Tuesday, August 22, 2023

சுவாமிநாதன் எனும் மணிகண்டன்

அவன் பெயர் சுவாமிநாதன் வீட்டிலும் அக்கம்பத்தினரும் கூப்பிடும் பெயர் மணிகண்டன். ஐயர் வீட்டுப்பையன் என்னைவிட ஒரு வயது மூத்தவன். சற்றே மெலிந்த உருவம், சைடு வகிடு எடுத்து வாரிய தலை, கருப்பு ப்ரேம் போட்ட கண்ணாடி, அளவெடுத்து தைத்த சட்டை பேண்ட், கையில் கருப்பு கயிறு, ரப்பர் செருப்பு என வசூல்ராஜா படத்தில் வரும் சுவாமிநாதன் போலவே தான் இருந்தான், முகத்தில் அப்படியொரு படிப்புக்களை இருக்கும். என் வீடு 4வது தெரு அவன் வீடு 4வது குறுக்கு தெரு எங்கள் இரு வீட்டுக்குமிடையில் 4 வீடுகள் இருக்கலாம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மணிகண்டனுக்கு அப்பா கிடையாது. சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாய்ந்து விழுந்தவர் அப்படியே போய் விட்டார் என அக்கம் பக்கத்தினர் கூற கேட்டதுன்டு. 

எங்கள் இரு வீடுகளுக்கும் இடையில் இருந்த வீட்டில் இருப்பவள் தான் சூரியா எங்கள் இருவரையும் விட மூத்தவள். அண்டை வீடாக இருந்தாலும் கிட்டத்தட்ட அரை சொந்தக்காரி. திறமைசாலிதான் ஆனால் ஒரே மகள் என்பதால் பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததுமே வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்க சம்மதித்த வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரை கல்யாணம் செய்து கொடுத்து அவள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் அவளைப்பெற்றோர். வீட்டிலேயே தங்கிவிட்டவளுக்கு தினம் பேச அக்கம்பக்கத்து வீட்டுக்கதைகள் நிறைய இருக்கும். எங்கள் வீட்டுத்திண்னையில் தினம் வந்து அவள் பிள்ளைக்கு சோறூட்டிக்கொண்டே நகர்க்கதை பேசி விட்டு போவாள். அவளின் சென்னை பாஷையில் ஒரு பாமரத்தனமும் இருக்கும் நையாண்டித்தனமும் இருக்கும். அதில் அவ்வப்போது மணிகண்டன் கதையுமிருக்கும். அவனைப்பற்றி பெருமையாக பேசுவது போலிருந்தாலும்

 'யப்பா அவன மாதிரிலாம் நம்மளால படிக்க முடியாதுப்பா' என்று கிண்டல் தொனியில் சொல்வாள்.  

மணிகண்டனுக்கு ஒரு அக்கா இருந்தாள், பெயர் தீபா, மிக அழகான தோற்றம் உடையவள். பார்க்கும்போதே ஒரு மரியாதை வருகின்ற களை பொருந்திய முகம் அவளுடையது, தெருவில் என் வயதொத்த எல்லோராலும் 'தீபாக்கா' என மரியாதையுடன் குறிப்பிடப்பட்டவள். அம்மா ஸ்கூல் டீச்சர் அதில் வரும் வருமானமும், கணவரின் பென்சன் பணமும், 2 வீட்டு வாடகையும் அவர்கள் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்திருக்கும்.

மணிகண்டனை பற்றி சூரியா கூறும் கதைகள் பெரும்பாலும் அவன் இரவு எவ்வளவு விழித்துப்படிக்கிறான். அதிகாலை எவ்வளவு சீக்கிரம் எழுந்து படிக்கிறான், எவ்வளவு மார்க் எடுத்தான், என்ன ரேங்க் எடுத்தான் என்பது  பற்றி தான் இருக்கும்.

'பரீட்சை டைம்ல பாக்கனுமே, எக்சாமுக்கு 15 நிமிஷம் முன்னாடி வரைக்கும் படிச்சிட்டு அப்றம் விருட்டு விருட்டுன்னு ஸ்கூலுக்கு ஓடுவான்' என்பாள். நானும் அதை சில நாட்கள் பார்த்திருக்கிறேன்.

