Wednesday, February 15, 2017

பிரியக்காதல் - பகுதி 1



உறக்கமில்லா இரவு

உறக்கமில்லா பிறிதொரு இரவு, வேலை நிமித்தம் சுவிட்சர்லாந்தில் ஒரு சிறிய மலை உச்சியில் உள்ள ஹோட்டலில் தாமசம். மாறிய இடமோ அல்லது ஒவ்வாத இரவு உணவோ ஏதோ ஒன்று என்னை உறங்க விடவில்லை. நீண்ட நேரம் உருண்டு புரண்ட பிறகு பின் youtube ஐ browse செய்து அதில் ஒரு A R Rahman இன் பாடல் தொகுப்பை play செய்து விட்டு காதில் ear phone ஐ மாட்டிக்கொண்டு நித்திரை கொள்ள முயற்சித்தேன் ஆனால் நடந்ததோ வேறு. ரோஜா வில் தொடங்கி பம்பாய், காதலன், மின்சாரகனவு என ரகுமானின் இசை முன்னோக்கி நகர என் நினைவுகளோ பின்னோக்கி நகர தொடங்கியது. அந்த கானங்கள் என் பதின்மப்பருவத்தின் காதல் உணர்வுகளை ஊட்டி வளர்த்தவை. அந்த இரவு என் விடலைக்கால நினைவுகளை அசை போடும் சுகமான இரவாக மாறிப்போனது.

இது நடந்தது என் பதினோராம் வகுப்பில். ஒரு ஆணுக்கு காதல் என்பது இந்த வயதில்தான் வருகிறது என்றில்லை, பால்வாடியில் பக்கத்தில் அமரும் பெண் பிள்ளையிடமிருந்து தொடங்கி அ, ஆ, இ, ஈ சொல்லிக்கொடுக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியைக்கு தாவி பின் பல்லாங்குழி, பரமபதம் ஆடக்கூப்பிட்ட பக்கத்து வீட்டு அக்காவிடம் தொற்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே போகிறது. அதுவே பருவம் எய்தும் போது இளமைக்காதலாக உருவெடுக்கிறது. அதில் ஏதோ ஒன்றைத்தான் முதல் காதல் என முடிவு செய்கிறோம். இப்பருவத்தில் அவனுக்கு வாழ்க்கைத்துணை தேடலை விட ஒரு காதலிக்கான தேடலே அதிகமாய் இருக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன்.

முதல் காணல்

"ப்ரியா" - காதலிக்க ஏற்ற பெயர், என் பதின்ம காதல் உணர்வுகளின் மொத்த தாகத்துக்கும் அவளே சொந்தக்காரி ஆகிப்போனாள். அவளை முதன் முதலில் கண்டது ஒரு அற்புதக்காட்சி போல இன்றளவும் நினைவில் நிலைத்து நிற்கிறது. அன்று பள்ளியில் ஒரு Morning Prayer Assembly. காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்படும் நிகழ்வு. ஒவ்வொரு பெயராக வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது 11A section ல் "ப்ரியா" என்ற பெயர் அழைக்கப்பட்டது. எல்லோரின் கண்களும் அவளை எதிர்நோக்கியிருக்க முதிர்ந்த மலர் மொட்டிலிருந்து வெளிப்படும் மெல்லிதழ் போல கூட்டத்தின் நடுவிலிருந்து மெல்ல வெளிப்பட்டாள். அவள் பாதம் படும் மண்ணுக்கு வலிக்கக்கூடாது என்பது போல மெல்லிய நடை பயின்று வந்தாள். புன்சிரிப்புடன் தலைமை ஆசிரியர் முன் சிரம் சிறிது தாழ்த்தி சான்றிதழை பெற்றுக்கொண்டு திரும்பிச்செல்ல முற்பட்ட அவளின் அழகிய பெயர் மீண்டும் அழைக்கப்பட்டது, அடுத்த பாடத்திலும் அவள்தான் முதல் மதிப்பெண் அதற்கடுத்த பாடத்திலும் அவள்தான் முதல் மதிப்பெண். இப்படி மீண்டும் மீண்டும் அவள் பெயர் அழைக்கப்பட ஆழமாக என் மனதில் பதிந்து போனது அந்த எழில் (அரசியின்) பெயர். அவள் உருவத்துக்கும் அந்தப்பெயருக்கும் அவ்வளவு பொருத்தம். ஒரு நான்கைந்து சான்றிதழை பெற்றுக்கொண்டதும் அந்த கால் முளைத்த மலர் அதே மென்நடையில் மாணவியர் கூட்டத்திற்குள் சென்று மறைந்து விட்டது.

