Sunday, January 8, 2012

ஒரு சந்திப்பு - சிநேகிதி Part I

நம் வாழ்க்கையில் நம்மை மிக ஈர்த்த சிலரின் நினைவுகள் நம் நெஞ்சின் ஏதோ ஒரு மூலையில் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அது நம்மை அறியாமல் ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்படவும் செய்கிறது. இப்போது இருக்கும் என் வாழ்க்கைக்கும் 10 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கைக்கும் நேர் தலைகீழான மாற்றம் இருக்கிறது.

10 வருடங்களுக்கு முன்பு என் கல்லூரியில் நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு. அப்போது என் வாழ்வில் அவள் இருந்தாள். எங்களுக்குள் அழகான சிநேகம், சிறந்த புரிதல், நெருக்கமான உரையாடல்கள் என எல்லாமே ரசிக்கும்படி இருந்தது. எங்கள் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நான் முயற்சித்த போது அவள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவள் சென்று விட்டாள். பின்னொரு தருணத்தில் என் உணர்வை அவள் புரிந்து கொண்டாலும் அவள் திருமணத்தை நேரில் பார்க்கும் பக்குவம் எனக்கு அப்போது இல்லை. என்னை அவளிடமிருந்து மெல்ல விலக்கிக்கொண்டேன். என்னை அவள் புரிந்தும் கொண்டாள்.  ஏதோ ஒரு திசையில் என் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த போது என்னை தேடியும் ஒரு காதல் வந்தது. அதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லுமளவிற்கெல்லாம் நான் பெரிய worth இல்லை, உண்மையில் இந்த ஜென்மத்திற்கு இது போதும் எனும் அளவிற்கு அது ஒரு வரம்தான். இப்போது நான் வாழ்வது ஒரு அழகான வாழ்க்கை.  ஒரு அழகான குழந்தை. ஒரு சிறந்த வேலை. வாழ்க்கையின் யதார்த்தம் புரிய ஆரம்பித்த பின்புதான் என் முட்டாள்தனம் புரிந்தது. பிறகு என் தோழியை தேடினேன் எனுமளவிற்கு அவளை மொத்தமாக தொலைத்து விடவில்லை. 

-------->

அவளுடனான என் சந்திப்பு இப்போது நிகழப்போகிறது.

எங்கள் கல்லூரி நண்பர்கள் 10 வருடங்கள் கழித்து ஒரு இடத்தில் சந்திக்க ஏற்பாடு. அதில் அவளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவராய் வந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரிடத்திலும் வாய் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டு இருந்தாலும் கண்கள் வாசலை அவ்வப்போது நோக்கிக்கொண்டேதான் இருந்தது. இதோ இப்போது அவள் வந்து விட்டாள், கால மாற்றத்தின் முதிர்ச்சி அவள் முகத்திலும் தெரிகிறது. ஒரு இல்லத்தரசியாக, ஒரு குழந்தைக்கு தாயாக என எல்லா விதத்திலும் பொருந்தியிருக்கிற அவள் தோற்றம் காண்பதற்க்கரிய பொக்கிஷம் போன்றிருந்தது. ஒவ்வொரு நண்பர்களை கண்டவுடன் விழி உயர்த்தி அவள் காட்டிய expressions அத்தனை அழகாயிருந்தது. ஒவ்வொருவரையும் பார்த்துவிட்டு அவள் நடந்து வர நான் அவளை காணாதது போல் திரும்பி நின்று கொண்டேன். அப்படி செய்வது எனக்கு பிடிக்கும். கல்லூரி நாட்களிலே அவளுக்காக நீண்ட நேரம் காத்திருந்தாலும் அவள் வந்த பிறகு அவளே என்னை வந்து பார்க்கும் படி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பேன் அது போலவே இப்போதும் செய்யத்தோன்றியது.

