரிப்புடன் அதனை வாங்கி தன் பைக்குள் திணித்துக்கொண்டாள். அவள் உற்சாகத்தை கண்டதும் ஒரு வேளை அவன் சொன்னது உண்மைதான் என தோன்றியது. இன்று இரவு அதை படிக்கப்போகிறாள் நாளை விடை தெரியும். 

-- தொடரும்

பகுதி 2 

Thursday, December 12, 2024

நான்காம் பத்து

வாழும் காலத்தின் பாதியை கடந்துவிட்ட நிலையில் தற்போதிருக்கும் உணர்வுகளின் பதிவு/பகிர்வு.

பெரிய மனத்துயரில்லாத நாள் போதுமென தோணுகிறது.

பணியாற்ற பாதி விருப்பமே இருக்கிறது.

தனிமை முன்பைக்காட்டிலும் அதிகம் பிடிக்கிறது.

பரபரப்பான தருணங்கள் எப்போது முடியுமென தோணுகிறது.

காதல் பெரிதாக ஈர்ப்பதில்லை, 90 களில் பார்த்த ஒரு சில படங்களையும், பாடல்களையும் தவிர. 96 கொஞ்சம் ஈர்த்தது. 

காமம் கொஞ்சம் பிடிக்கிறது. 

மது தரும் போதை மறந்தே போய் விட்டது. 

காஃபியும் விடைபெற்றுக் கொண்டது. 

கண்ட கண்ட உணவுகளை உண்ண தோணுவதில்லை, இட்லியும் சாம்பாரும் போதுமென்றிருக்கிறது. 

மிச்சம் மீதி இருக்கும் கெட்ட பழக்கங்களும் மகள் வளர வளர மறைந்தே போய்விடும் போல இருக்கிறது.

உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமும், புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் காலையில் வந்து போகிறது. 

எழுத வேண்டும் என்ற எண்ணம் மாதம் ஒருமுறை தோணுகிறது. 

எழுத ஆரம்பித்தால் மண்டைக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறார் சுஜாதா. 

பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடித்தேடி போகத்தோன்றுகிறது.

பொருள் சேர்க்கும் போட்டியில் விருப்பமில்லாவிடினும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது. 

சம்பாத்தியம் நின்றுபோனால் எப்படி சமாளிக்கப்போகிறோம் எனும் கவலை அவ்வப்போது எழுகிறது. 

சில செலவுகள் அனாவசியமாக தெரிகிறது.

பொறுப்புணர்வு மிகுந்து கொண்டே போகிறது.

பழைய நட்புக்களை சந்திக்கும் தருணங்களை மனம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. 

ரஜினியும், ராஜாவும், ரஹ்மானும், மணிரத்னமும் முன்போல் சிலாகிப்பை தருவதில்லை. ரேவதிக்கு வயதாகி விட்டது. கிரேசி மோகன் மறைந்தே போய்விட்டார்.  ராஜமவுலி கொஞ்சம் சிலிர்ப்பை தருகிறார், காதலல்லாத ஒரு சில மலையாள, தமிழ் படங்களும்.

வேள்பாரிக்கு இணையான புத்தகத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இருபது நிமிடங்களுக்கு மேலிருக்கும் காணொளியை பார்க்கவும், இரண்டு பக்கத்துக்கு மேல் படிக்கவும் பொறுமை இருப்பதில்லை. 

பெண்களை கவரும் விதம் ஏதும் பேசவோ, செய்யவோ தோணுவதில்லை. 

பெண்களின் ஆடையில் புடவை மட்டுமே பிடிக்கிறது.

தலையில் முடியில்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. 

மீன்தொட்டி காண பிடிக்கிறது.

மனைவியுடனான சண்டையை முடிந்த வரை தவிர்த்து விட தோணுகிறது. 

எதார்த்த மில்லாத எதுவும் பிடிப்பதில்லை.

சமூக ஊடகங்களின் வழி நான் எப்படி வாழ்கிறேன் பார் என காட்டிக்கொள்ள தோணுவதில்லை.

அடுத்த தலைமுறையுடன் போட்டிபோட முடியாது என புரிகிறது.

தினமும் ஏதோவொன்றை கற்றுக்கொள்ள தோணுகிறது.

சிறு சிறு வெற்றிகள் தினம் தேவைப்படுகிறது. 

எல்லா தருணத்திலும் நகைச்சுவையை தூவ தோணுகிறது. 

மனரீதியான பாதிப்புகளிலிருந்து விரைவில் வெளிவர தோணுகிறது. 

உடல் ரீதியான பாதிப்புகள் வேண்டாமென்றே இருக்கிறது. 

ஜலதோஷம் கண்டிப்பாக வரும் அழையா விருந்தாளியாய் இருக்கிறது. 

வார்த்தைகள் சுடுகிறது. 

சில உறவுகளை தெரிந்தே இழக்கும் பக்குவம் வந்திருக்கிறது.

சிறந்த ஒரு உரையாடலை சரியான நபருடன் நிகழ்த்த தோணுகிறது.

நேரத்தை இனிமையாக மாற்றும் ஒரு சிலர் போதுமென்றிருக்கிறது. 

கரிசனங்களுக்கு நடுவே எப்போதாவது காதலை தரும் மனைவி. 

சொல்பேச்சை கேட்க மறுக்கும் பருவமெய்தும் மகன். 

இருபது வருடங்களாகியும் காதலியாய் மாற்ற முடியாத தோழி.

என் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் உன்னிடம் பகிர்ந்தே தீருவேன், ஆனால் நீ எல்லை மீறக்கூடாது என கூறி
 பேசிக்கொண்டிருக்கும் சில பெண்கள்.

கிடைக்காதென தெரிந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கனவு தேவதைக்கான தேடல்.

கனவாகவே இருக்கும் கனவு இல்லம். 

எத்தனை செய்தாலும் அடுத்த வேலையை தரத்தயாராயிருக்கும் அலுவலகம். 

ஒரு முறை கூட அதிர்ஷ்டம் அடிக்காத பரிசுக்கூப்பன்.

ஒரு முறை கூட வட்டியை வசூலிக்க தவறாத வங்கிகள். 

தூரமாகவே இருக்கும் நெருங்கிய உறவுகள். 

போராடினால் மட்டுமே கிடைக்கும் வெற்றி. 

உனக்கு எப்போது எதை தர வேண்டும் எதை எடுத்துக்கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என அவ்வப்போது உணர்த்தும் தெய்வம்.

இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கிறது நான்காம் பத்து.