அப்போதைக்கு என் பார்வையிலிருந்து மறைந்துவிட்ட அவள் அன்று முழுவதும் என் நினைவிலிருந்து மறையவில்லை.  வட துருவம் அருகில் சென்ற தென் துருவ காந்தம் போல் தானாகவே அவள் என்னை ஈர்த்தாள். பள்ளிகளில் முதல் மதிப்பெண் மாணவிக்கான பொதுவான அடையாளம் என்பது எண்ணெய் வழித்து வாறப்பட்ட தலை, சுருக்கம் தோய்ந்த உடை, புத்தகத்துடனேயே நெளிந்து கொண்டிருக்கும் புழு, மதிப்பெண்ணுக்காக மனனம் செய்து கொண்டேயிருக்கும் மறை கழண்ட நிலை, இப்படி எந்த ஒரு குணாதிசயமும் அவளிடம் இல்லை. ஆகாயத்திலிருந்து அப்போதுதான் வந்திறங்கிய தேவதை போல அத்தனை வனப்புடன் இருந்தாள், நேர்த்தியான உடை, நேர் வகிடு எடுத்து, Side இருபுறமும் தூக்கிபடி slide குத்தி, பின்புற ஜடை அணிந்து அதை பாதியாக மடித்து உள்புறம் செருகி என அவளது சிகையலங்காரமே தனித்துவமான ஒரு வடிவில் இருந்தது. மடித்துக்கட்டிய ஜடையின் இருபுறமும்  கோபுரம் போன்று இரு கோடுகளாக மல்லிகைப்பூ தொங்க விடப்பட்டிருக்கும், சில நேரம் மல்லிகையின் நடுவில் கனகாம்பரமும் அலங்கரிக்கும். அதைக்காணவே பல நாள் அவளை எதிர்பார்த்து காத்திருந்ததுண்டு. இன்று வரை அப்படியொரு நேர்த்தியான சிகையலங்காரம் பார்க்கவில்லை நான். பச்சமலப்பூவு (கிழக்கு வாசல்) பாடலில் பார்த்த ரேவதியின் அதே முகவண்ணம் அதே சிகைவண்ணம்.

காணல் தொடர்ந்தது

ஒவ்வொரு நாளும் அவளை எப்போது பார்ப்போம் என தேடத்தொடங்கியது மனது. அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ் நான் பயாலஜி. நாங்கள் வெவ்வேறு பிரிவென்பதால் அங்குள்ள சில நண்பர்களை காண வேண்டி வெறுமனே அங்கு செல்ல தொடங்கினேன். அவள் கடந்து போகும் நேரம் ஓரக்கண்ணில் அவளை பார்ப்பேன்(சைட் அடிப்பேன்), அவ்வழி அவள் கடந்துபோகும் வரை அவள் மீதான என் பார்வை விலக மறுக்கும். அவளோ என்னை திரும்பிப்பார்த்ததாக கூட நினைவில்லை. இப்போதுள்ள விடலைகளை போல் அவ்வகுப்பு நண்பனை பிடித்து மச்சான் ஒரு இன்ட்ரோ குட்றா என கேட்க தெரியாத கால கட்டம். இப்படியாக ஆரம்பித்த அவளைப்பற்றிய எண்ண ஓட்டம் நாளடைவில் காதலாக (சேர்ந்தால் காதல் சேராவிட்டால் infactuation) மாறத்தொடங்கியது. கண்கள் அவள் வரும் திசையை எதிர்நோக்க ஆரம்பித்தது. அவள் வகுப்பை கடக்கும் போது, காலை Prayerக்கு செல்லும் போது, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது என எந்த தருணத்தையும் தவறவிடாமல் அவளை பார்த்தேன். இது போன்ற ஒரிஜினல் தேவதைகளுக்கு அதன் சாயலை ஒத்த அதே போன்ற டூப்ளிகேட்களும் கூடவே வருவதுண்டு. அப்படி வந்த டூப்ளிகேட்டின் பெயர் 'கவிதா', அதே போன்ற சிகையலங்காரம் ஆனால் அவளை விட உயரம், அதே போன்ற Makeup ஆனால் மாநிறம் என சரியாக எடுக்கப்படாத Xerox copy போன்று கவிதா உடனிருக்கும் போது பிரியா ஒரு படி அதிகமாகவே அழகாய் தெரிந்தாள்.

