Monday, September 8, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 15 - பிரிவோம் சந்திப்போம்

சற்று நேரம் யோசித்த பின் 'சரி நடந்தது நடந்து போச்சு, இனி நாம காலேஜ்ல பேசிக்க வேணாம், வீக்கென்ட்ல போன்ல மட்டும் பேசிக்கலாம்.' என்றாள்.

'இது சரியா வருமா?' என்றேன்.

'அது தெரியல, ஆனா இப்போதைக்கு இதான் நல்லதுன்னு தோனுது' என்றாள்.

'சரி, நீ எப்படி சொல்றியோ அப்படியே இருக்கட்டும் ' என்றேன்.

'கொஞ்ச நாள்ல எல்லாரும் இதை எல்லாம் மறந்திடுவாங்கடா, அவங்களுக்கு வேற ஏதாவது ஹாட் டாப்பிக் கிடைச்சிடும், நம்மள மறந்திடுவாங்க, அப்றம் நாம பழைய மாதிரி பேசிக்கலாம்' என்றாள்.

நாங்கள் முடிவு செய்ததை போல அந்த வாரம் முழுதும் கல்லூரியில் பேசிக்கொள்ளவே இல்லை. இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை. தனித்தனியாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த வாரத்தை மிக கஷ்டப்பட்டுதான் நகர்த்தினேன். வெள்ளிக்கிழமையும் வந்தது. அன்று மாலை கிளம்பி வீட்டுக்கும் சென்று விட்டேன். சனிக்கிழமை காலை நான் எழுந்திருக்கும் முன்னரே டெலிஃபோன் ஒலித்தது. படுக்கையிலிருந்து பாய்ந்து சென்று எடுத்தேன் அவளாகத்தான் இருக்குமென்று. அவளேதான். அடக்கி வைத்திருந்த காத்திருப்பை அவிழ்த்து விட்டதை போல கலகலவென இருந்தது அவள் பேச்சு. அந்த வாரம் முழுக்க நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டோம். அந்த அழைப்பு எத்தனை மணிநேரம் தொடர்ந்தது என தெரியாது, இடையில் சாப்பிட மட்டும் சென்று பின் மீண்டும் தொடர்ந்தது. வீட்டில் என்னை கடந்து செல்லும் அம்மாவும் அப்பாவும் ஒரு சந்தேகப்பார்வை வீசாமல் இல்லை. அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவும் இல்லை. அன்று அவ்வளவு நேரம் பேசி முடித்த பிறகும் பேச இன்னும் ஒரு சில விஷயங்கள் மிச்சமிருப்பதை போல தோன்றியது. இந்த உணர்வுகளெல்லாம் பின்னாளில் பாடல் வரிகளாக வருமென்று தோன்றவில்லை. சில வாரங்கள் இப்படியேதான் தொடர்ந்தது. 

அடுத்த செமஸ்டர் தேர்வு வந்தது. இம்முறை ஏதோவொன்று என்னை அதீதம் உழைக்க வைத்தது. நன்றாகவே எல்லா தேர்வுகளையும் எழுதினேன். கடந்த சில முறை முதல் மார்க் வாங்கிய சிவகாமியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் மார்க் வாங்கி விட்டேன். மறுபடியும் பாராட்டுக்கள், வாத்தியார்களின்‌ கைகுலுக்கல்கள். கல்லூரி விழாவில் பாராட்டு சான்றிதழ் வாங்குதல் என இருந்தபோது என் மீதான எல்லோருடைய பிம்பமும் மீண்டும் மாற ஆரம்பித்து. அந்த கடித சம்பவத்தின் போது ஏளனமாக பார்த்த சில சீனியர்களும் இப்போது எதுவுமே சொல்ல வழியின்றி என்னை கடந்து சென்றனர். அவர்கள் முன் கொஞ்சம் கெத்தாகவே நடந்து சென்றேன். இந்த சம்பவத்தின் மூலம் அப்போது நான் உணர்ந்து கொண்டது ஒன்றுதான், நம் அந்தரங்க உணர்வுகளை வைத்து நம்மை கேலியும் கிண்டலும் செய்பவர்களில் வாயை மூட வேண்டுமானால் அவர்கள் முன் நம்மை நிரூபிக்க வேண்டும், அவர்களால் முடியாததை நாம் செய்து காட்ட வேண்டும். அப்போதுதான் நம் உணர்வுகளும் மதிக்கப்படும். இம்முறை நான் அதை செய்தது அவளுக்காக, ஆனால் அது அவளுக்கே தெரியாது. 

வீணாவும் நானும் எந்தவித முன்முடிவும் இல்லாமல் எதார்த்தமாகவே கல்லூரிக்குள் மீண்டும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். ஒருநாள் மாலை பேசிக்கொண்டிருந்த போது யதேச்சையாக 'இன்று நாம் கோவிலுக்கு போகலாமா?' என கேட்டேன். 'ஓ போலாமே....' என்றாள். சென்ற முறை நண்பர்களுடன் சென்ற போது அவளுடன் பேசமுடியாமல் விட்ட குறையை தீர்க்கத்தான் இது. இருவரும் கல்லூரியிலிருந்து பஸ் ஏறி வந்து அவரவர் வீட்டுக்கு சென்று பையை வைத்து விட்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். கோவிலுக்குள் நுழைந்தோம். இருவருக்குமே பெரிய பக்தி எல்லாம் கிடையாது. கோவிலை சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்து விட்டு வெளியே அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வலம் வந்து கொண்டிருந்த மயிலின் அழகை ரசித்தோம், சில குரங்குகளை கண்டு நகர்ந்தோம், அகல் விளக்கு ஏற்றினோம். திரும்பி அமர்ந்திருக்கும் ஒரு சாமி சிலையின் முன் விரல் சொடுக்கினோம். பொரி வாங்கி தெப்பக்குள மீன்களுக்கு இரையளித்தோம், மாலையிருள் சூழ ஆரம்பித்திருந்தது. இருவரும் வெளியே வந்தபோது சில்லென காற்று வீச ஆரம்பித்திருந்தது. 

'நீ என் ரூமுக்கு வந்ததில்லல்ல, வாயேன் இன்னைக்கு' என்றாள்.

'ஓ வரேனே....' என்றேன் சற்றும் யோசிக்காமல்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த போது நேரம் நன்றாகவே கருத்திருந்தது. தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. கூட நடந்து வந்தவள் கைகளை கட்டிக்கொண்டு ஒரு கணம் நின்றாள். கண்களை மூடி தன் முகத்தை மேல் நோக்கி உயர்த்தினாள். நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க மேலே இருந்து வந்த ஒரு நீர்த்துளி அவள் நெத்தியில் பட்டு தெறித்தது. நான் யோசிப்பதற்குள் அடுத்தடுத்த மழைத்துளிகள் எங்கள் மீது விழ ஆரம்பித்தன. 

'ஹேய்... மழை வந்துடுச்சு.... குடை வேற எடுத்துட்டு வரலியே... ' என்றேன்.

'குடையா... அது எதுக்குடா.... மழைல நனையுறது எவ்ளோ நல்லாருக்கும் தெரியுமா....' என்றவள் தன் இரு கைகளையும் விரித்தவாறே என்னை கடந்து முன் சென்றாள். அவளின் துப்பட்டா அவளின் தோளிலிருந்து முழங்கை வரை பரவியிருந்தது. அது முழுதும் நனைந்து நுனியில் சொட்டிக்கொண்டிருந்தது. கைகள் விரிந்தவாறே இருக்க நனைந்து கொண்டே ஒரு சுற்று சுழன்றாள். தெருவிளக்கின் ஒளி வீச்சில் மழைத்துளிகள் வீழ்வது தெளிவாக தெரிந்தது, இறங்கி வந்த மழைத்துளிகள் அவள் மீது பட்டு வழிந்தோடி தரையில் தஞ்சமடைந்தது. இதையெல்லாம் நனைந்தவாறே நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். அதுவரை மழை வந்தாலே நனைந்து விடாமல் இருக்க ஒதுங்குமிடம் தேடி ஓடிய எனக்கு முதல் முறை நின்று நனைய தோன்றியது. அந்த மழை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் எங்களை முக்கால்வாசி நனைத்திருந்தது.‌ அவள் இவ்வளவு நேரம் நனைந்து கொண்டிருந்தது அவள் வீட்டுக்கு முன்னால் தான் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. 'இதான் நாங்க தங்கியிருக்கும் வீடு... உள்ள வா' என கூட்டிச்சென்றாள். மூன்று மாடி வீட்டில் மூன்றாவது மாடியில் இவர்களின் அறை. உள்ளே ஈரமாக சென்றவளை கண்டதும் துண்டை எடுத்துக்கொண்டு வந்தாள் சுனிதா. பின்னால் நான் இருந்ததை சிறிது நேரம் கழித்து தான் கவனித்தாள். 'சுப்ரமணி நீயா.... வா வா.... வெல்கம் டு அவர் ரூம்.... அடிப்பாவி நீ நனைஞ்சதுமில்லாம இவனையும் சேத்து நனைச்சிட்டியா.... மொத வாட்டி கூட்டிட்டு வர இப்டியா நனைய விட்டு கூட்டிட்டு வருவ....' என்று எனக்கொரு துண்டை எடுத்து வர‌ போனாள் சுனிதா. அவளின் எல்லா பேச்சுக்கும் குறும்புத்தனமான சிரிப்பு மட்டும் தான் பதிலாய் இருந்தது வீணாவிடம். அவள் அறையிலிருந்த மற்ற இரண்டு பெண்களையும் சந்தித்து விட்டு பரஸ்பரங்கள் விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வீக்கென்ட் போன் கால்களில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் வந்தது. அதில் கல்லூரிக்குள் நிகழ்ந்த பல காதல்களும் அடக்கம். அவனும் அவளும் என பல ஜோடிகளைப்பற்றி பேசினோம். 

'எப்படி எந்த நம்பிக்கையில் இவர்களெல்லாம் காதலிக்கிறார்கள், அதுக்கும் ஒரு தைரியம் வேணும்ல' என்றாள்.

'அது தோணும், தனக்கான ஒருவரை கண்டு விட்டால் காதல் தானாகவே மலர்ந்து விடும்' என்றேன்.

'உனக்கான ஒருவன் வந்தால் நீ காதலிக்க மாட்டாயா?' என்றேன்.‌ உண்மையில் காதலைப்பற்றி அவள் பார்வை என்ன என தெரிந்து கொள்ளவே கேட்டேன்.

'ஐயோ! நானா.... வாய்பே இல்ல, எங்கப்பா எந்தா மோளே ன்னாலே போய் கால்ல விழுந்துடுவேன். என் முத்தஷி (பாட்டி) லாம் ஒரு பார்வை பாத்தாலே போதும், ஓடி போய் ஒளிஞ்சிடுவேன்' என்றாள் 

அவளின் மனநிலை ஒருவாறு புரிந்தது. இங்கே காதலிப்பவர்கள் எல்லோரும் தங்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை தன் துணையிடம் எதிர்பார்க்கிறார்கள். ஒரு துணைக்கான தேவை அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அது தன் தனிமையை மறப்பதற்காய் இருக்கலாம், எல்லாவற்றையும் மனம் விட்டு பேசுவதற்காய் இருக்கலாம், ஒரு அரவணைப்புக்காக இருக்கலாம் , வெறுமனே நான்கு பேர் நம்மை திரும்பிப்பார்க்க வேண்டும் என்பதற்காய் கூட இருக்கலாம். அதன் மூலம் தங்களுக்கோர் புதிய மகிழ்ச்சி கிடைப்பதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் எந்த தேவையும் வீணாவுக்கு இல்லை. அவள் இயல்பிலேயே மகிழ்ச்சியாய் இருக்கிறாள். அவள் குடும்பம் அவளுக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் நன்றாகவே தந்துகொண்டிருக்கிறது, யாரிடம் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள், பழகிக்கொள், எங்களுக்கு தெரியும் நீ எங்களை தாண்டி எங்கும் செல்ல மாட்டாய் என நம்பிக்கை மிகுந்த சுதந்திரத்தை அளித்திருந்தது. அதனாலேயே அவள் இத்தனை நட்பு பாராட்டுகிறாள். தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மிக இயல்பாக பார்க்கிறாள், அவளை சுற்றி நடக்கும் எந்த ஒரு சம்பவமும் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தன்னுடனேயே சுற்றித்திரியும் ஒரு தோழி திடீரென ஒரு நாள் நான் ஒருவனை காதலிக்கிறேன் என சொன்னால் கூட 'ஹேய், கன்கிராட்ஸ்...' என சிரிப்புடன் வாழ்த்தி விட்டு கைகுலுக்கி ஒரு பார்வையாளராக அவர்களை கடந்து சென்றாளே தவிர தனக்கொரு காதலன் இல்லையே என ஒரு நாளும் வருந்த மாட்டாள். 