 என் பின்னால் வந்து என் தோளை தன் விரல் நுனியால் தொட்டவள் அடுத்த நொடி என் முன்னால் புன்னகையுடன் நின்றாள். 

"ஹேய் எப்டியிருக்க, நீயும் வந்திருப்பன்னு நினைக்கல" என்றாள். 

பெரிய reaction ஒன்றும் காட்டவில்லை நான் அது என் வழக்கம்தான். 

"Hmm fine, நானும் உன்கூட படிச்சவன் தானே...." என்றேன்

"Hmm Yeah, அப்புறம் life எப்பிடி போயிட்ருக்கு?" என்றாள் 

"Yeah Going Fine, Meet my Wife " என்று அறிமுகம் தொடங்கி அப்டியே சில விசாரிப்புகள்.

பின் அவள் குழந்தையும் என் குழந்தையும் விளையாட ஆரம்பிக்க என் மனைவி அவர்களை பார்த்துக்கொள்ள எங்களுக்கான space கிடைத்தது போல பேசிக்கொண்டே இருவரும் நடக்க ஆரம்பித்தோம். அவளுடன் பேச ஆரம்பித்தால் எனக்கு தூரம் தெரியாது. நெடுந்தூரம் வந்துவிட்டோம்.

நாங்கள் சென்றது ஒரு அழகான இடம். அங்கே தெரிந்த சில அழகான காட்சிகளை பார்த்தோம். ரசித்தோம். நேரம் இனிமையாக நகர்ந்தது. ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்த அவள் பேச்சில் இப்போது லேசாக ஒரு சோக இழை தெரிந்தது. அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது. அதை புரிந்தவனாய் அவளுடனான என் நெருக்கம் கொஞ்சம் அதிகமாக அவள்  விலக ஆரம்பித்தாள்.

'ஏன் விலகுகிறாய்' என்றேன்.

'அப்படி எல்லாம் இல்லை' என்றாள்.

'பின் ஏன் சட்டென விலகுகிறாய்' என்றேன்?

'நான் செய்வது சரி இல்லை' என்றாள்.

'எனக்கு புரியவில்லை' என்றேன்.

'நான் மீண்டும் தவறு செய்வதாக' கூறினாள்.

'என்ன செய்தேன்' என்றேன்.

'உனக்கே தெரியும்' என்றாள்.

இவ்வளவு வாழ்வியல் மாற்றங்களை இருவருமே கடந்து வந்த பிறகு அவள் மீண்டும் அப்படி நினைப்பாள் என்று நான் எண்ணவில்லை. 

முகத்தை திருப்பிக்கொண்டு பேச ஆரம்பித்தாள். அவள் அப்படி பேசுபவள் அல்ல என்று எனக்கு தெரியும் ஆனால் இன்று அவள் குரலில் லேசான கோபமும் அழுகையும் தெரிந்தது. 

நான் இன்னும் பழைய நினைப்புடனே இருப்பதாக சொன்னாள். என் ஒவ்வொரு அசைவிலும் அது தெரிகின்றது என்றாள். 

அதைக்கேட்ட பிறகு அங்கு நிற்க முடியவில்லை என்னால். 
'சரி, என்னைப்பற்றி இப்போது நீ அப்படி நினைக்கிறாய் என்றால் அது உன் இஷ்டம்' என்று கூறி விட்டு அங்கிருந்து விலகி விட்டேன். ஆனால் மனதின் வலியோ பொறுக்க முடியவில்லை. அழவேண்டும் போலிருந்தது. எப்போதோ செய்த தப்பிற்கு இப்போது தண்டனை கிடைப்பது போலிருந்தது.

அவள் ஏன் அப்படி பேசினாள் என்று மனது திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது. இப்போதும் என்னால் அவளை எப்படி அப்படி நினைக்க முடியும் அவள் ஏன் என்னை அப்படி நினைத்தாள் என புரியவில்லை. மனம் சமாதானமடையவில்லை. ஏனோ அங்கிருந்த பூங்கா இருக்கையில்  அமர்ந்திருந்தேன். மனதுக்குள் பெரிய வலி. அங்கே அவளும் நானும் மட்டும் மற்றபடி அங்கே ஒரு பெரிய அமைதியும். 