ஒரு நாளுக்கு எத்தனை முறை அவளை காண்கிறேனோ அத்தனை சந்தோஷம் அந்த நாள் எனக்கு. வீட்டிற்கு வந்ததும் தனியறை சென்று ரஹ்மான் பாடல்களை போட்டுவிட்டு (ராஜாவை பற்றிய அறிவு அப்போது இல்லை) கண்மூடி அந்த நாளில் அவளை  கண்டதின் நினைவுகளில் மூழ்கிவிடுவேன். இது ஒரு வழக்கமாகவே ஆகி விடத்தொடங்கி விட்டது. பத்தாம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிக்கொண்டிருந்த நான் இப்போது எல்லா பாடத்திலும் பாஸ் மார்க் வருமளவு மட்டுமே படித்தேன், சில நேரம் ஃபெயிலும் ஆனேன், ட்யூஷன் சரியில்லை என அப்பா நினைத்தார். பாடம் கஷ்டம் போல என அம்மா நினைத்தாள். Actualஆக நினைவுகள் மாறியது, சிந்தனைகள் மாறியது, மதிப்பெண்கள் பற்றியெல்லாம் கவலை கொள்ள தோணவில்லை, நான் மார்க் வாங்கும் கருவியல்ல ஒரு உணர்வுபூர்வமான மனிதன் என்ற புரட்சிகரமான சிந்தனைகளெல்லாம் தோன்றியது. மற்ற மாணவர்களெல்லாம் cutoffக்காக முக்கிக்கொண்டிருந்த போது நான் மனதை கட்டவிழ்த்து விட்டிருந்தேன். எனக்கென ஒரு உலகம் உருவாகத்தொடங்கியது அதை அவள் மட்டுமே ஆட்சி புரியத்தொடங்கினாள்.