பள்ளிக் காலங்களில் கூட ஏதேனும் காதல் இருந்திருக்குமா என கேட்டுப்பார்த்தேன். 

'படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல் அங்க அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்றாள். 

ரெக்கார்ட் க்ளீனாகத்தான் இருக்கிறது என்பதில் சிறியதோர் மகிழ்ச்சி. 

'கேர்ள்ஸ் ஸ்கூல்ன்ற அப்றம் எப்டி பாய்ஸ் கூடலாம் இவ்ளோ சகஜமா பேசுற' என்றேன்.

'ஏன் அதுல என்ன இருக்கு பேசுனா பேச வேண்டியதான, அதுல என்ன பாய்ஸ் கேர்ள்ஸ்?' என்றாள் 

'நாங்க பாத்த கேர்ள் ஸ்கூல் பொணணுங்கெல்லாம் பாய்ஸ ஏலியன் மாதிரி தான் பாப்பாங்க' என்றேன்

சிரித்தாள் 'நான் மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது, ஏன்லாம் என்ன கேக்காத, நான் இப்படித்தான்' என்றாள் 

உண்மையில் அவளிடம் மற்ற பெண்களிடம் இயல்பாக காணப்படும்  பொறாமைக்குணமோ, பொஸஸிவ்னெஸோ, முகம் சுழித்தலோ, கோபப்படுதலோ, தொட்டதற்கெல்லாம் அழுதலோ, பயப்படுதலோ, எரிச்சல் படுதலோ இப்படி எந்த ஒரு குணாதிசயங்களும் இல்லாமலிருந்தாள், எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு, குறும்புத்தனம், அடுத்து என்ன என்பதை நோக்கி கடந்து போதல் என மிக இயல்பாகவே இருந்தாள். இவளிடம் நெருங்கிப்போக நான் காட்டிய முனைப்பை வேறு எந்த பெண்ணிடமாவது காட்டியிருந்தால் இந்நேரம் குறைந்த பட்ச சந்தேகமாவது வந்திருக்க கூடும். இவளுக்கு அத்தனை பெரிய கடிதம் எழுதியும் கூட துளியும் சந்தேகம் வரவில்லை. 

- தொடரும்

Monday, August 18, 2025

என்றென்றும் புன்னகை

 பகுதி 14 - தாங்கிப்பிடித்த நட்பு

'நீ அவளுக்கு லெட்டர் எழுதினாயா?' என அவன் கேட்ட போது, இல்லை என்று என்னால் கூற முடியாது. அவன் தெரிந்து கொண்டுதான் கேட்கிறான் என தெளிவாக தெரிந்தது. 

'ஆமாம் .... பட், அது உனக்கெப்படி தெரியும்' என்றேன்.

'எனக்கு மட்டும் இல்ல, காலேஜ்கே தெரியும் இப்ப' என்றான்.

'எப்படி?' என்றேன்.

'அது காலேஜ் காரிடோர்ல கெடந்திருக்கு, ஏதோ ஒரு சீனியர் அத எடுத்து படிச்சிருக்கான், அப்றம் அத கொண்டு போய் அவன் ரூம்ல இருந்த எல்லோருக்கும் காமிச்சிருக்கான், அங்கயும் எல்லாரும் படிச்சிட்டு, வேற வேற ரூம்க்கு போய்ட்டு இப்ப என் ரூம்ல என்கிட்ட தான் இருக்கு' என்றான்.

கேட்கவே அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு. அவன் சொன்ன ரூமில் இருந்தவர்கள் எல்லோருமே தண்ணி பார்ட்டிகள். ராத்திரி சரக்கடிக்கும் வேளைகளில் இதைத்தான் சத்தமாக படித்து சிரித்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே கேவலமாய் இருந்தது. உள்ளுக்குள் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

'சரி ஆனது ஆய்போச்சு, ரூம்க்கு வா, அத உன்கிட்டயே குடுத்துடுறேன்' என்றான்.

அவன் அதை குடுத்த போது, எவ்வளவு பார்த்து பார்த்து ரகசியமாக எழுதிய என் உணர்வுகள் இப்படி சந்தி சிரிக்கும்படி ஆகிவிட்டதே எனும் துயருடனேதான் வாங்கினேன். வாங்கிவிட்டு வெளியே வரும்போது நேரம் இருட்டி இருந்தது. என் ரூமை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். போகும் வழியில் ஒரு சிறு பாலம் வந்தது. அதன் குட்டி சுவற்றில் அமர்ந்தேன். அந்த சாலையில் யாருமே இல்லை, அமைதியாக இருந்தது, பாலத்தின் கீழே ஓடைத்தண்ணீரின் சலசலப்பு சத்தம் மட்டுமே கேட்டது. கையில் இருந்த அந்த நோட்டை பார்த்தேன், அதை எழுதியதும், அவளிடம் கொடுத்ததும், அதை படித்தபின் அவளின் சிரிப்பும், திருப்பி தரமாட்டேன் என அவள் சொன்னதும், அதன் பின் அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களும், அதனால் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் எல்லாம் நிலைப்பதற்குள் இன்று சீனியர்களும், என் கிளாஸ்மேட்ஸ்களும் என்னை பார்த்த பார்வையும், இன்று சேகர் சொன்ன விஷயங்களையும் நினைத்து பார்த்து கோபம் தலைக்கேற அந்த நோட்டின் பக்கங்களை சுக்கு நூறாக கிழித்து அந்த ஓடையில் வீசினேன். அவளுக்காய் எழுதிய என் முதல் எழுத்துக்கள் இப்படி நீருக்கு இரையாகும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அங்கிருந்து வேகமாக ரூமுக்கு சென்று யாருடனும் முகம் குடுத்து கூட பேசாமல் கதவை டமார் என மூடி விட்டு உள்ளே சென்று பாயில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, இன்று நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தேன். கோகுல், சம்பத், ஜெயசங்கர் மூவருமே அறையில் இருந்தனர். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதென்றால் இவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்கவே இல்லை. என்னால் உறங்கவும் முடியவில்லை, வெளியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பது சல சலப்பாக என் காதில் விழுந்தது. 

'என்னடா நைட் சாப்ட கூட இல்ல ...., உள்ள பொய் கதவ சாத்திட்டான்' என்றான் சம்பத்.

'விடு மச்சி ரொம்ப ஃபீல் பன்றான் போல.... ஃப்ரீயா விடு' பாத்துக்கலாம் என்றான் கோகுல்.

'எப்டி மச்சான் வெளிய போயிருக்கும்?' என்றான் ஜெயசங்கர்.

மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை என்னையும் அறியாமல் உறங்கிப்போனேன்.

காலை எழுந்து எதுவும் பேசாமல் வழக்கம் போல கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். கல்லூரிக்கு சீக்கிரம் போய் விட்டால் காலேஜ் கேண்டீனில் டீ குடிக்க நேரமிருக்கும். கோகுல் அன்று டீ குடிக்க போகலாம் என்று கூட்டிப்போனான். போய் நாங்கள் நால்வரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம். அப்போதும் ஒரு சில சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போவதை என்னால் உணர முடிந்தது, இனி இது இப்படிதான் இருக்கப்போகிறது, நாம்தான் கடந்து செல்ல வேண்டும் என ஒருவாறு உள்ளுக்குள் முடிவு செய்தேன். அப்போது தினேஷ் எனும் ஒரு விஷமத்தனம் கொண்ட ஒருவன் வம்பிழுப்பதற்கென்றே எங்கள் டேபிளில் ஒரு ச்சேரை இழுத்து போட்டு அமர்ந்தான். 

'என்னடா சூப்பர்....உன்ன பத்தி என்னென்னவோ கேள்விப்படுறேன், உண்மையா ....' என நக்கலாக கேட்டான்.

நான் வாயை திறப்பதற்குள் 'ஏன் உனக்கென்ன பிரச்சினை .....?' என்று கோகுல் அவனை பார்த்து கேட்டான்.

'இல்ல மச்சி, வீணாக்கு ஏதோ லெட்டர்லாம் குடுத்தானாம்....' என்றான் தினேஷ்.

'ஆமா குடுத்தான்....இப்ப என்னான்ற....' என்றான் ஜெயசங்கர்.

'கூட படிக்ற பொண்ணுக்கு லெட்டர் குடுத்துருக்கான் என்னன்னு கேக்க மாட்டீங்களா...?' என தொடர்ந்தான் தினேஷ்.

'வீணா வந்து உன் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணாளா? அது அவங்க ரெண்டு பேருக்குமான பர்சனல் விஷயம்.... உனக்கென்ன வந்துச்சு, உன்னால முடிஞ்ச நீ குடு .... குடுத்துதான் பாரு என்ன நடக்குதுன்னு' என கோகுலும் தொடர்ந்தான்.

'அதில்ல மச்சி ....' என சமாளிக்க முற்பட்டவனை 

'ஏன் இதே அவன் படிச்சி ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனப்ப என்னன்னு வந்து கேட்டியா, அப்பல்லாம் என்ன புடுங்கிட்டா இருந்த,  மூடிட்டு கிளம்புடா ....' என்று மிரட்டியே விட்டான் கோகுல்.

விருட்டென்று ச்சேரை தள்ளி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் தினேஷ்.

'இவனுங்களுக்கெல்லாம் இதான் மச்சி வேல .... சும்மா கெளம்பி வந்துடுவானுங்க எப்ப எவன் சிக்குவான்னு' என்று சம்பத்தை பார்த்து சொன்னான் கோகுல்.

கடைசி வரை நான் வாய் திறக்க வேண்டிய அவசியமே வரவில்லை, இதே அவர்கள் உடன் இல்லாமல் நான் தனியாக இருந்திருந்தால் அவன் பேச்சு இன்னும் வேறு விதமாக இருந்திருக்கும். எதுவுமே சொல்லாமல் நான்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க கூடும்.

இங்கு நடந்த விஷயங்கள் எதுவுமே வீணாவுக்கு தெரிந்ததாய் தெரியவில்லை. எப்போதும் போல வகுப்புக்கு வந்தாள், வகுப்புகளுக்கு நடுவில் அவ்வப்போது என்னை பார்த்தாள். நான் அவளை பார்க்கவில்லை. மாலை நாங்கள் பேசும் இடத்தில் எனக்காக காத்திருந்தாள். நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டே அவளை கடந்துதான் சென்றேன், அவள் பக்கம் திரும்பக்கூடவில்லை. அவள் முகம் மாறியதை என்னால் உணர முடிந்தது. ஒரு விஷயம் மட்டும் புரிந்தது அந்த லெட்டர் அவளிடமிருந்து தொலைந்திருக்கிறது என்பது கூட அவளுக்கு இன்னும் தெரியக்கூட இல்லை என்பது. ஆனால் இப்போது நான் இருக்கும் மனநிலையில் அவளிடம் பேசினால் அவளிடம் கோபப்பட்டு விடுவேன், அதை எப்படியும் யாரேனும் கண்டுவிடக்கூடும் என்பதனாலேயே அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தேன். அந்த வார இறுதியில் நான் வீட்டுக்கு சென்றதும் அவள் அக்கா வீட்டிலிருந்து ஃபோன் கால் வந்தது. 