எங்கள் தெருவில் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்குபவன் எனும் பெயர் எனக்குன்டு ஆனால் அது எப்போதுமே மணிகண்டனுக்கு அடுத்த இடம்தான். எப்போதும் என்னை விட ஒரு படி மேலே தான் இருப்பான். அவன் இடத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் எப்போதும் இருக்கும்.

பத்தாம் வகுப்பில் மணிகண்டன் எடுத்த மதிப்பெண்கள் 450 அதை எப்படியும் நானும் எடுத்து விட வேண்டும் என முயற்சி செய்து என்னால் எடுக்க முடிந்தது 435 தான். பிறகு 12ம் வகுப்பில் சொல்லவே வேண்டாம் அவன் 1000 க்கு மேல் நான் 875 தான். அப்போதும் என்னால் எட்டிப்பிடிக்காத இடத்தில் இருந்தான். தேர்வறையில் ஒரு பென்ச்சில் பனிரென்டாம் வகுப்பு மாணவன் ஒருபுறமும் பதினோராம் வகுப்பு மாணவன் ஒருபுறமும் அமர்வது போல் செய்திருந்தார்கள். அப்போது மணிகண்டன் ஒரு புறமும் நான் மறுபுறமும் அமர்வது போல் ஒருமுறை வந்தது. அப்போது நான் படிக்க ரொம்பவே சிரமப்பட்டேன், பாடங்கள் புரியாததாலும் வேறுசில பருவவயது கடமைகள் சிலவற்றை செய்ய வேண்டி இருந்ததாலும் படிப்பு சற்றே தூரமானது எனக்கு. அப்போது தேர்வறையில் பக்கத்திலிருந்த மணிகண்டனிடம் உதவி கேட்டு 1 மார்க் 2 மார்க் கேள்விகளுக்கு பதில் எழுதினேன். போன வாரம் படித்ததை கூட இந்த வாரம் நினைவு கூறுவது சிரமம் எனக்கு ஆனால் போன வருடம் படித்ததை இப்போதும் நினைவு கூற முடிகிறதென்றால் அவன் நினைவாற்றல் அபாரமானதுதான். அவனை பிடிக்க நினைப்பது சிரமம் தான் என அப்போது புரிய ஆரம்பித்தது. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம் விடவில்லை.

பனிரென்டாம் வகுப்பு முடிந்ததும் மணிகண்டன் அவன் வாங்கிய மார்க்குக்கு நல்லவொரு இன்சினீயரிங் காலேஜில் சேர்ந்தான், நான் வாங்கிய மார்க்குக்கு பேருக்கு ஒரு இன்சினீயரிங் காலேஜில் சேர்ந்தேன் அதுவும் பணம் கட்டி. அப்போது வரை மணிகண்டன் அந்த வீட்டில்தான் இருந்தான். தீபாக்காவுக்கு கல்யாணம் முடிந்து சென்று விட்டாள். இப்போது அம்மாவும் மகனும் வாடகைக்காரர்களும்தான் அந்த வீட்டில். மணிகண்டன் அம்மாவுடன் எப்போதாவது சண்டை போடுவானாம்.

'அன்னைக்கு அப்டிதான் கோவிச்சுகிட்டு அவங்க வீட்டு வெளில பாத்ரூம் தளத்துக்கும் மாடிப்படிக்கும் கீழ ஒரு பொந்து மாதிரி இருக்குமே அங்க போய் ஏறி ஒக்காந்துக்கிட்டானாம். அவங்க அம்மா அரை நாள் தேடிட்ருக்காங்களாம். வரவே இல்லையாம். எப்டி கோபப்பட்றான் பாத்தியா' என சொல்லி சிரித்து விட்டு சென்றாள் சூரியா

எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு குடும்பம் பின் மணிகண்டன் வீட்டில் வாடகைக்கு குடியேறியது. அவர்களுடனான பழக்கம் காரணமாக அவர்கள் வீட்டிற்கு நான் அவ்வப்போது போய் வருவதுண்டு. அப்போது ஒருநாள் அவர்கள் வீட்டில் யாரோ கொடுத்தார்கள் என மைக், ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர் எல்லாம் வைத்து அவரவர்க்கு தெரிந்த பாடல்களை பாடி சிரிந்துக்கொண்டிருந்தோம், அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த மணிகண்டன் அம்மாவை பார்த்ததும் ஹவுஸ் ஓனராச்சே திட்டப் போகிறார்கள் என நினைத்தோம், ஆனால் பவ்யமாக வந்து மைக்கை வாங்கி 'திருவிளக்கே, திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே.....' என பக்தி பாடல் ஒன்றை பாடி மைக்கை கொடுத்து விட்டு போனார். நான் மணிகண்டன் அம்மாவை கடைசியாக பார்த்தது அன்றுதான். அதன் பிறகு சில நாட்களிலேயே 'மணிகண்டன் அம்மாக்கு உடம்பு சரியில்லையாம், ஆஸ்பத்திரியில் சேத்து ஒரு வாரம் ஆச்சாம்' என்றாள் சூரியா பின்பு ஒரு நாள் 'அவங்க அம்மா இறந்துட்டாங்களாம், தீபாக்கா வீட்லயே வச்சு எல்லாம் செஞ்சிட்டாங்களாம்' என சொல்லிச்சென்றாள். மணிகண்டனும் அவன் அக்கா வீட்டிலேயே தங்கிவிட்டான். அவன் இருந்த வீடும் வாடகைக்கு விடப்பட்டது.

என் கல்லூரி வாழ்க்கை முடிகிறது, வேலைக்கு முயற்சிக்க ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியாக வேலைக்காக என்ட்ரன்ஸ் எக்சாம் எழுத முயற்சி செய்த சமயம். முதல் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதியது இன்ஃபோசிஸ் கம்பெனிக்காக ஆரம்ப சம்பளமே 15000 ரூபாய் என்றார்கள். நான் பாஸ் ஆகவில்லை, அப்போதிலிருந்தே இன்ஃபோசிஸ் ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது. எப்படியாவது அந்த கம்பெனியில் வேலைக்கு சேர வேண்டும் என ஆசை இருந்தது. 

'இன்ஃபோசிஸா அங்கதான் மணிகண்டன் வேலை பாக்றானான்டா, படிச்சு முடிச்சதுமே கேம்பஸ்லயே செலக்ட் ஆயிட்டானாம்' என்றாள் சூரியா. மீண்டும் ஒரு முறை நான் போக விரும்பிய ஆனால் போக முடியாத இடத்திற்கு போய்விட்டான். அதன் பிறகு ஒரு நாள் அவர்கள் வீட்டை விற்கும் விஷயமாக அங்கு வந்திருந்தான் பல வருடங்கள் கழித்து அப்போதுதான் அவனை பார்த்தேன். வைட் கலர் ரவுண்ட் நெக் டீசர்ட், ஜீன்ஸ், ரீபோக் ஷூ, ப்ரேம்லெஸ் கண்ணாடி என ஆளே மாறிப்போய் பக்கா சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கான அத்தனை அடையாளங்களும் கொண்டிருந்தான். கையில் கருப்பு கயிறு மட்டும் மாறவில்லை.

'வீடு இனிமே வேனாம் சேல் பண்ணிடலாம்னு இருக்கேன்' என்றான். 

இன்ஃபோசிஸ் முயற்சி பண்ணேன் கிடைக்கல என்றேன். 