அவளின் முதல் பார்வை

சரி இப்போது அவளின் பாகம், அவளுக்கு நான் யார் என தெரியப்போகும் தருணம் வந்தது, அன்று ஒரு சுதந்திர தின கொண்டாட்டம் (1996), மாணவர் அனைவரையும் பள்ளிக்கு வர சொல்லி கொடியேற்றி பின் கலைந்து செல்லும் முன் இனிப்பு கொடுத்துக்கொண்டிருந்த தருணம். இரு அப்பாவி நண்பர்களை உடன் வைத்துக்கொண்டு அவள் இருக்கும் திசைக்கு என் பார்வையை திருப்பினேன். அவளுக்கும் எனக்குமான தூரம் சற்று அதிகம்தான். வழக்கம் போல அவளுடனும் இரு தோழிகள் அதில் ஒன்று கவிதா. ஒரு ஹிப்னாடிச புத்தகத்தில் படித்திருக்கிறேன் ஒருவரைப்பற்றி ஆழமாக சிந்தித்து அவரின் இரு புருவங்களுக்கு நடுவே உற்றுநோக்கினால் அந்த நபரை நம்மை நோக்கி திரும்ப வைக்க முடியுமாம், அது இங்கே பலித்ததா அல்லது எதேச்சையாக நிகழ்ந்ததா என்று எனக்கு தெரியாது ஆனால் அவள் என்னை பார்த்தாள், நான் பார்த்ததை அவள் பார்த்தும் விட்டாள் எனக்குள் படபடப்பு தொற்றிக்கொண்டது இருந்ததாலும் வைத்த கண்ணை எடுக்க மனமில்லாமல் (குருட்டு தைரியத்துடன்) அவளையே பார்த்தேன். அவளோ ஒரு முறை குனிந்து கீழே பார்த்துவிட்டு மீண்டும் விழியுயர்த்தி என்னை நோக்கினாள். நானும் என் பார்வையை விலக்கவேயில்லை. இம்முறை அவள் உடனிருந்த தோழியை (கவிதாவை) கூப்பிடுகிறாள் அவளும் என்னை திரும்பி பார்க்கிறாள். யார் பார்த்தால் எனக்கென்ன நான் நினைத்தது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அவளுக்கு என்னை தெரிய வைக்க வேண்டும், நான் அவளைக்காண தவமிருக்கிறேன் என அவளுக்கும் புரிய வைக்க வேண்டும், இன்று அதற்கான விதையைதான் ஊன்றிக்கொண்டிருக்கிறேன். இப்படி நாங்கள் பார்க்க ஆரம்பித்ததுமே கூட்டம் கலைய ஆரம்பித்தது எல்லோரையும் வீட்டுக்கு போக சொல்லி அனுப்பி விட்டார்கள் (சண்டாளர்கள்) வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

அன்று முதல் அவள் என்னை கடந்து போகும் நேரங்களில் அவள் பார்வையும் என்னை நோக்கி திரும்ப ஆரம்பித்தது. நான் அவளை பார்க்கிறேன் என்பது அவளுக்கு புரிந்ததாலோ என்னவோ நான் பார்க்கிறேனா இல்லையா என தெரிந்து கொள்ளவாவது அவள் என்னை பார்த்திருக்க கூடும். முன்பு எப்போதெல்லாம் அவளை கண்டேனோ அதே இடங்களில் இப்போதும் அவளை காண்கிறேன் ஆனால் இப்போது அதே இடங்களில் அவளும் என்னை காண்கிறாள். அதை என் இரு டுபாக்கூர் நண்பர்களும் காண்கின்றனர்.

பார்க்கும் படலம் தொடங்கி விட்டது அடுத்து பேசும் படலம் ஆரம்பிக்க வேண்டும். வாய்ப்பு தேடி அலைகிறேன். ஒன்றும் அமைய வில்லை. தூரத்தில் நான் இருக்கும்போது என்னை கண்டவள் நாங்கள் ஒருவரையொருவர் எதிர் கொள்ளும் வேளையில் வளைந்த தாமரை மொட்டைப்போல் சிரம் தாழ்த்திக்கொள்கிறாள். அப்படி செல்பவளை வலுக்கட்டாயமாக பெயர் சொல்லியோ ஹலோ என்றோ கூப்பிடும் தைரியம் அப்போது இல்லை.  இப்படியே சென்று கொண்டிருக்க அவளை பள்ளிக்கு வெளியே அவளை காண வேண்டும் என்று தோன்றியது. 


தொடரும் .....

Monday, January 30, 2017

கடந்து போன தேவதைகள் - 1

பள்ளிக்காலம்.

 7ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு சென்ற காலம், அரை ட்ரௌசரிலிருந்து முழு ட்ரௌசர் போட ஆரம்பித்த காலம், அப்படியே சிறுமிகள் பக்கம் பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறியிருந்த காலம், இடையிடையே சிறுமிகள் இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு எடுப்பதும் காரணம் கேட்டால் அவள்கள் பதில் கூறாமல்  சிரித்தும் சென்ற காலம். 

