'சரி.... வாரத்துல ரேண்டு நாள் வா... என்னா?' என அம்மாவும் அதட்டுவாள்.
நான் சிறுவன், மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம். எங்கள் வீட்டு வெளிவாசலில் மூன்று படிகள் இருக்கும், காலை வேளையில் அங்கு நான் அமர்ந்து கொள்வேன், அப்போதிருந்த காலைகளில் ஒரு அழகு இருந்தது, காலைக்கதிரவனின் ஒளியில் ரம்யம் இருந்தது, அமைதி இருந்தது, தெருவில் வாகனங்கள் இல்லை, ஆரவாரம் இல்லை, சில பெரியவர்கள் சைக்கிளில் செல்வார்கள், வீட்டின் எதிரே அம்மா வைத்திருக்கும் பாதி வெட்டப்பட்ட ப்ளாஸ்டிக் குடத்தில் உள்ள கழனி நீரை குடிக்க செந்நிற பசுவும் கன்றுக்குட்டியும் வரும். வாசலில் உட்கார்ந்திருக்கும் என்னிடம் தன் முகத்தை நீட்டும், அதன் நெற்றியை தடவிக்கொடுப்பேன், அது தலையை உயர்த்தி அதன் கழுத்துப்பகுதியில் தடவிக்கொடுக்க சொல்லும், அது போலதான் என்னிடம் அறிமுகமானது அந்த கட்டை வால் நாய், அது ஒரு தெருநாய் அவ்வளவுதான், அது குட்டியாக இருந்த போதே அதன் வால் வெட்டுப்பட்டு விட்டதாக அம்மா கூறுவாள். அந்த குட்டை வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே வரும். தெருநாய் என சொல்ல முடியாத அளவிற்கு புஷ்டியாக இருக்கும். அதன் தலையை தடவி கொடுத்தால் எத்தனை நேரம் வேணாலும் நிற்கும். படியின் ஓரம் வைக்கப்பட்டிருக்கும் தட்டையான கல்லில் அதற்கு வைக்கப்படும் சாப்பாட்டினை மீதமின்றி சாப்பிட்டு விட்டு போகும். சில நேரம் நான் எழுந்திரிக்க நேரமானால் பூட்டப்பட்ட கேட்டின் வெளியே நின்று குலைக்கும். நான் வருவதைப்பார்த்து தன் கட்டை வாலை வேகமாக ஆட்டும். ஆதாயம் தேடாத அன்பு. ஒரு நாள் ட்யூஷன் முடிந்து தெருவில் நான் ட்யூஷன் நண்பர்களுடன் நடந்து வந்த போது ஏதோ ஒரு சண்டை எங்களுக்குள் மூழ அவர்கள் என்னை தாக்க வர, நான் ஓட்டமெடுக்க, அவர்கள் என்னை துரத்த, தெருவின் ஓரம் எங்கோ படுத்திருந்த கட்டை வால் நாய் குரைத்துக்கொண்டே அவர்களை நோக்கி ஓட அவர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுத்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
ஒரு நாள் கக்கூஸ்காரனுக்கு அவன் வேலையை முடித்ததும் எங்கள் வீட்டு வாயில் கதவுக்கும் வெளி கேட்டுக்கும் இடையே உள்ள வராண்டாவில் அவனை உட்கார வைத்து சற்றே காய்ந்த வாழை இலையில் சாப்பாடு போட்டாள் அம்மா. அவனும் கைகளை கழுவிக்கொண்டு வேட்டியை இறக்கி விட்டு சாப்பிட உட்கார்ந்தான். இரண்டு வாய் சாப்பாட்டிருப்பான். நான் அப்போதுதான் வாசற்கதவருகே வந்து நின்று அவன் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை பார்த்து புன்னகைத்து 'இஸ்கூல் போலியா' என்றான். 'இன்னிக்கி வீவு' என்றேன். 'ஓ ஹோ' என்றவாறே அடுத்த வாய் எடுத்து வைத்தான். அம்மா எதோ எடுக்க அடுப்பறைக்குள் சென்று விட்டாள். அப்போது கேட்டுக்கு வெளியே கட்டை வால் நாய் வந்தது, என்னைப்பார்த்துதும் வாலை ஆட்டிக்கொண்டு கேட்டின் மேல் தன் இரு கால்களையும் தூக்கி தூக்கி வைத்தது. அதைப்பார்த்து நானும் வழக்கமான தலை தடவலுக்காக இறங்கி சென்று கேட்டை திறந்தேன். அதன் பிறகு கனப்பொழுதில் அங்கு நிகழ்ந்த சம்பவம் இன்று வரை என் மனதில் ஆறாத வடு.
கேட்டை திறந்ததும் அந்த நாய் என்னை கடந்து பாய்ந்து சென்று அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையில் வாய் வைத்து சாப்பிட ஆரம்பித்தது. உள்ளேயிருந்து பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த என் அம்மா 'ஏன்டா கேட்டை திறந்து விட்டே' என என் முதுகிலே ஒரு அடி போட்டாள். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என எனக்கு புரிய சிறிது நேரமானது. கக்கூஸ்காரன் தோய்ந்த முகத்துடன் தன் கைகளை உதறிவிட்டு அப்படியே எழுந்தான். 'புள்ளைய அடிக்காதமா.... தெரியாம பண்ணிடுச்சு' என சொன்னான். நாயை விரட்டப்போன அம்மாவையும் 'விடும்மா சாப்ட்டு போட்டும்' என்றான். அவனுக்காக சொம்பில் வைக்கப்பட்டிருந்த நீரை மட்டும் எடுத்துக் கொண்டு கையை கழுவிக்கொண்டு அதையே மடக் மடக்கென குடித்து விட்டு அங்கிருந்து புறப்பட தயாரானான். அம்மா 'இந்நேரம் பார்த்து வீட்டில் வேறு சாப்பாடும் இல்லையே' என்றாள், அதற்கும் அவன் 'பரவாலேது மா' என்று சொல்லி விட்டு போய் விட்டான். அன்று அங்கு நான் காரணம் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டதே என கனத்த மனதுடன் இருந்தேன்.
சிலநாட்கள் சென்றது. ஒருநாள் வழக்கம் போல பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய என்னிடம் செய்தி கூற காத்திருந்தவளாய் உரைத்தாள் அம்மா. 'கக்கூஸ்காரன் செத்துப்போட்டானாம், தெருவுல கிடந்தானாம். ஊர்ப்பெரியவங்கள்ளாம் பாத்து எடுத்து அடக்கம் பண்ணாங்களாம். ஆச்சர்யமோ அதிசயமோ தெர்ல அன்னிக்கே கட்டை வால் நாயும் செத்துப்போச்சாம்.'
மரணம் என்பது தீர்க்க முடியா புதிர், இறந்தவர்கள் என்னவாகிறார்கள்? என்னைப் பொருத்தவரை இனி அவர்களின் இயக்கத்தை பார்க்க முடியாது அவ்வளவுதான். ஒருவேளை விண்ணுலகம் என ஒன்று இருக்குமானால் அங்கே அந்த நாய் அன்று நடந்த சம்பவத்திற்காக அவனிடம் மன்னிப்பு கோரியிருக்கலாம், அவன் அதன் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கலாம். கவலையுடன் வாயிற்கதவை நோக்கினேன் அங்கே கன்றுக்குட்டியுடன் பசு.
- சுதர்ஷினி