'என்ன சார், ஒரு வாரமே கண்டுக்கேவே இல்ல, ரொம்ப பிஸி ஆய்ட்டீங்களோ' என்றாள்.

'கண்டுக்கற மாதிரி காரியமா பண்ணி வச்சிருக்க' என்றேன்.

'ஏன், என்னாச்சு' என எதுவுமே புரியாமல் கேட்டாள் 

'நான் உனக்கொரு லெட்டர் எழுதினேனே, அது எங்க' என்றேன் 

'என்கிட்ட தான் இருக்கு, ஏன் கேக்ற?' என்றாள் 

'இல்ல, அது உன்கிட்ட இல்ல, அது யார் யார் கைக்கோ போய், சீனியர்ஸ் உள்பட எல்லாரும் அத படிச்சி, நம்ம கிளாஸ் சேகர் வரைக்கும் போயிடுச்சு, அவன்தான் என் கிட்ட குடுத்தான், அத எழுதுன நானே கடைசில என் கையாலயே அதே கிழிச்சி போட்டேன்' என சொல்லி முடித்தேன்.

அவள் முழுவதுமாக மௌனமாகி போனாள். 'என்னடா சொல்ற.... உண்மையாவா... அது என் பேக் லதாண்டா இருந்துச்சி... எப்படி வெளில போச்சுன்னு தெரியலடா...' என்று குரல் தழுதழுத்தவாறே பேசினாள் 

'உனக்கு அது தொலஞ்சி போச்சுன்னு கூட தெரியலல்ல....' என்றேன் 

'இல்லடா , ஏதோ புக்ஸ் வெளில எடுத்துட்டு உள்ள வைக்றப்போ மிஸ் பண்டேன் போல' என்றாள் 

'அப்பவே சொன்னேன் திருப்பி குடுன்னு, நானே வச்சுக்குவேன்னு சொன்னியே ஒழுங்கா வச்சிக்க முடிஞ்சிதா உனக்கு .... அவ்ளோ என்ன கேர்லெஸ்நெஸ் உனக்கு' என என்னையும் அறியாமல் அவளை நன்றாகவே திட்டிக்கொண்டிருந்தேன். அவளும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக  வாங்கிக்கொண்டிருந்தாள். 

ஒருவரிடம் பேச மாட்டோமா என ஒரு காலத்தில் ஏங்குகிறோம், அதே அவர்கள் நம்மை அனுமதித்த பிறகு அதீத உரிமை எடுத்துக்கொண்டு திட்ட ஆரம்பிக்கிறோம். நடந்த விஷயம் அவள் வேண்டுமென்று செய்யவில்லை தான், ஏதோ அவள் கை மீறி நடந்து விட்டது. அதை புரிந்து நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது அவ்வளவு முதிர்ச்சி இல்லை.

'என் மேலதாண்டா தப்பு, நான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கனும், இப்ப என்ன பண்ண முடியும், எல்லாரும் படிச்சாச்சு, அத நம்மளால இனி மாத்த முடியாது, உன் கோபமும் சரிதான், இன்னும் நாலு திட்டு வேணா திட்டிக்கோ, ஆனா இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்' என்றாள்.

'என்ன பண்ணலாம், நீயே சொல்லு' என்றேன்.

- தொடரும் 

பகுதி 15

 

Sunday, August 17, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 13: ஏதோ ஒரு மாற்றம்

'ஹாய்.... எப்டி இருக்க?' என்றாள்.

'அக்கா வீட்டுக்கு வந்துட்டியா' என்றேன்.

'ஆமா இப்பதான் வந்தேன். அப்றம் தேங்க்ஸ்' என்றாள்.

'எதுக்கு?' என்றேன்.

'அக்காவுக்கு நைட் ஃபோன் பண்ணதுக்கு' என்றாள்.

'ஆக்ட்ச்சுவலா நான் நேத்து நைட் மறந்தே போய்ட்டேன்.‌ நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு இன்னைக்கு காலைல தான் வேகமா போய் ஃபோன் பண்ணா எங்களுக்கு நைட்டே தெரியுமே, சுப்பிரமணி ஃபோன் பண்ணுச்சேன்னு சொன்னாங்க. அப்போதான் எனக்கே தெரியும் நீ நைட் ஃபோன் பண்ணிருக்கன்னு. உன்ன நான் ஃபோன் பண்ணவே சொல்லலியே. நீயா எப்படி பண்ண?' என கேட்டாள்.

'ஏன் சொன்னாதான் பண்ணனுமா?' என்றேன்.

'அதில்ல உனக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?' என என்றாள்.

'அக்கறை எப்பவும் தான் இருக்கு, உனக்கு தான் அதை எல்லாம் தெரிஞ்சிக்க நேரமில்லை' என்றேன்.

'அப்படி எல்லாம் இல்லடா' என்றாள் 

'அதான் நேத்து நீ கிட்ட கூட வரலியே' என்றேன். மெல்ல என் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினேன்.‌ அவளுக்கு புரிந்ததாய் தெரியவில்லை. 

'ஏய், என் ஃப்ரெண்ட்ஸ் என்ன விடவே இல்லடா, உனக்கு தான் தெரியுமே அவங்க எப்பவும் என் கூடவேதான் இருப்பாங்க எங்கயும் தனியா விட மாட்டங்கன்னு' என்றாள்.

அதற்கு மேல் அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. மற்ற சாதாரண விஷயங்களை பற்றி பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

வாரயிறுதி முடிந்து திங்கட்கிழமை கல்லூரி வந்தாகி விட்டது. அவளும் வழக்கம்போல் தான் இருந்தாள். அவளை கூப்பிட்டு நிறுத்தி ஒரு நீண்ட நேரம் எடுத்து என் மனதில் உள்ளவற்றை எல்லாம் சொல்லி புரியவைக்குமளவு பேச்சுத்திறமையும் இல்லை. அவ்வப்போது நான் தரும் சில குறிப்புகளை அவள் புரிந்து கொள்ளவும் இல்லை. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான்கு வருடங்கள் முடிந்தே போய்விடும் போலிருந்தது. ஏதாவது ஒன்றை செய்து அவளுக்கு என்னை புரிய வைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அப்போது முதலாமாண்டு மகேஷ் செய்த காரியம் நினைவுக்கு வந்தது. நாமும் அதே போல் அவளிடம் சொல்ல நினைப்பதை கடிதமாக எழுதி விடலாம் என முடிவு செய்தேன். அறையில் இரவு எல்லோரும் உறங்கிய பின்பு தனி அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தேன். மனதில் நினைத்து வைத்திருந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தேன். எழுதும் முன்பு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக முடிவு செய்து வைத்திருந்தேன். எக்காரணம் கொண்டும் இது காதல் கடிதமாக இருந்து விடக்கூடாது என்பதுதில். காதல் கடிதம் எழுதிய மகேஷின் நிலைமை என்ன ஆனது, அதற்குப்பிறகு அவள் அவனை எவ்வளவு வெறுத்தாள் என கண்கூடாக கண்டவன் நான். அவள் அப்படி என்னை அவள் வாழ்விலிருந்து வெறுத்து ஒதுக்குவதை நிச்சயமாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே காதல் எனும் வார்த்தையை எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எல்லாவற்றையும் யோசித்து யோசித்து எழுதி முடித்த போது நேரம் இரவு 1 மணியை தாண்டியிருந்தது. அடுத்த நாள் எங்களுக்கு ஒரு தேர்வு நாளாக இருந்தது.‌ தேர்வு நாட்களில் தேர்வு தொடங்கும் கடைசி நிமிடம் வரை எல்லோரும் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருப்பது வழக்கம். அப்படிதான் வீணாவும் அன்று தேர்வறைக்கு உள்ளே செல்லும் முன் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்றேன். 

'வீணா....., உங்கிட்ட ஒன்னு தரணும்' என்றேன். 

'அப்டியா..... குடு.....' என கையை நீட்டினாள்.

நான் எழுதிய நோட்டை அவள் கைகளில் திணித்தேன். 'இத ரூம் போனப்றம், நீ மட்டும் படி, உன் ப்ரன்ட்ஸ் கிட்ட குடுத்து படிக்க வைக்காத' என்று மட்டும் சொல்லி குடுத்தேன். அதை அப்போதே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததை அவள் கண்களில் கண்டேன். ஆனால் தேர்வறைக்குள் செல்ல வேண்டி இருந்ததனால் அவசரம் அவசரமாக அதை தன் பைக்குள் திணித்துக்கொண்டாள். 'ஓகே... பை... அப்றம் பாக்கலாம்' என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அன்று தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து அவள் இன்று படிப்பாளா, நாளை என்ன சொல்வாளோ என பல சிந்தனைகள் ஓடியது. நேரம் நகரவே இல்லை. இன்று போல் அன்று கைப்பேசிகள் இருந்திருந்தால் உடனே எனக்கு ஃபோன் செய்திருப்பாள். இப்போது வேறு வழி இல்லை. நாளை காலை வரை காத்திருக்க தான் வேண்டும். காலையும் வந்தது, வகுப்பும் ஆரம்பித்தது கடைசி நிமிடம் தான் அவள் உள்ளே வந்தாள். வந்தவள் என்னை ஒரு பார்வை பார்த்ததாய் நியாபகம். முதல் இடைவேளை தொடங்கியதும் என் இருக்கையிலிருந்து எழுந்தேன், அவளும் எழுந்தாள், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்தோம். நீண்ட நேர காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வர இருவருமே காத்திருந்தோம். அவள் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சியும் முகத்தில் அவ்வளவு சிரிப்பும் இருந்தது.

'படிச்சிட்டேன்....' என்றாள்.

'எனக்கு வேற எப்படி சொல்றதுன்னு தெரியல, அதான் எழுதிட்டேன்' என்றேன்.

'இத நீ, மொதல்லயே பண்ணிருக்கலாம்' என்றாள் 

'இவ்வளவு இருந்துச்சா உனக்குள்ள, யோசிச்சு பாக்க எனக்கே ஆச்சரியமா இருக்கு.... First of all நீ இவ்வளவு நல்லா எழுதுவன்றதே எனக்கு தெரியாது, படிக்கவே நல்லா இருந்துச்சு' என்றாள்.

முதன் முறையாக என் எழுத்துக்கு ஒரு ரசிகை கிடைத்திருக்கிறாள். அதுவும் வீணாவே என்பது இரட்டிப்பு சந்தோஷமாய் இருந்தது. 

'இனிமே பாரு நான் எப்படி நடந்துக்றேன்னு.... நீயே ஆச்சரியப்படுவ...' என்றாள்.

'நடந்தா சந்தோஷம் தான்' என்றேன். 

'அதுக்காக ரொம்பலாம் எதிர்பாக்காத, என்னால முடிஞ்சப்பலாம் கண்டிப்பா பேசுறேன்..... ஓகேயா' என்றாள்.

'எனக்கு அதுவே போதும் ' என்றேன்.

'சரி படிச்சிட்டல்ல, நோட்ட திருப்பி குடு' என்றேன்.

'உனக்கு எதுக்கு அது.... திருப்பிலாம் தர மாட்டேன், நானே வச்சுக்குவேன்' என்றாள்.

'ஏன் அத வச்சி பூஜை பண்ண போறியா?' என்றேன்

'என்னவோ பன்றேன். உனக்கெதுக்கு அதெல்லாம் ' என்றாள்.

எனக்குள் சிரிப்பும் சிறு பெருமை உணர்வும். தோன்றும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிப்பாள் போல என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.