'சி.வி' அனுப்பி விடு என எல்லோரும் சொல்லும் சம்பிரதாயத்தை அவனும் சொல்லி சென்றான். அவனை பார்த்தது அன்றே கடைசி. பின் காலங்கள் உருண்டோடியது. நானும் முட்டி மோதி ஏதேதோ கம்பெனிகளில் வேலை செய்து பின் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே குடும்பத்துடன் இருந்து விட்டேன். வருடங்கள் உருண்டோடின நானும் என் நாற்பதை எட்டியிருந்தேன். மணிகண்டன் இன்னும் எத்தனை உயரங்களை அடைந்தான் என வெகு காலமாக தெரியாமலே இருந்தது எனக்கு. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் லீவில் வீட்டுக்கு செல்வேன். இம்முறை சென்றபோது சூரியா எனை பார்க்க வந்திருந்தாள். 

'நல்லாருக்கியாடா, எப்ப வந்த' என நல விசாரிப்புகளுக்கு பின்னால் சொன்னாள் 

'மணிகண்டன் செத்து போய்ட்டானான்டா, ஹார்ட்டட்டாக்காம்.....'

மீண்டும் என்னால் போக முடியாத இடத்திற்கு போய்விட்டான் ஆனால் இம்முறை நான் போக விரும்பாத இடம்.


- சுதர்ஷினி 

Sunday, August 20, 2023

நானும் அவள்களும்

என் நினைவு தெரிந்து என் எட்டு வயதிலிருந்தே இவ்உணர்வு கொண்டிருக்கிறேன். எதிர் பாலினம் என்பது எப்போதுமே ஒரு தீராப்புதிர்தான். அது நம்மை ஈர்க்கும், மயக்கும், நெருங்கும், விலகும், மகிழ்விக்கும், வலி கொடுக்கும் , தாங்கும், தள்ளும், தவிக்கும், தவிர்க்கும் ஆனால் ஏதோஒரு வகையில் உடனேயே  பயனிக்கும். இப்படி என் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களின் தொகுப்பாய் இப்பதிவு.

ஒரு பெண்ணால் நேசிக்கப்படுவோம் என்ற எண்ணம் என்னுள் என்றுமே வந்ததில்லை காரணம் என்னுருவம் என்ற எண்ணம். ஒரு வகுப்பு என எடுத்துக்கொண்டால் அதில் உள்ளதிலேயே சிறிய உருவம் எனதாகத்தானிருக்கும். சிரித்தாலும் சரியில்லாத பல்வரிசை பல்லிளித்து விடும். என்னுடனிருக்கும் யாரும் அழகாய் தெரிந்து விடுவார்கள். இப்படி பல அரண்கள் என்னைச் சுற்றி இருப்பதாய் எப்போதும் உணரும் நான். ஆனால் இவை ஒரு குறையுமில்லை நம்மை நெருங்க நினைக்கும் பெண்ணுக்கு இவை ஒரு பொருட்டுமில்லை என எனக்கு உணர்வித்த (நிஜ) தருணங்களே இவை.

இங்கே உக்காந்துக்கோ என நகர்ந்து அவள் அருகில்  இடம் தந்த முதல் அவள்.

ஓடி வந்து மூச்சு வாங்கியபோது தன் தண்ணீர் குவளையை நீட்டிய அவள்.

மழைச்சாரல் தொடங்கிய போது தன் குடைக்குள் வரச்சொல்லியவள்.

மழையில் நனைவோம் எதற்கு குடை என்ற அவள்

கோவிலிலிருந்து வெளிவந்து இந்தா எடுத்துக்கோ என விபூதிக்கரம் நீட்டியவள்

இருட்டி விட்டது என்னை என் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுறியா என கேட்டு, சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையாய் என்னை உணர வைத்தவள்.

போகிற போக்கில் என் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து தன் வாயில் போட்டவள்.

என் ஏட்டில் அவள் பெயரை எழுதி விட்டு போனவள்

போகும்போது எனை கூட்டிப்போ என்றவள்

ரொம்ப வழியிறான் என என் நண்பனை பற்றி என்னிடமே கூறியவள். அப்ப நான் என கேட்டதும் ச்ச... ச்ச... என தீர்கமாய் மறுத்தவள்.

முதல் முறை புடவை கட்டியிருக்கிறேன் எப்படி இருக்கிறது என கண்ணாலேயே கேட்டவள், என்னையும் கண்களாலேயே பதில் சொல்ல வைத்தவள், என் பதில் புரிந்ததாய் புன்னகையுடன் தலை குனிந்தவள்.