 தேவதை 

வகுப்பிலிருந்த சிறுமிகளின் நடுவே சற்றே வனப்புடனும், சற்று உயரத்துடனும் தனியாக தெரிந்தாள் சுஜாதா. பாவாடை சட்டையில் வருபவள் ஓரிரு தினங்கள் தாவணியில் வரும்போது பெண்கள் கண்களும் அவள் பக்கம் நோக்குவதை தவிர்க்க முடியாது. எத்தனை கண்கள் அவளை நோக்கினாலும் அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை எனும் விதத்தில் அவள் நடந்துகொள்வதே தனி அழகு. கடும் வார்த்தைகளை பயன்படுத்தும் ஆசிரியர்கள் கூட அவளிடம் சற்றே கனிவாய் நடந்து கொள்வது அவள் அழகுக்கே கிடைத்த மரியாதை. அக்கால சிறுவர்கள் நாங்கள் அவ்வளவு எளிதில் பெண்களுடன் பேசிவிட மாட்டோம் (பேசவும் தெரியாது).  வருகைப்பதிவேட்டின் புண்ணியம் அத்தனை பெண்களின் பெயர் மட்டுமே தெரிந்து வைத்திருந்தது உத்தமம்.

கோவில் தரிசனம்

ஒரு நல்லநாள். பள்ளி விடுமுறை. கோவிலில் சாமி கல்யாணம். அம்மாவுடன் நானும் சென்றிருந்தேன் சாமி கல்யாணம் காண. கூட்டம் எனக்கு சற்று ஒவ்வாமை ஆதலால் சற்று விலகியே நின்றேன். சாமி கல்யாணம் காண வந்துகொண்டிருந்தவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன், அப்போது அங்கு சுஜாதா அவள் அம்மாவுடன் வந்து கொண்டிருந்தாள், பட்டுப்பாவாடை சட்டையில் பட்டுப்போன்ற அவள் வண்ணம் சுண்டி இழுத்தது. சீருடையில் மட்டுமே கண்ட அவளை முதல்முறை வண்ண ஆடையில் காண்கிறேன். அவளும் என்னை கண்டுகொண்டாள். கண்டு என்ன செய்ய அப்போதுதான் பேச்சே கிடையாதே சக மாணவன் எனும் முறையில் வெறும் புண்சிரிப்பு மட்டும்தான். சாமி கல்யாணம் முடியும் வரை கூட்டத்தில் நான்கைந்து முறை எதேச்சையாக பார்த்து சிரித்திருப்போம் பிறகு போகும் போதும் அதே சிரிப்புடனே கடந்து சென்றாள். அவள் கடந்து சென்றாலும் அந்த சிரிப்பு என்னுடனே தங்கிவிட்டது.

முதல் தீண்டல்

சுத்தமாக விலகியேயிருந்த ஆண்களும் பெண்களும் ஏதோ ஒரு தருணத்தில் பேசத்துவங்கியிருக்கின்றனர். அது மதிய உணவு இடைவெளியில் ஓடிப்பிடித்து விளையாடும் வரை டெவலப் ஆயிருக்கிறது அதில் ஆண்கள் அணி பெண்கள் அணியில் உள்ளோரை விரட்டிப்பிடித்து தொட்டால் அவர்கள் அவுட். நல்லாயிருக்கிறதே என நானும் சேர்ந்துகொண்டேன், நான் ஓடிச்சென்று தொட முயற்சித்த பெண்கள் எல்லாம் ஆல்ரெடி அவுட் ஆயிருந்தனர், அட்ப்போடா என சலிப்புடன் ஒரு குட்டிச்செவுத்தில் உட்கார்ந்திருந்தேன் அப்போது இன்னொரு வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சென்று கொண்டிருந்தாள் சுஜாதா. அப்போது பொறுமையாக பூனை போல் அவள் பின்னால் சென்று அவளுடனேயே நடந்து சென்றேன். யதேச்சையாக திரும்பிப்பார்த்தவள் என்னைக்கண்டதும் 'ஆ!' என கத்தினாள், நான் அலட்டாமல் அவள் தோளைத்தொட்டு அவுட் என்றேன். இது நடந்தது staff roomக்கு நேரே. அதே நேரம் எங்களுக்கு நேரே இன்னொரு மாணவன் ஒரு பெண்ணை துரத்திச்சென்று பிடிக்க அவள் கீழே விழ, இவ்விரு சம்பவங்களும் தலைமை ஆசிரியர் காதுக்கு எட்ட எங்களின் ஓடிபிடி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