அன்றிலிருந்து அடிக்கடி என்னை பார்ப்பது, மாலை கல்லூரி முடிந்ததும் தோழிகளை அனுப்பி விட்டு என்னுடன் பேச சிறிது நேரம் காத்திருப்பது என சின்ன சின்ன மாற்றங்கள் அவளிடம் தெரிந்தது. நானும் நண்பர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி அவளுடன் நின்று சற்று நேரம் பேசி விட்டு பிறகு சென்றேன். வார இறுதி நாட்களில் அவளிடமிருந்து அதிக ஃபோன் கால்கள் வந்தது. அந்த வாரம் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள், நானும் தான். என்‌ வாழ்வின் தினந்தோறும் நடந்த நிகழ்வுகளை ஒருவரிடம் முழுவதுமாக பகிர்வது என்பது அவளிடமே முதன் முறையாக இருந்தது. அவள் ரசித்துப்பார்க்கும் மலையாள படங்கள், நடிகர் நடிகைகள் எல்வாவற்றையும் கூறினாள். மம்முட்டி மோகன்லால் தவிர வேறு யாரையுமே தெரியாத எனக்கு நந்தனம் நவ்யா நாயர், பிருத்விராஜ், மீஷா மாதவன் திலீப் , காவ்யா மாதவன் என இந்த பெயர்கள் எல்லாம் அவள் மூலமாகவே அறிமுகமானார்கள். பாஷையே புரியா விடினும் ஏசியாநெட்டிலும் சூர்யா டிவியிலும் அவள் சொன்ன படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அதைப்பற்றி போனில் பேசினோம். போன் கால்கள் நிமிடங்களிலிருந்து மணிக்கனக்காக மாறியது. அவள் வீட்டில் தற்போது அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை லைவ் அப்டேட் கொடுக்குமளவுக்கு பேச்சு தொடர்ந்து. 'காஃபி குடிக்கிறேன், சிப்ஸ் சாப்பிடுகிறேன், உனக்கு வேணுமா' என்பாள். 'குடு' என்பேன். 'இந்தா எடுத்துக்கோ' என்பாள். எனக்காக அவளும்‌, அவளுக்காக நானும் எப்போதும் கூடவே இருப்பதை போல உணர்ந்தோம். 'ஏதாவது முக்கியமாக நடந்தால், உடனே அவளிடம் நானும் , என்னிடம் அவளும்' சொல்லி முடித்தால்தான் அது மனதளவில் முழுமை பெறும் போல் இருந்தது இருவருக்குமே. ஒரு கடிதம் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதே என நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். அந்த சந்தோஷம் சில நாட்கள் வரை நீடித்தது. 

ஒருநாள் கல்லுரிக்குள் நுழைந்த போது சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். அது வழக்கமான பார்வைக்கு மாறாக இருந்தது. என் வகுப்பில் நான் முதல் மாணவன் என்கிற அடையாளம் சீனியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அன்று ஒரு சீனியர் நான் நடந்து சென்ற போது பின்னாலிருந்து ஒரு கமெண்ட் அடித்தான். 

'என்னடா டாப்பரே.... படிக்கிற வேலை இல்லாம வேற ஏதோ வேலை எல்லாம் பன்ற போல...' என்றாள். எனக்கு அந்த பேச்சு சரியாக படவில்லை. திரும்பிச் சென்று அவரிடமே நேராக கேட்டேன்.

 'ஏன்ணா அப்டி சொல்றீங்க...' என்று. அவனோ 'உன்ன என்னமோ சின்ன பையன்னு நெனச்சேன், பெரிய ஆளுதான்டா நீ' என்றான். 'போ .... ஒழுங்கா படிக்ற வேலைய மட்டும் பாரு....' என‌ கொஞ்சம் மிரட்டல் தொனியிலேயே சொல்லி அங்கிருந்து போக சொன்னான். 

எனக்கு ஏன் அவன் அப்படி சொன்னான்‌ என‌ புரியவில்லை. குழப்பத்திலேயே இருந்தேன். சீனியர்கள் மட்டுமில்லை என்‌வகுப்பிலேயே சில மாணவர்கள் என்னை பார்த்த விதம் சரியில்லை, ஒரு மாதிரி நக்கலாக சிரித்தனர். அன்றைய நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் முன் என் அறை நண்பர்களுடன் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது சேகர் எனும் என் வகுப்பு மாணவன் என்னை பார்த்தான். அவன் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் அவன் வீடு இருந்தது. என்னை தனியே கூட்டிச்சென்று 'மச்சி நீ வீணாவுக்கு லெட்டர் எதுவும் எழுதினியா...?' என்றான். அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.

- தொடரும்.

Saturday, August 16, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 12 - என்னை புரியாதா

'நான் சொன்னது நினைவிருக்கிறதா?' என்பதைப்போல நானும், 'இரு வரேன்' என்பதைப்போல அவளும் ஒரு பார்வைப் பரிமாற்றம் நிகழ்த்தினோம். பிறகு தோழிகளை விட்டு விலகி என்னை நோக்கி நடந்து வந்தாள். என் பக்கத்தில் இருக்கையை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள். 

'ஹ்ம் சொல்லு .... அப்றம்' என்றாள். 

'ஒரு வழியா வந்துட்ட...' என்றேன்.

சிரித்தாள். ஒரு சில வார்த்தைகள்தான் பேசியிருப்போம். வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைப்பது போல ஒரு காரியம் செய்தேன். சாப்பிட்ட கையுடன் அவளோடு பேச கொஞ்சம் சங்கோஜமாக இருந்ததனால் 'ஒரு நிமிடம் வெய்ட் பன்றியா, கை கழுவி விட்டு வந்துட்றேன்' என சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வேகம் வேகமாக சென்று பைப்பில் கையை கழுவிட்டு, மீண்டும் வேகவேகமாக நடந்து வந்து வகுப்பிற்குள் நுழைந்த போது நான் நினைத்து போலவே நடந்தது, அவள் அங்கு இல்லை. அதிசயமாக நிகழ்ந்தது ஆரம்பிக்கும் முன்னரே முடிந்தது. எங்கு போனாள் என யாரையும் கேட்கவும் முடியாது. கைகழுவுறது இப்போ ரொம்ப முக்கியமா என எனக்குள்ளே ஒருவன் கடிந்தான். 

மதிய இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் வகுப்பிற்குள்ளே வந்தாள். வந்தவள் என் பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லை. ஆனால் வார இறுதி வந்தபோது மட்டும் மதியமே 'இன்னக்கி வீட்டுக்கு போறியா ?' என கேட்டாள். 'ஆமாம்' என்றேன், 'அப்போ என்னயும் கூட்டிட்டு போ' என்றாள். 'சரி' என்பதை தவிர என்ன சொல்லி விட முடியும். உள்ளுக்குள் சிறிய கோபம் வரும், 'இதற்கு மட்டும் தான் பேசுவியா' என, ஆனால் பயணத்தின் போது அவள் பேசும் அழகில் அதுவும் மறந்து போய் விடும். 

அவளின் அருகாமை ஏதோ ஒரு மனமகிழ்வை தந்தது, வாழ்வில் எதற்கும் அதீத கவலை கொள்ள தேவையில்லை, பயம் கொள்ள தேவையில்லை, நாளை அல்லது எதிர்காலம் பற்றி எல்லாம் ரொம்ப யோசிக்க தேவையில்லை, எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே கடக்கலாம், இந்த தருணத்தில் மட்டும் சந்தோஷமாக இருந்து கொள்ளலாம், நடக்க வேண்டியது தானே நடக்கும், நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் சிரிக்கக்கூடிய நிகழ்வாகவே பார்க்கலாம், மற்றவர்களிடளும் அதைப்பற்றி கூறி சிரிக்கலாம், அவர்களையும் சிரிக்க வைக்கலாம். அப்படி அவளும் சிரித்து என்னையும் சிரிக்க வைத்தாள். அது எனக்கு பிடித்துப்போனது, அதனாலேயே அவளுடன் சேர்ந்திருக்கும் தருணங்களை எதிர்நோக்கியே மனம்  காத்திருந்தது, ஆனால் அது வார இறுதி நாட்களில் மட்டுமே நடந்தது அதுவும் அவள் வீட்டுக்கு சென்றால் மட்டுமே. இதெல்லாம் என்னுள் இருந்தாலும் எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டிருந்த கேள்வி "அவள் வாழ்வில் நான் யார்?" என்பதுதான். அவளிடம் கேட்டால் "கூட படிக்கிறவன், ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்" என்று சொல்லி விட்டு கடந்து போய் விடுவாள் என்பது எனக்கு தெரியும், ஆனால் அப்படி பத்தோடு பதினொன்றாக அவள் வாழ்வில் நான் இருந்துவிடக்கூடாது என்பதை கொஞ்சம் தீர்க்கமாகவே முடிவு செய்திருந்தேன். அந்த இடத்தை அடைய ஏதாவது செய்ய வேண்டும் என மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் வரும் என்றும் காத்திருந்தேன்.

கல்லூரி மூன்றாம் ஆண்டில் நாங்கள் தனியே வீடு எடுத்து தங்கி இருந்ததை போல மாணவிகளும் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து தனியே வீடு எடுத்து தங்க ஆரம்பித்தனர். அது மாணவர்களுக்குதான் குஷியாக இருந்தது. கல்லூரி முடிந்த சாயங்கால வேளைகளில் மாணவிகளை சகஜமாக வெளியே காணலாம், பேசலாம், இவ்வளவு ஏன் நாங்கள் மாணவிகள் வீட்டுக்கு செல்லலாம், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம், இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என உற்றுப் பார்க்கும் பெற்றோர்கள் இல்லை. ஹவுஸ் ஓனர்களும் ஏதோ காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், வருகிறார்கள், போகிறார்கள், நமக்கு வாடகை கூடுதலாக வந்தால் போதுமென்று கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். எங்கள் அறைக்கு கோகுலும், ஜெயசங்கரும் அவ்வப்போது அவர்களின் தோழிகளை கூட்டி வந்தனர், மொட்டை மாடியில் இருட்டும் வரை அரட்டை அடித்து விட்டு பின் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். இரண்டொரு முறை இதை சகித்துக்கொண்ட சம்பத் "இனி கூட்டி வருவதானால் முதலிலேயே சொல்லி விடுங்கள், நான் டீ கடைக்கு சென்று விடுகிறேன், இருட்டிய பின் இவளுக போறதை பார்த்து விட்டு பின் வருகிறேன்" என்றான். அவனுக்கு தெரியவில்லை அவன் தினமும் செல்ல வேண்டி வரும் என்று.

வீணாவும் அவள் தோழிகளும் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி தான் வீடு எடுத்திருக்கிறார்கள் என தெரிந்தது. அவர்கள் யார் வீட்டுக்கும் சென்றதாக தெரியவில்லை ஆனால் மாணவர்கள் அவர்கள் வீட்டை  நோக்கி படையெடுத்தனர் என்பது மட்டும் தெரிந்தது. அவளுடன் தங்கியிருந்த சாவித்திரி எனும் பெண்ணும் ஒரு மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பையனும் காதலர்களாய் இருந்தனர். அவன் பாதி நேரம் அங்கேயேதான் கிடந்தான். கிட்டத்தட்ட கணவன் மனைவி போலவேதான் இருந்தனர். காதலர்களுக்கிடையே நிகழும் நெருக்கமான நிகழ்வுகள் அவர்கள் வீட்டுக்குள்ளேயே நிகழ்ந்தது, வீணாவும் அவளின் மற்ற தோழிகளும் அவர்களை கண்டும் காணாதது போல அந்த வீட்டில் இருந்தனர். இதையெல்லாம் தினமும் பார்த்து வீணா யாருடனும் இப்படி போய்விடக்கூடாதே என்கிற பயமெல்லாம் அப்போது இருந்தது எனக்கு.