காலதாமதாய் நான் வருவதறியாது வகுப்பினுள்ளிலும் வாசலிலும் எனை தேடியவள்.

சுற்றி தோழிகளிருந்தும் தனை அறியாமலே எனை நோக்கிக்கொண்டிருந்தவள். 

என்னிடம் பேச என் நண்பர்கள் மூலம் முற்சித்தவள்.

எதேச்சையான சாலை சந்திப்பை, பேரூந்து, ரயில் பயணங்களை மீத தூரமறியாத அளவு தன் அழகு உரையாடலால் மாற்றியவள்

ஜிமிக்கி கம்மல் எனக்கு பிடிக்குமென கூற அடுத்த  நாளே அதை அனிந்து வந்து கூந்தல் ஒதுக்கி காட்டியள்.

நான் நினைத்த மாதிரியே நீ இருக்கிறாய் என கூறியவள்.

நான் நினைத்து போல் அல்ல நீ என கூறியவள்.

அங்காடியில் நான் எடுக்க நினைத்து தொட்ட பொருளை அதே நேரத்தில் தொட்டவள்.

என் கோபத்தினை அவள் மீது கொண்ட அக்கறையாய் பணிந்து ஏற்றுக்கொண்டவள்

என் கண்ணீரின் காரணமறிய எனை தேடி வந்தவள்.

தன் கண்ணீரை என் முன் மறைத்தவள்.

பிரியும் தருணம் வந்ததும் மறைக்க முடியாமல் உடைந்தழுதவள்

உன் அருகாமை மட்டுமே போதும் வேறெதுவும் உன்னிடமிருந்து வேண்டாமென்றவள்.

சாய்ந்தழ உன் தோள் வேண்டும் என்றவள்

துவண்டு விடாதே மீண்டும் எழு என்றவள்

தன் துப்பட்டாவை தெரிந்தே என் முகத்தில் பறக்க விட்டவள்

பிறந்தநாள் வாழ்த்து எதிர்பாராதவள், வாழ்த்தினால் உள்ளுக்குள் மகிழ்பவள்.

அரும்பு மீசை மழித்ததற்காய் கோபித்துக்கொண்டவள்

சாலை கடக்கையில் அவளறியாமலே என் கரம் பற்றியவள்

நான் ஜெயிக்க வேண்டுமென பிரார்த்தித்தவள்

என் வெற்றிகளை கொண்டாடியவள்

என் தோல்விகளை ஏற்றுக்கொள்ளாதவள்

இனி நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றவள்

ஏன் முன்பே சொல்லவில்லை என காலம் கடந்து கேட்டவள்

காலம் கடந்தால் என்ன பிள்ளைகள் இருந்தால் என்ன காதலிக்கலாமே அதனால் என்ன என்றவள்

என் சுமாரான நகைச்சுவைக்கும் விழுந்து புரண்டு சிரித்தவள்

எனை சிரிக்க வைத்தவன் நீ என்றவள்

எனை அழ வைத்துவிடாதே என்றவள்

எனக்கு பிடித்தாற்போல் இருக்க முயற்சித்தவள்

அவளுக்கு பிடித்தாற்போல் இருக்க வற்புறுத்தாதவள் 

நீ நீயாகவே இரு என்றவள்

உன் நினைவாக இது என்னுடனிருக்கட்டும் என என்னுடைய ஏதோ ஒன்றை எடுத்துச்சென்றவள்

இவையனைத்தும் எனக்கு உணர்த்தியது ஒன்றுதான், உருவம் மீறி உள்ளழகு வெளிப்படும் போது நாம் ரசிக்கப்படுவோம். காதல் துளிர்க்கும் தருணங்கள் இவையெனில் எனக்குமுன்டு பல காதல்கள். வாழ்வு என்பது கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளீட்டுவதற்கு  மட்டுமல்ல அழகான நினைவுகளை சேர்ப்பதற்கும்தான். தொடர்ந்து சேர்ப்போம்.