ஏதோ ஒரு கருப்பன்

 8, 9, 10 ம் வகுப்பு முடிந்து +1 அதே பள்ளியில்  சேர்ந்த போது அதே வகுப்பில் சுஜாதா இருப்பாள் என எதிர்பார்க்க வில்லை. தொடர்ந்து ஈர்க்கிறாளே காதலித்து விடலாமா என நினைத்த போதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது, அவன் பெயர் ஏதோ ஒரு கருப்பன் சரியாக நினைவில்லை ஆளும் கருப்புதான் அந்த சிறு வயதிலேயே தொப்பையும் சகிதமுமாய் காட்டான் போல இருந்தான். கிரிக்கெட் விளையாடும் வகை எனக்கு அவனை தெரியும். அவன் சுஜாதாவை காதலிப்பதாக நண்பர்களுக்குள் பேச்சு அடிபட்டது. அவனைப்பார்த்தாலே அவளுக்கு இவனா என நினைக்கத்தோன்றும் அப்படி இருந்தான், பேசினால் அதற்கு மிச்சம். அப்போதெல்லாம் அடுத்தவன் விரும்பும் பெண்ணிடம் விலகி இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத கண்ணியம் தானாகவே இருந்து வந்தது ஆகையால் அது தெரிந்ததுமே அந்த எண்ணம் அன்றிரவு சிறு கவலையுடனே மறைந்தது. அதிலிருந்து அவளை பார்க்கும் போது அடுத்தவன் காதலி என்றே தோன்றியது. நாட்கள் செல்லச்செல்ல அந்த ஏதோ ஒரு கருப்பன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை.

 கடைசி நாள்

+2 வும் முடிந்தது. கடைசி  நாள் மறுபடியும் ஆண் பெண் நட்பு பூக்கத்தொடங்கியது. 2 வருடங்கள் விலகியிருந்த ஆண்களும் பெண்களும் அன்றெப்படியோ பேசியிருக்கின்றனர். எல்லாம் முடிந்து க்ரூப் போட்டோ எல்லாம் எடுத்து விட்டு வீடு கிளம்புப்போது வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் பள்ளி வாசலிலே நண்பர்கள் நின்றுகொண்டிருந்தோம். சுஜாதா தன் தோழிகளுடன் வீட்டுக்கு கிளம்பினாள். என் சில நண்பர்கள் தினமும் அவள் பின்னால் அவள் வீடு வரை பாடிகார்ட் போல போவார்கள் போல. அன்றைக்கும் அப்படியே சென்றனர் என்னையும் கூட கூட்டிச்சென்றனர். அவள் வீடு வந்தது. அவள் வீட்டுக்குள் ஏறியவள் சட்டென வெளியே வந்தாள். "மச்சா ஓடிட்லாமா" என்றேன் நண்பனிடம். அவன் "சும்மா இரு" என்றான். வெளியே வந்தவள் சிரித்துக்கொண்டே எங்களை பார்த்து "ஹேய், வீட்டுக்கு வாங்க என்றாள். நாங்கள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி இனி வேறு வழி இல்லை என்று வீட்டுக்குள் சென்றோம் அந்த ஈரடுக்கு வீட்டில் முதல் தளத்தில் இருந்தது அவள் வீடு. வீட்டுக்குள் சென்றதும் அவள் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தவள் இருந்து சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினாள். நாங்கள் வரப்போகும் முன்னறிவிப்பு இல்லாவிட்டாலும் எல்லா சாப்பாடும் தயாராகவே இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் அவள் வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மிகவும் சகஜமாக, நன்றாகவே பேசினாள். அவள் ஒரு நல்ல தோழிக்கான மெட்டீரியல் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. பேச்சு வாக்கில் அந்த கருப்பனை பற்றி கேட்டேன், அவன் யாரென்றே தெரியாது என்றாள். சிறிய ஒரு மகிழ்ச்சி.