ஒரு நாள் வார இறுதியில் நாங்கள் யாருமே வீட்டுக்கு செல்லவில்லை. சாயங்காலம் வகுப்பில் எல்லோரும் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம் அடுத்த நாள் காலை அவரவர் வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். அன்று வீணா அவள் அக்கா வீட்டுக்கு போக வேண்டும், அவர்கள் அண்ணா நகரில் இருக்கிறார்கள், ஆனால் இன்று எல்லோரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்ததினால் இன்று வரவில்லை என அக்கா வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என கூறிக்கொண்டிருந்தாள். வழக்கமாக வார இறுதியில் பயணம் செய்யும் போது என்னிடம் பேசுவது போல இன்று கோவிலுக்கு செல்லும் போது என்னுடன் பேசிக்கொண்டே வருவாள், என் நண்பர்கள் முன் அவள் என்னுடன் இருப்பதை காட்டி விடலாம் என நினைத்து வைத்திருந்தேன். இது போன்ற நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களும் அவரவர்க்கு நெருக்கமானவர்களுடன் சேர்த்து கொள்வது வழக்கமாக நிகழும் ஒன்று, அவர்கள் காதலர்களாக இருக்கலாம், அல்லது காதலர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களாக இருக்கலாம் அல்லது வெறும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அவள் என்னுடன் இருக்க வேண்டும் அதுவும் என் நண்பர்கள் முன், என் அதிகபட்ச ஆசையே இவ்வளவுதான். எதிர்பார்ப்பு  என்பது ஏமாற்றத்தை தவிர என்ன பெரிதாய் தந்துவிட போகிறது. வந்தவள் மிக சுறுசுறுப்பாக எல்லாருடனும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் சுற்றித்திரிந்தாளேயன்றி என் பக்கம் கூட வரவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும் ஏன் கோபமாகவும் கூட இருந்தது. இதெல்லாம் இவளுக்கு எப்போது புரியப்போகிறது, என்று இதெல்லாம் எனக்காக செய்யப்போகிறாள் என உள்ளுக்குள்ளே நிறைய மன ஓட்டங்கள். சீக்கிரமாகவே கோவிலிலிருந்து வெளியே வந்து விட்டேன். தெப்ப குளப்படிக்கட்டில் அமர்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்த நீரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் புடவை கட்டி வந்த ஒரு உருவம் அமர்ந்தது, அது வித்யப்பிரியா. 

"என்ன சீக்கிரம் வந்துட்ட? வேற யாருமே வர்ல' என்றாள். 

"ஒன்னுமில்ல சும்மாதான், நீ கோயிலுக்கு போல?" என்றேன்.

"நான் இப்ப போகக்கூடாது" என்றாள்.

"ஓ...." என புரிந்தவனாய் தலையை மட்டும் ஆட்டினேன்.

அவள் என்னைப்பற்றியும் வீணாவுடன் எனக்கிருக்கும் ஒரு உணர்வு பற்றியும் கொஞ்சம் கணித்து வைத்திருப்பவள்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க?...." என கேட்டாள்.

"ஒன்னுமில்ல, சும்மாதான் " என்றேன்.

"என்னவோ மறைக்கிற..... வீணாவா?" என சட்டென கேட்டே விட்டாள். நான் மௌனமாகவே இருந்தேன். அவள் கேட்டதை ஆமோதிப்பதை போல தலையை மட்டும் அசைத்தேன்.

"சரி விடு..... நமக்கு புடிச்சவங்க நமக்கு புடிச்ச மாதிரி எப்போதுமேலாம் நடந்துக்க மாட்டாங்க, நாமதான் புரிஞ்சிக்கனும்" என்றாள். சரிதான் என்பதை போல தலையை மட்டுமே அசைத்தேன். அவள் நான் ஏதாவது பேசுவேன் என அவள் எதிர்பாத்தாலும் அவளிடம் அதிகம் பகிர்தலை நான் விரும்பவில்லை.

கோவிலிலிருந்து ஒவ்வொருவராக நண்பர்கள் எல்லோரும் வெளிவந்து கொண்டிருந்தனர்.வீணாவும் வந்தாள் அவளை சுற்றி நான்கு பேரும் உடன் வந்து கொண்டிருந்தனர். இனிமேலும் அவள் என்னிடம் வருவாள் என்ற எண்ணம் முற்றிலும் போய் விடவே. "சரி நான் ரூம்க்கு போறேன்" என நண்பர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். போகிற வழியில் ஒரு PCO பூத் கண்ணில் பட்டது. வீணா அவள் அக்காவுக்கு இன்று வராததை அறிவிக்க வேண்டும் என சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போதிருக்கும் அரட்டை மூடில் அவள் போன் செய்வாள் என்று தோன்றவில்லை. உள் சென்று அவள் அக்கா வீட்டு நம்பரை டயல் செய்தேன். அப்போதெல்லாம் அனைத்து நம்பர்களும் நினைவில் அத்துப்படி. மறுமுனையில் அவள் அக்காதான் எடுத்தார்கள். வீணாவின் குரலை ஒத்த ஆனால் சற்றே முதிர்ந்த ஒரு குரல். என் பெயர் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே தெரியும் அதனால் என்னை அறிமுகப்படுத்த வெல்லாம் தேவையே இல்லை. "நான் சுப்ரமணி பேசுறேன்க்கா..... வீணா இன்னைக்கு வரலையாம், நாளக்கி காலைல தான் வருவாளாம், உங்க கிட்ட இன்பார்ம் பண்ண சொன்னா...." என்றேன். 

"ஓ ....‌அப்படியா. தேங்க்யூ, நீ எப்படி இருக்கு?" என்று கேட்டார்கள்.

"நான் நல்லா இருக்கேன்" என்று சொல்லி வைத்து விட்டு ரூமுக்கு சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலை நானும் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டேன். அன்றைய வாரயிறுதிநாள் வழக்கமாக நகர்ந்து கொண்டிருக்க மாலை வீட்டு லேண்ட் லைன் ஒலித்தது. எடுத்தேன். மறு முனையில் வீணா.

- தொடரும்






Monday, January 13, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 10 - நீ வருவாய் என

அடுத்த நாள் காலை எங்களுக்கு கொடைக்கானலில் விடிந்தது. பையன்கள் எல்லோரும் சீக்கிரம் தயாராகி பஸ்ஸில் வந்து உட்கார்ந்தோம். பெண்கள் ஒவ்வொருவராக தயாராகி வந்து கொண்டிருந்தனர், எல்லோரும் அவரவர்களின் சிறந்த உடைகளை உடுத்தி வந்திருந்தனர், சில பெண்கள் மாடர்ன் ட்ரஸ் என்ற பேரில் பேண்ட் சட்டை அணிந்திருந்தனர். என் கண்கள் வீணாவிற்காக காத்திருந்தது. இன்று எப்படி வரப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு சிறியதாக தொற்றிக் கொண்டது. சாதாரண நாட்களிலேயே அவளின் ட்ரெஸ்ஸிங் ஸென்ஸ் மற்ற பெண்களை விட ஒரு படி அதிகமாகத்தான் இருக்கும். வட்டக்கழுத்து சுடிதார்கள் அனிந்து வரும் பெண்கள் மத்தியில் V neck சுடிதார்களை அவள் மட்டுமே அன்றைய நாட்களில் அணிந்து வருவாள். அந்த V மறையாத வண்ணமே துப்பட்டாவும் அணிந்து வருவாள். அது சில நேரம் ஒரு தோளில் மட்டும் இருக்கும் சில நேரம் இரு தோள்களிலும் இருக்கும். கடைசியில் ஹோட்டலில் இருந்து இறங்கிய அவளின் தோற்றம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கொஞ்சமும் தவறவில்லை. ப்ளேன் சுடிதார்தான் ஆனால் அத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. கல்லூரிக்கு உடுத்தி வரும் ஆடைகளை விட சிறந்த ஆடைகள் அவளிடம் உண்டென்பதை உடுத்தி காட்டி விட்டாள். தோழிகளுடன் சேர்ந்து வந்து பஸ் ஏறியவளை முன் சீட்டில் அமர்ந்திருந்த காஜாவும் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டுதானிருந்தார். அவரை சற்றும் கண்டு கொள்ளாமல் அவள் இருக்கைக்கு வந்து ஒரு சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு அமர்ந்து கொண்டாள். வண்டி கிளம்பியது.

வகுப்பில் நடக்காதது இந்த ட்ரிப்பிலாவது நடக்குமா என்று எனக்குள் ஒரு எண்ணம். என்ன என்று கேட்கிறீர்களா... அதான் தனியே நாங்களிருவரும் பேசிக்கொள்ளும்போது எங்களுக்குள் ஏற்படும் ஒரு நெருக்கம் மற்றவர்கள் முன்பும் நிகழ வேண்டும் என்பதுதான். அது ஒரு தீரா ஆசையாக என்னுள் தொற்றிக் கொண்டது. அது நடந்தால் அது மற்றவர்கள் முன்பு என்னை கொஞ்சம் பெருமையாக காண்பிக்கும் என்கிற ஒரு மாய பிம்பம். அன்றைய நாட்களில் எல்லோரின் முன்பும் ஒரு பையனும் பெண்ணும் தனியாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அந்த பையனுக்கோர் பெருமை, அவர்கள் காதலர்களாக அல்லது வருங்காலத்தில் காதலர்கள் ஆகப்போகிறவர்களாக பார்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கெல்லாம் காட்டிக்கொள்ளும் எண்ணம் எனக்குள் இல்லை என்றாலும் அவளாக வந்து என்னுடன் நின்றோ, அமர்ந்தோ பேசிக்கொண்டிருந்தால் அது எனக்கு அவள் நெருக்கமானவள் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்கிற ஒரு உணர்வு. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கி விட வேண்டுமென்ற ஆசை. ஆனால் அது நானாக போய் போய் அவளிடம் பேசி வழிவதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். இந்த எண்ண ஓட்டங்களுடன் நான் அமர்ந்திருக்க நாங்கள் பார்க்க வேண்டிய இடத்தை அடைந்தோம்.

அந்த இடம் ஒரு அழகான பூங்கா. பச்சைப்பசேலென புல்வெளி நிறைந்திருந்தது, ஆங்காங்கே வழித்தடங்கள். பையன்கள் எல்லோரும் ஓடிச்சென்று ஒரு சரிவான புல்தரையை கண்டு பிடித்து அதன் மேட்டிலிருந்து  தாழ்வுப்பகுதிக்கு உருண்டு வருவோம், யார் முதலில் வருவோம் பார்க்கலாம் என எல்லோரும் அந்த புல் தரையில் உருள ஆரம்பித்தோம். நான், சம்பத், கோகுல், செழியன், இன்னும் சில பேர். உருள ஆரம்பிக்கும்போது எங்களுக்கு தெரியவில்லை சரிவில் வேகம் அதிகரிக்கும், எங்களை எங்களாலே கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்று. உருண்டு கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான குரல். 'மச்சான் கன்ட்ரோல் போகுதுடா....' என கோகுல், 'ஆமா , ஸ்பீட் பிரேக்கர் எதாவது வரணும்...' என சம்பத், 'தல சுத்துதுடா ....' என கத்திய செழியன் ட்ராக் மாறி வேறு பக்கம் உருள ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக நிலைக்கு வந்து எல்லோரும் தடுமாறி எழுந்து நின்ற போது செழியனை காணவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு இடத்தில் அவனை சுற்றி நான்கு பேர், அவன் சட்டையைப்பிடித்து மிரட்டிக்கொண்டிருந்தனர், ஒரு பட்டு வேட்டி சட்டை போட்டிருந்த ஆள் செழியனை அடிக்க கையை ஓங்கினான். ஏதோ அசம்பாவிதம் போல என எல்லோரும் ஓடிச்சென்று அடிக்க வந்தவனை தடுத்து நிறுத்தி என்னவானது என விசாரித்த போதுதான் சம்பவம் புரிந்தது, அங்கே புதிதாக கல்யாணமான ஒரு தம்பதியருக்கு அவுட்டோர் வீடியோ ஷீட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் போல. அங்கே பட்டுப்புடவையும், நகையுமாக, கன்னத்தில் கை வைத்தவாறு மணப்பெண்ணை புல்தரையில் அமரவைத்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, வழி மாறி உருண்டு  வந்த செழியனின் இரு கால்களுக்கு நடுவே அந்த மணப்பெண் மாட்டிக்கொண்டு விட்டாள் என்று. சொல்லப்போனால் தன்னை நிறுத்த முடியாமல் உருண்டு வந்தவனை அவள்தான் நங்கூரம் போல அவன் இரு கால்களுக்குமிடையே மாட்டி நிறுத்தி இருக்கிறாள். சும்மா இருப்பானா மாப்பிள்ளை, சட்டையை மடித்துக்கொண்டு அடிக்க வந்து விட்டான். பிறகு அவர்களை சமாதானப்படுத்தி, தெரியாமல் நடந்து விட்டதென மன்னிப்பு கோரி கூட்டி வருவதற்குள் போதும் போதும் என ஆகி விட்டது. ஆனால் கடைசி ஆண்டு வரை விழுந்து புரண்டு சிரித்த சம்பவம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். 