சிறிது நேரம் கைகட்டி முகம் திருப்பி அவள் நின்றுகொண்டிருக்க மனதில் வலியுடன் நான் தலை குனித்து அமர்ந்து கொண்டிருந்தேன். என் மனதில் ஒடிக்கொண்டிருக்கும் கேள்விகள் அவளுக்குப்புரிந்திருக்க வேண்டும்.

என் பின்னால் வந்து நின்று என் பெயர் சொல்லி அழைத்தாள். கண்ணோரம் தேங்கி இருந்த நீரை துடைத்து விட்டு அவளை நோக்கி எழுந்து நின்றேன். 

எனக்கு பேச வாய் வரவில்லை. "ஏன் என்னை பார்த்து அப்படி சொன்னாய்?" என்று என் கண்கள் அவளைப்பார்த்து கேட்டன.  

'என்னைப்பற்றிய எல்லா நினைவுகளையும் அழித்து விடு' என்றாள். 'உன்னைப்பற்றி நான் இப்போது அப்படியெல்லாம்  .....' என்று நான் சொல்லி முடிக்கும் முன். 

'இப்போது நீ பார்த்துக்கொண்டிருக்கும் நான் நீ நினைப்பது போல் அல்ல' என்றாள். 'கொஞ்சம் அங்கே பார் என்று' தன் கையை காட்டினாள். 

அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிரச்செய்தது. அங்கே அவள் கணவன் பெண்களுடன் நெருக்கமாய். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் குலுங்கி குலுங்கி அழும் சத்தம் என் காதில் கேட்டது. 

அவளை அப்படி பார்த்த அடுத்த நொடி அழவே ஆரம்பித்து விட்டேன். 'உனக்கா இப்படி நடக்க வேண்டும்' என்று நான் அவளை நெருங்கிய போது 

----------->
அலறியது என் Cell Phone . மறுமுனையில் அவள் 'டேய் இன்னுமா தூங்கிட்டிருக்க? மணி என்ன தெரியுமா?' என்றாள். '8 '   என்றேன். 'சும்மா கனவு காணாம Office கெளம்புற வழிய பாரு' என்றாள். Ok என்று அசடு வழிந்து கொண்டே எழுந்தேன்.

கனவுதான் என புரிந்தாலும் உண்மையாகவே அழுததை போன்ற ஒரு உணர்வு. கல்லூரிக்காலங்களில் ஏதோ காரணங்களுக்காக என் முன்னால் அழுத அவளை அரவணைக்க துடித்த மனம் எப்படியோ அது போன்ற ஒரு தருணத்தை கனவின் மூலமாவது மீண்டும் உருவாக்கி தன் ஆசையை நிறைவேற்றி கொள்கிறது. விந்தையான மனம்!!!
 
"நீ எங்க இருக்க?" என்றேன்

"இப்போதான் office வந்தேன் husband drop பண்ணிட்டு போனார். He is so Caring you know" என்றாள். பின்னொரு காலத்தில் அவருடன் பழகிய போது அது எனக்கும் புரிந்தது. கேடு கேட்ட கனவு எப்படி எல்லாம் வருகிறது என்று தலையில் தட்டிக்கொண்டே குளிக்க சென்றேன்.

*******
பின் குறிப்புகள் 

1. இந்த பதிவில் ----------->இடப்பட்ட பகுதிக்குள் இருப்பது கனவு பாகம்
2. கனவு பாகம் என்பதால் அதில் நிறைய logic மீறல்கள் இருக்கும் கண்டுகொள்ளாதீர்கள் .... ;)
3. இந்த சந்திப்பின் பதிவை அவள்தான் முதலில் படித்தாள்