அங்கிருந்து நடந்து வந்துகொண்டிருந்த போது 'சுப்பு' என ஒரு குரல், அழைத்தது சவீதா. 'எங்களை ஒரு போட்டோ எடுக்றியா' என கேமிராவை நீட்டினாள், அங்கே வீணா, சவீதாவுடன் இன்னும் இரு பெண்கள். அவர்களை இரு செடிகளுக்கு நடுவே சற்று சரியாக நிற்க சொல்லி லென்சில் ஒரு கண் மூடி பார்த்தேன். வீணா சிரிக்க ஆரம்பிக்க கரெக்ட்டாக க்ளிக்கினேன். மற்ற யாரும் என் ஃபோக்கஸிலேயே இல்லை. அந்த கேமராவின் லென்ஸ் தானாக வெளியே வந்து தன்னைத்தானே சரி செய்து கொண்டு போட்டோ எடுத்தது அடுத்த பிலிமுக்கும் அதுவே மாற்றிக் கொண்டது. 'ஆட்டோமேட்டிக் கேமராவா, நல்லா இருக்கே ... யாரோடது?' என்றேன். 'என்னோடதுதான்.... ஆக்ட்சுவலா என் அண்ணனோடது....' என்றாள் வீணா. 'நல்லாருக்கு....' என சொல்லி விட்டு அவளிடம் திரும்ப குடுத்தேன். மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறினதும் 'அந்த கேமராவை தறியா' என்றேன். உடனே தந்தாள். 'நான் கொஞ்சம் சீனரீஸ் எடுக்கிறேன்' என்றேன். அப்படியே அந்த உரையாடல் தொடரும் என நினைத்தேன் ஆனால் ஆவள் 'ஓக்கே....' என்று மட்டும் சொல்லி விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டாள். நான் என் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். சரி அவள்தான் உடன் இல்லை அவள் கேமராவது உடன் இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வண்டி நகர நகர கண்ணில் படும் சில இயற்கை காட்சிகளை க்ளிக்கிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் பிலிம் ரோலை வீணடித்துக்கொண்டிருந்தேன். 

அன்றைய இரவு ஓட்டலின் முன்பு கேம்ப் ஃபயர் வைத்தார்கள். விறகுக்கட்டைகளை கொளுத்தி சுற்றி எல்லோரும் குளிர்காய, சிறிது நேரத்திற்கெல்லாம் பாடல்கள் ஒலிக்க துவங்க, சுற்றி நின்று எல்லோரும் ஆட ஆரம்பித்தோம். ஜிதின் எனும் ஆந்திரா பையன்தான் அப்போது எங்களுக்கு டான்ஸ் மாஸ்டர், சிரஞ்சீவி ஃபேன், எந்த பாடல் போட்டாலும் உடனே ஸ்டெப் போட்டு விடுவான். நாங்கள் அதே ஸ்டெப்பை ஃபாலோ செய்வோம். அப்படியே குதூகலமாக ஆடிக்கொண்டிருந்த போது. சால்வையை சுற்றிக்கொண்டு வீணா சிரித்துக்கொண்டே இறங்கி வந்தாள். ஆடிக்கொண்டிருந்த நான் ஒரு நிமிடம் நின்றேன், எனக்கு அப்போது 'பனிவிழும் இரவு .....' பாடல் ஒலிக்க வேண்டும் போல தோன்றியது. 'மச்சி ஆட்றா....' என கோகுல் தள்ளி விட மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. நாங்கள் ஆடிக்கொண்டிருந்ததை பார்க்க ஆரம்பித்தவளின் தலை மட்டும் பீட்டுக்கேற்றார்போல ஆடிக்கொண்டிருந்தது. ஆடிக்கொண்டிருந்த நாங்கள் பெண்கள் பக்கமும் போய் ஆட இழுத்தோம், அவர்களுக்கு ஆசைதான் ஆனாலும் வாத்திகள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என வர வில்லை. குதூகலமாக ஆட்டம் முடிந்து இரவு உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஒரு அறையில் நான்கைந்து பேர்களாவது இருந்தோம். நான், கோகுல், சம்பத், செழியன் ஒரு அறை. எங்கள் அறைக்கு பக்கத்து அறையில் ஆசிரியர்கள் அறை.... ராத்திரி தண்ணி போல... பக்கத்து அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது சுவரில் காது வைத்தால் நன்றாகவே கேட்டது. காஜா வின் குரல்தான் (குமுறல்தான்) சற்று அதிகமாக இருந்தது. 'என்னா சார் இந்த பசங்க ..... ஒருத்தனும் சரியில்ல..... பொம்பள புள்ளைங்கள ராத்திரில ஆட கூப்புட்றானுக..... இந்த பொண்ணுங்களுக்கு நாமதான சார் பாதுகாப்பு குடுக்கனும்.... நம்மள நம்பிதான வந்துருக்குதுக.....' என்றார். கம்ப்யூட்டர் வாத்தியார் 'சரி அகமது, இப்ப சாப்ட்டு படு.... காலைல எந்திச்சி பாதுகாப்பு குடுக்கலாம்....' என அவரை ஆஃப் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தார். 

அடுத்த நாள் மூணார் பயணம். மூணாரை அடைந்த போது இரவாகி போனது. ஒரு ஓட்டலுக்குள் சாப்பிட போனோம். கேரளாவில் என்ன ஸ்பெஷல் என எல்லோரும் வீணாவை நோக்கி கேட்க அவள் பரோட்டாவையும் பீஃப் கரியையும் ஆர்டர் செய்து விட்டாள். நான் அப்போது நான்வெஜ் சாப்பிட மாட்டேன் என்பதால் தோசையுடன் நிப்பாட்டி விட்டேன். சாப்பிட்டு விட்டு பஸ் ஏறியவர்களுக்கு அப்போது புரியவில்லை சாப்பிட்ட பீஃப் கரி வேலையை காட்டப்போகிறதென்று. எல்லோருக்கும் அடிவயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது போலும். செழியன் புலம்ப ஆரம்பித்து விட்டான் 'என்னத்த வாங்கி குடுத்த வீணா, அடக்க முடில' என அடி வயத்தை பிடித்துக்கொண்டு உருண்டு கொண்டிருந்தான். ஓட்டல் வந்ததும் பாய்ந்தடித்துக்கொண்டு கழிவறை சென்ற பிறகுதான் எல்லோரும் சகஜ நிலைக்கே வந்தனர். அடுத்த நாள் காலை அடுத்த ஓட்டலுக்குள் சென்றதும் 'என்ன செழியா.... இன்னைக்கு ஏதாவது ஆர்டர் பண்ணனுமா' என்றாள். 'அம்மா தாயே.. ஆள விடுமா' என கையெடுத்து கும்பிட்டான் செழியன்.

ஒருவழியாக ட்ரிப் முடிந்து வீடு திரும்பினோம் ஆனால் கடைசிவரை நான் நினைத்து நடக்கவே இல்லை. ஒருசில தருணங்களை நானாக அமைக்க முயற்சி செய்தாலும் அதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை. உண்மையில் எங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இருக்கிறதா? இல்லை நான்தான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனா என சந்தேகமே எழத் தொடங்கி விட்டது என்னுள். 

- தொடரும்

Friday, January 10, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 9 - வளையோசை கல கல கலவென

சீனியர் கூப்பிட்டதும் எந்த சலனமுமின்றி உடன் சென்றாள் வீணா. கூப்பிட்டு வரச்சொன்னவர் உமேஷ் எனும் சீனியர், முதலாமாண்டு கல்லூரி ஆண்டு விழாவில் அவர் போட்ட அரசியல்வாதி வேடம் வெகுவாக கவனிக்கப்பட்டது. திறமைசாலிதான், ஆனால் அவர் பார்வை வீணாவின் மேல் விழும் என எதிர்பார்க்கவில்லை. தன்னை ப்ரபோஸ் செய்வதற்காகத்தான் சீனியர் கூப்பிட்டிருக்கிறார் என தெரிந்துதான் செல்கிறாளா என தெரியவில்லை. இன்று மீண்டுமொரு முறை அழப்போகிறாளா, இல்லை சீனியருக்கு பயந்து ஒத்துக்கொள்வாளா என ஏகப்பட்ட சிந்தனை ஓட்டம். திரும்ப வந்தவளிடம் எந்த மாற்றமும் இல்லை எப்படி போனாளோ‌அப்படியேதான் திரும்ப வந்தாள். அன்றைய தினம் முடிந்து வகுப்பிலிருந்து வெளியே கிளம்பும் நேரம் அவளிடம் கேட்டு விட வேண்டும் என முயற்சித்தேன், முடியவில்லை. வழக்கம் போல் தோழிகள் மொய்த்துக்கொண்டிருக்க அவர்களுடனே கிளம்பி விட்டாள். அவர்கள் முன்னால் செல்ல சிறிது இடைவெளி விட்டு நான் பின்னால் செல்ல, அவர்கள் தரை தளத்திற்கு செல்ல படி இறங்கியதும் சட்டென திரும்பி பார்த்தவள் அவள் மட்டும் திரும்ப வந்தாள். 

'என்ன திரும்ப வர' என்றேன் 

'கர்ச்சீஃப் மறந்துட்டேன்னு, அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன் ' என சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள் 

'என்ன ஆச்சு, சீனியர் என்ன சொன்னார்' என கேட்டேன் 

'அத ஏன்டா கேக்றே.... லவ் பண்றாராம்... நீ பண்ணுவியானு ....கேட்டாருடா' என்றாள் 

'நீ என்ன சொன்ன...' என்றேன்

'நான்ல .... சிரிச்சிட்டே போங்கன்னா அதெல்லாம் பண்ண முடியாதுனு, சொல்ட்டு வண்ட்டேன்...' என்றாள்.

'ஏ...' என நான் ஆரம்பிக்கும் முன்பே 

'சரி சரி.... டைம் ஆச்சு கீழ ஃப்ரண்ட்ஸ் வெய்ட் பன்றாங்க, நான் அப்றம் பேசுறேன்' என சொல்லி விட்டு வேகமாக இறங்கி சென்று விட்டாள்.

மனதிற்குள் ஒரு சிறிய நிம்மதி.

இரண்டாம் வருடம் மாணவர்களே ஏதாவது ஒரு டாபிக்கை படித்து ஆசிரியர்களை போல பாடமெடுக்க வேண்டும். செமினார் என்று அதை சொல்லினார்கள். ஏற்கனவே சிவகாமி சில வகுப்புகள் எடுத்திருந்தாள், அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்பதுதான் எண்ணமாம். வித்யப்ரியாவும் சில வகுப்புகள் எடுத்திருந்தாள். ஆண்கள் பக்கம் வந்த போது எவனும் எடுக்க தயாராக இல்லை. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல இவன்தான் டாப்பர், இவனே எடுக்கட்டும் என என்னை கை காட்டி விட்டனர். நான் எடுக்க வேண்டும் என ஆகிவிட்டது. நாம் ஒரு விஷயம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏதோ ஒரு உந்துதலோ, ரெபரன்ஸோ தேவைப்படும். அப்படி என்‌எண்ணத்தில் முதலில் வந்தவர் +2 வில் Botany எடுத்த சுந்தர் சார். அளவான தேகம், தடித்த மீசை, வகிடெடுத்து வாரிய தலை, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருக்கும் விதம். போர்டில் வரையும் தெளிவான படங்கள் மற்றும் எழுத்துக்கள் என அவரின் ஒவ்வொரு குணாதிசயங்களையும் நன்கு கவனித்து வைத்திருந்தேன். அன்று அவரை ப்ரதி எடுத்தது போல அதே மாதிரி உடை உடுத்தி, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு வகுப்பில் முன் நின்று Electronics ல் Band Pass Filter எனும் Topic ஐ எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதி விளக்கினேன். அவரைப்போலவே என்னை நினைத்துக்கொண்டதினால் மேடைபயம் சற்றே குறைந்தது. அன்று பாடமெடுக்கும் போது நான்கு பேரின் மீதுதான் என் பார்வை இருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த கோகுல், பெண்கள் பக்கம் முதல் வரிசையில் இருந்த சிவகாமி, இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த வீணா, ஆண்கள் பக்கம் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த சம்பத். நான்கு பேருமே நன்கு கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர். எடுத்து முடித்ததும் வகுப்பே கை தட்டியது. ஆசிரியரும் குட் ஜாப் என்றார். 

இடைவேளை வந்ததும் சிவகாமி மட்டும் வந்து 'நன்கு புரிந்தது சுப்ரமணி' என்று சொன்னாள். 'தேங்க் யூ, சிவகாமி' என்றேன். அவள் சென்றதும் கோகுலும், சம்பத்தும் வந்தனர். 'கலக்கிட்டான்ல மச்சி ' என்றான் கோகுல் சம்பத்தை பார்த்து 'இந்த வாத்திங்கெல்லாம் தேவையே இல்லை, இவனே போதும்' என்றான் கோகுல். 'ஆமாமா.... என்னென்னமோ திறமைகள் இருக்கு உள்ள' என்றான்‌ சம்பத். பிறகு கோகுல் சென்று விட, சம்பத் மட்டும் தனியே பேச ஆரம்பித்தான். 'நானும் பாத்துட்டு தான் இருந்தேன், உன்னையே வச்ச கண்ணு வாங்காம அப்படி பாக்கிறா.....' என்றான்.

'யாருடா....?' என்றேன்.

'அதான் உன்‌ கேரளா‌ ஃப்ரெண்ட்டு..... ஒன்னும் சரியில்லடா சூப்பரு.... பாத்துக்கோ' என்றான்‌ நக்கலாக.

முக்கியமான மூன்று பேரும் சொல்லியாகி விட்டது. நான்காவது ஆளை காணவேயில்லை. சில எதிர்பார்ப்புகள் இப்படிதான் ஏமாற்றம் தரும்.

அடுத்த நாள் காஜா அகமது இரண்டாம் வருடத்துக்கான டூர் அறிவித்தார். குற்றாலம், கொடைக்கானல் மற்றும் மூணார். வீட்டில் சொன்னேன் முதல் மதிப்பெண் வாங்கி காட்டியதாலோ என்னவோ அப்பா ஒத்துக் கொண்டார். டூர் தொடங்கியது. பஸ்ஸில் பாடல்கள் ஒலிக்க ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக பயணம் தொடங்கியது. குற்றால அருவியில் குளிக்க எல்லோரும் இறங்க தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு முன்பே வாத்தியார்கள் குளிக்க சென்று விட்டனர். சட்டை பேண்ட்டை கழற்றி விட்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக குளிக்கச்சென்ற காஜா அகமது அருவியின் நீர் வேகத்தையும் குளிரையும் தாங்க முடியாமல் சீக்கிரமே ஓடி வந்து விட்டார். '"ரொம்ப குளிருதுடா, பாத்து குளிங்க... பி கேர் ஃபுல்" என முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு சொன்னவரின் கழுத்துக்குக்கீழே சகலமும் ஆடிக்கொண்டிருந்தது. 

குற்றாலம் முடிந்து கொடைக்கானல் மலை மேல் ஏறத்துவங்கிய போது நல்ல டேன்ஸ் பாடல்கள் போட்டு இருபக்க இருக்கைகளின் இடையே இருக்கும் இடைவெளியில் நண்பர்கள் ஆடத்தொடங்கி விட்டனர். ஆட்டத்தின் நடுவே ஆசிரியர்களையும் ஆட கூப்பிட்டனர். காஜா நான் போடுகிறேன் பார் ஸ்டெப் என கெத்தாக எழுந்து வத்தார். அப்போதே அவரை தாக்க ஒரு திட்டம் போட்டோம். சம்பத் மட்டும் அவர் ஒரு ஆண் வாத்தியார் என்பதனால் கொஞ்சம் கரிசனம் காட்டினான். ரமணாவில் ஒரு மாணவன் சொல்வது போல் 'கொல்லும்போது வலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்பது போல் சொன்னான். பஸ்ஸின் குலுக்கலில் இரு பக்க கம்பிகளையும் பிடித்து நடந்து வந்து பசங்களுக்கு நடுவே நின்று ஆரம்பித்தவர் பஞ்சாபி பல்லேலக்கா போன்று இரு கைகளையும் உயர்த்தி ஆட ஆரம்பித்தார். அப்போது சொல்லி வைத்தார் போல மலையில் ஒரு வளைவு வர, பஸ்ஸில் எல்லோரும் சரிய, தீனா எனும் ஒரு மாணவன் அவர் தோளில் சாய்வது போல தள்ளி விட்டான். நிலை தடுமாறி கீழே விழுந்தர் மீது நின்று கொண்டிருந்த எல்லோரும் மிதித்து தள்ளி விட்டனர். தீனா 'கழுத்திலயே மிதிச்சிறட்டுமா' என்றான். 'போதும் பாடிய தூக்குங்கடா' என்று எல்லோரும் தூக்கி விட மனுசன் தலை கலைந்து, சட்டை கசங்கி எழுந்து நின்றார். 'சாரி பஸ் சரிந்ததனால இப்டி ஆயிடுச்சு ' என அவரே சொல்லிவிட்டு போய் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிய போது. வீணா அமர்ந்திருந்த சீட் வரிசையிலேயே அவளின் இடது புறமிருந்த சீட்டிலேயே அமர்ந்து கொண்டேன். இரு சீடடுக்குமிடையே நடந்து செல்லும் இடைவெளி இருந்தது. இரவு எல்லோரும் தூங்கப்போகும் நேரமென்பதால் ராஜா கேசட் போட்டனர். முதல் பாடலே 'வளையோசை கல கல கல வென....' அவள் தூங்குவதற்காக இருக்கையை பின்னால் சாய்த்து தோளில் சிறிய தலையணை வைத்து உறங்க ஆரம்பித்தாள். அவள் முகம் என்னை நோக்கியவாறு இருந்தது. பாடல் முடிந்து அடுத்த பாடல் வந்தது. சட்டென எழுந்தவள் 'ஏய்.... அந்த பாட்ட திரும்ப போடுங்க.... வளையோசை பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு' என சொல்லி விட்டு.... மீண்டும் கண் மூடினாள்.  பஸ்ஸில் விளக்குகள் அணைக்கப்பட்டது. அவள் உறங்கலை காண எனக்குள் ஒரு ஆர்வம். அவள் புறம் திரும்பி அவளின் கண்மூடிய முகத்தை நான் காணத்துவங்க மீண்டும் ஒலித்தது 'வளையோசை கல கல கலவென.......!!!!'

- தொடரும்

Friday, January 3, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 8 - காற்றே என்‌வாசல் வந்தாய்

சிறிது நேரம் மௌனம் காத்தவள் 'சரி, வரேன்' என்றாள்.

அவள் எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என சொல்லி விட்டு அவளை கூட்டிக்கொண்டு வர பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு க்ரீட்டிங் கார்டையும் ஒரு சிறு கிஃப்ட்டும் தந்தாள். பேசிக்கோண்டே வீடு வரை வந்தோம். என் கல்லூரியில் உடன் படித்தவர்களில் முதலில் என் வீட்டுக்கு வந்தது அவளாகத்தான் இருக்கும். சிரித்த முகத்துடனும், சிறு கூச்சத்துடனும் சிறந்த ஒரு வரவேற்பினை எதிர்பார்த்துதான் வீட்டுக்குள் வீட்டுக்குள் காலடி வைத்தாள். என் வீட்டிலோ எல்லாருக்குமே ஆவரேஜ் எக்ஸ்ப்பிரஷன்தான் இருக்கும். 

'என் க்ளாஸ்மேட் இங்க தண்டையார்பேட்டையில் தான் இருக்கிறாள்' என அறிமுகப்படுத்த, 

'அப்படியா, இங்க இருந்து டெய்லி போய்ட்டு வரியாமா' என அம்மா ஆரம்பிக்க, 

'இல்ல ஆண்ட்டி நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்' என அவள் பதில் சொல்ல, தொடங்கி விட்டது அவர்கள் இருக்குமான பரிபாஷனை. அதன் பிறகு நான் பேசியது ஓரிரு வார்த்தைகள் தான் இருக்கும். அவளின் வீடு எங்கிருக்கிறது என  ஆரம்பித்து கிட்டத்தட்ட அவளின் பூர்வீகத்தையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் அம்மா. சொல்லப்போனால் அவளுக்கும் எனக்கும் ஏதாவது இருக்குமோ ஒரு சிறு விசாரணைக்கமிஷன் தான் நடத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அவளும் சலிக்காமல் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அதுவரை தோழி என்றோ, உடன் படிக்கிறவள் என்றோ எந்த பெண் பிள்ளையையும் வீட்டுக்கு கூட்டி வந்ததில்லை நான். அதனாலேயே அவ்வளவு விசாரிப்புகள். அன்று அண்ணன் வீட்டிலில்லை, அப்பாவும் 'வாம்மா....' என்று மட்டும் சொல்லிட்டு வெளியே கிளம்பி விட்டார். அவள் குடுத்த கிஃப்ட்டை பிரித்துப்பார்த்தேன், சிறிய கண்ணாடி பெட்டிக்குள் செயற்கை மலர்க்கொத்து இருந்தது, மேலே ஹேப்பி பர்த்டே என பொறிக்கப்பட்டிருந்தது. அவள் கொடுத்த க்ரீட்டிங் கார்டை வீட்டில் காட்ட வில்லை, அதன் அட்டைப்படம் கொஞ்சம் ரொமாண்டிக் ஆக இருந்தது. ஒரு 10 வயது மதிக்கத்தக்க ஃப்ராக் போட்ட வெள்ளைக்கார சிறுமி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்க எதிரில் அதே 10 வயது மதிக்கத்தக்க டவுசர் டீசர்ட் போட்ட வெள்ளைக்கார சிறுவன் அவள் எதிரில் அவள் முகத்தை நோக்கியவாறே அதே சுவற்றில் தன் ஒரு கையை ஊன்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அவர்களிருவருக்கும் மேலே ஆங்கிலத்தில் பர்த்டே மெசேஜ் இருந்தது. 

ஒரு ஒருமணி நேரம் இருந்திருப்பாள். பிறகு கிளம்பினாள். நான் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன் என கூட சென்றேன். 'உன் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்கே இவ்வளவு தூரம் இருக்கே, டெய்லி இவ்வளவு தூரம் நடந்து வந்துதான் பஸ் ஏறுவியா' என்றாள்.

'ஆமாம்' என்றேன். 

'உங்க அம்மா நல்லா பேசுறாங்களே, நீ ஏன் ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேசுற...' என்றாள் 

'எனக்கு அப்டிதான் பேச வருது... அதுவுமில்லாமல் நாம யோசிக்காம பேசி எதுவும் தப்பா ஆயிடக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாக இருப்பேன்....' என்றேன்.

பஸ் ஸ்டாப்பை நெருங்கியதும் 'நான் உன் வீட்டுக்கு வந்ததை காலேஜில் சொல்ல வேண்டாம், அப்றம் சும்மாவே உன்ன ஓவரா ஓட்டுவாங்க, இது தெரிஞ்சா அவ்வளவுதான் கேக்கவே வேணாம்..... ஓக்கேயா....' என்றாள் 

'நானும் அதைத்தான் உன்னிடம் எப்படி சொல்வதென யோசித்துக்கொண்டிருந்தேன்....' என்றேன்

சிரித்துக்கொண்டே 'பி....ஃப்ராங்க்.....' என்றாள் 

பஸ் ஸ்டாப் வந்தது, மெயின் ரோட்டை கடக்கையில் அவளை அறியாமலே என் கையை பிடித்தாள், கடந்ததும் சட்டென கையை எடுத்து விட்டாள். 'பஸ் ஏறி கூட வருவியா, இல்ல இங்கியே கழட்டி விட்டுடுவியா.... ' என்றாள் 

அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட நான்தான் முதலில் ஏறினேன். சிரித்துக்கொண்டே பின்னால் ஏறினான். இடம் இல்லாததால் எனக்கு முன் சீட்டில் அமர்ந்தாள், ஆனால் திரும்பியவாறே என்னுடன் பேசிக்கொண்டேதான் வந்தாள்.

'எப்படி கேட்டதும் வர ஒத்துக்கிட்ட....' என்றேன்.

'வர ஐடியா இல்லதான், ஆனா பர்த்டே அதுவுமா உன்ன டிஸ்அப்பாயின்ட் பண்ண வேணாமேன்னுதான், ஒத்துக்கிட்டேன்..... இப்போ ஹேப்பி தான நீ....' என்றாள்

'கண்டிப்பா..... தேங்ஸ் ஃபார் கமிங்' என்றேன்.

சிரித்தாள். அவள் பஸ்ஸ்டாப் வந்தது இருவரும் இறங்கினோம். 'வா வீட்டுக்கு....' என்றாள். 'இல்ல இன்னொரு நாள் வரேன்...' என சொல்லி விட்டு மீண்டும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

அடுத்த நாள் கல்லூரி வந்ததும் நானும் சம்பத்தும் இன்னும் சில நண்பர்களும் கேண்டீனில் டீ குடித்துக்கொண்டிருந்தோம். வேக வேகமாக கேண்டீனுக்குள் வந்த கோகுல் நேராக சம்பத்திடம் 'மச்சி, மேட்டர் தெரியுமா, நேத்து சூப்பர் வீட்டுக்கு வீணா வந்துருக்காளாம்..... பர்த்டே ஸ்பெசல் போல' என ஆரம்பித்து வைத்து விட்டான்.

ஏற இறங்க பார்த்தான் சம்பத், 'காலைல பஸ்ல எங்கூடதான வந்தான், வாய தொறந்தானா பாத்தியா.....' என்றான்.

நான் யாரிடமும் சொல்லவில்லை, விஷயம் எப்படி வெளிய போச்சுன்னும் தெரியலை. அவள் மீது கோபம் வரவில்லை, அவள் ஹாஸ்டல் தோழிகள் வேலையாகத்தான் இருக்கும் எனும் புரிதல் மட்டும் வந்தது. 

கேண்டீனிலிருந்து வகுப்பிற்குள் வந்ததும் 'அப்றம் சும்மாவா வந்துருப்பா..., கிஃப்ட் எதாவது தந்துருக்கனுமே' என்றான் சம்பத்

பைக்குள் இருந்து அவள் குடுத்த க்ரீட்டிங் கார்டையும் கிஃப்ட்டையும் மெல்ல வெளியே எடுத்தேன். பட்டென்று பிடுங்கி பார்த்தான் சம்பத், பின் கோகுல்..... பின் அந்த கார்டை பார்த்தான் செழியன் , வகுப்பில் அவனைப்போலொரு விஷமி கிடையாது. வீணாவின் லேப் மேட் வேறு. எந்நேரமும் ஏதாவதொன்றை சொல்லி வகுப்பையே சிரிக்க வைத்து விடும் கல கல பார்ட்டி. கிரீட்டிங் கார்டை வாங்கினவன் நேரே ஓடிச்சென்று வகுப்பிற்கு முன் சென்று அந்த கிரீட்டிங்கார்டின் அட்டைப்படத்தை காட்டி 'இது வீணா, இது சுப்ரமணி.....' என சத்தமாக சொல்லி  எங்கள் இருவரையுமே கலாய்க்க ஆரம்பித்து விட்டான். அப்போது வீணாவும் வகுப்பிற்குள் இருந்தாள். 'டேய் சும்மா இருடா....' என சிரித்துக்கொண்டே அவனை நோக்கி சொன்னாள், நானும்தான். அவன் விடுவதாய் இல்லை. வகுப்பிற்குள் அப்போது நிறைய பேரும் இல்லை. இருந்த சிலரும் கமுக்கமாக வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்தனர். கோகுல் 'ஹா...ஹா...ஹாஹா' என சத்தம் போட்டே சிரித்தான். சம்பத் இவனபோய் டாப்பர்னு தூக்கி வச்சி கொண்டாடினனே, மறுபடியும் எனக்கு ஆப்பு வச்சிட்டானேனு என புலம்ப ஆரம்பித்து விட்டான். ஆக மொத்தம் ரகசியமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்த சம்பவம் கல்லூரி முழுவதும் போஸ்டர் அடிக்காத குறையாக பரவி விட்டது.

ஸ்டாஃப் ரூமிலிருந்து என்னை வர சொல்லி இருந்தார்கள். முதல் மார்க் மாணவன் என்பதனால் நீதான் க்ளாஸ் ரெப்ரசென்டேடிவ் பதவி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கெல்லாம் ஒரு தனி தகுதி வேண்டும் என அப்போது எனக்கு தெரியவில்லை, ஏற்றுக்கொண்டேன். பெண்கள் பக்கம் சிவகாமி. அப்போது புதிதாக ஒரு வாத்தி வந்து சேர்ந்திருந்தார். காஜா அகமது அவர் பெயர். எலும்பும் தோலுமான தேகம். இடுப்பில் நிற்காத பேண்ட். தொள தொள முழுக்கை சட்டை,  ஏற்கெனவே வழுக்கை விழுந்திருந்த அரை மண்டை, முன் பக்கம் மட்டும் கொஞ்சம் முடி. பார்க்கும் போதே எரிச்சல் வரும் முகத்தோற்றமும், பேச்சும், நடவடிக்கைகளும். நீங்கள் எல்லாம் இன்ஜினீயரிங் படிப்பதற்கே லாயக்கில்லை, யாருக்கும் இங்கே பெரிய அளவில் அறிவில்லை என மட்டம் தட்டி மட்டும்தான் பேசுவார். பெண்கள் தரப்பில் கூட அவர் மீது ஒரு வித வெறுப்புணர்வுதான் இருந்தது. மனதார யாரையும் பாராட்ட மாட்டார். நான் முதல் மார்க் வாங்கிய போது கூட கடமைக்கு கை குடுத்து விட்டு இதெல்லாம் ஒரு மார்க்கா.... அண்ணா யூனிவர்சிட்டி போய் பாரு எல்லாம் எவ்வளவு மார்க் வாங்குறாங்கன்னு தெரியும் என நக்கலாகவே பேசினார். 

நான் ரெப்ரசென்டேடிவ் ஆனதும் முதல் பஞ்சாயத்து என அவரிடம் போய்தான் நின்றேன். கல்லூரி பஸ்ஸில் மாலை பயணத்தின் போது நாங்கள் பாட்டு பாடிக்கொண்டும், தாளம் போட்டுக்கொண்டும் ஜாலியாக போவது வழக்கம். அன்று ஒரு நாள் அப்படி சென்ற போது அவர் பஸ்ஸில் இருந்திருப்பார் போல..... 'என்னடா பாட்டு பாடறீங்க பஸ்ஸுல.... கட்டிப்புடி கட்டிப்புடிடா .... கண்டபடி கட்டிப்புடிடானு பாட்டு பாடறீங்க ..... பஸ்ஸுல அத்தன பொண்ணுங்க வேற இருக்காங்க..... ஒரு மேனஸ் இல்ல .... ' என பெண்கள் குல காவலன் போல ஏகத்துக்கும் பொங்கிக்கொண்டிருந்தார். உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியா விட்டாலும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் (கொஞ்சம் ஜாலி டைப்) 'என்ன ப்ரச்சன சார்' என கேட்க, காஜா அகமது எங்களிடம் சொன்னதையே அவரிடமும் சொல்ல.... ' இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா சார்.... நானும்தான் அன்னக்கி பஸ்ஸுல இருந்தேன்.... பொண்ணுங்களே அத ஜாலியா என்ஜாய் தான் சார் பண்ணிட்ருந்தாங்க.... இதப்போய் பெருசா பேசிகிட்டு .... போங்கப்பா க்ளாஸுக்கு' என என்னையும் என்னுடன் வந்த சில நண்பர்களையும் அனுப்பி விட்டார். செம பல்பாகி போனது காஜா வுக்கு. நான் வெளியே போகும்போது திரும்ப என்னை கூப்பிட்டவர் 'போய், வீணாவ என்ன வந்து பாக்க சொல்லு' என்றார்.

அவ்வப்போது ஸ்டாஃப் ரூமுக்கு வீணாவை கூப்பிட்டு வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது அவரிடம். வகுப்பில் அவளையே கேள்வி கேட்பது, தப்பாக பதில் சொன்னால் சாக்பீஸை தூக்கி செல்லமாக அடிப்பது என அவ்வப்போது சில சில்மிஷ வேலைகளை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் ரெக்கார்ட் நோட்டுகளை கலெக்ட் செய்து ஸ்டாஃப் ரூமில் குடுக்க சென்ற போது அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீணாவை எதிரே நிற்க வைத்து பேசிக்கொண்டிருந்தார். நான் நோட்டுக்களை வைத்து விட்டு நேரே அவரிடம் சென்றேன். 'சார், இது உங்க பீரியட் நீங்க க்ளாஸுக்கு வரணும்' என்றேன். திமிராக என்னை பார்த்தவர் 'தெரியும், போ.... வரேன்' என்றார். திரும்பும் போது வீணா வை பார்த்து நான் கண் காண்பிக்க புரிந்து கொண்டவளாய் என்னுடனேயே வெளியே வந்து விட்டாள். 

'எதுக்கு அந்தாள் கிட்ட சும்மா போய் பேசிட்ருக்க....' என்றேன். 

'நான் என்னடா பண்றது....., சும்மா கூப்ட்டு வச்சி பேசிட்டே இருக்கான். சார் ஆச்சே, எப்டி , அவாய்ட் பண்றதுன்னு தெரில..... ' என்றாள். 

'அப்டி என்னதான் பேசுறான் உங்கிட்ட....' என்றேன்.

'ஒன்னுமே இல்லடா...சும்மா வெட்டியா எதாவது, உங்க ஊர்ல என்ன பேமஸு, நேந்திரம் சிப்ஸ் எப்படி பன்றாங்க, கதகளி ஆடத்தெரியுமா, ஊர்க்கார பையனுக்கு வேல வேணும் உன் அண்ணன் கிட்ட சொல்லி வாங்கித்தர சொல்லுன்னு ..... கண்டதும் பேசுறான்டா' என்றாள்.

அவர் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது. சந்தர்ப்பம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன்.

அந்த நேரத்தில் சில சீனியர்கள் ஜூனியர் பெண்களுக்கு கொக்கி போட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஷீலாவுக்கும் ஏற்கெனவே ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்திருந்தான். ஷீலா யெஸ் சொல்ல வில்லை என்றாலும் நோ சொல்லவில்லை. எவனாவது ஒரு சீனியர் எங்கள் வகுப்பிற்குள் வருவான் குறிப்பிட்ட ஒரு பெண்ணை கைகாட்டி கூட்டிப்போவான், அப்படி போனாலே அந்த பெண்ணுக்கு எவனோ ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்யப்போகிறான் என்று அர்த்தம். அன்று ஒருநாள் அப்படித்தான் வகுப்பிற்குள் வந்து வீணாவை கூப்பிட்டான் ஒரு சீனியர்.

- தொடரும்