தினமும் அவள் பின்னால் வரும் என் நண்பனிடம் இனிமேல் அப்டியெல்லாம் வரவேண்டாம் என அன்பாக கடிந்து கொண்டாள். நீண்ட நேரம் பேசிவிட்டு விடை பெற்றோம். கீழே இறங்கி நடக்கும் போது பால்கனியிலிருந்து கை ஆட்டி வழியனுப்பினாள். எதிர்பாராமல் நடந்தாலும் அந்த சம்பவம் இனிமையாகவே இருந்தது.

கல்லூரிக்காலம்

அக்கால கட்டத்தில் இஞ்சினீயரிங் என்பது கனவு. எப்படியோ எனக்கது கிடைத்து விட்டது, ஆனால் என்னுடன் பயின்ற அத்தனை பேருமே பெரும்பாலும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மட்டுமே சேர்ந்து படித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் சுஜாதா சேர்ந்து விட்டாள் எனும் செய்தி கிடைத்தது. கடைசிநாளில் தொடங்கிய நட்பாதலால் விட்டகுறை தொட்டகுறை போன்று பாதியிலேயே நின்றது. எனக்கு இஞ்சினீரியங் கல்லூரி தொடங்க சிறிது நாள் இருந்த போது அவள் கல்லூரி ஏற்கெனவே தொடங்கியிருந்தது. காலையில் அவள் கல்லூரி செல்லும் நேரம் அறிந்து கொண்டு அதே நேரம் பஸ்ஸ்டாண்ட்டுக்கு சென்று அதே பஸ்ஸில் ஏற வேண்டியது, அவளுடன் ஒரு நான்கைந்து ஸ்டாப் வரை பேசிக்கொண்டே சென்று

விட்டு பிறகு இறங்கி விட வேண்டியது. அது வரை சீருடையில் மட்டுமே பார்த்தவளை வண்ண வண்ண சுடிதாரில் பார்த்து ரசிப்பதற்கே தினமும் செல்ல பிடித்தது. பிறகு என் கல்லூரி தொடங்கியதும் அவளை காண்பதே அறிதாகி விட்டது.

அண்ணன் கல்யாணம்

நான்கு வருடங்கள் இஞ்சினீயரிங் முடிக்கும் வரை ஒரு தடவை கூட சுஜாதாவை பார்க்கவில்லை. இஞ்சினீயரிங் முடித்ததும் என் அண்ணன் கல்யாணம் முடிவானது. என் பக்கமிருந்து என் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுத்துக்கொண்டிருந்த போது சுஜாதாவை கூப்பிடலாம் என்று தோன்றியது. வழக்கம் போல அந்த பழைய நண்பனை கூட்டிக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றோம். அதிர்ஷ்டவசமாக அவள் வீட்டிலிருந்தாள் மிக்க சந்தோஷம் அவளுக்கு கண்டிப்பாக வருவதாக சொன்னாள். மீண்டும் அதே வராண்டாவில் அமர்ந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். போகும்போது அதே போல் பால்கனியிலிருந்து கைஅசைத்து வழியனுப்பினாள். அவளை பார்த்த சந்தோஷத்தில் ஓட்டிச்சென்ற tvs xl ஐ சற்று வேகமாக முறுக்க அது வேகத்தடையில் ஏறி skit ஆகி அங்கேயே சில்றை . விழுந்ததை விட முக்கியமாக அவள் பார்த்திருக்கக்கூடாதே என பால்கனியில் நோக்கினேன் நல்லவேளை அவள் அங்கு இல்லை. சற்றும் தாமதியாமல் அங்கிருந்து விலகிவிட்டேன்.

அண்ணன் receptionல் அவள் வரவை எதிர்பார்க்கவில்லை என்றாலும் வருவாள் என தோன்றியது. கல்லூரி நண்பர்களுடன் நான் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது யதேச்சையாக வாசலை பார்த்த போது அவள் அவள் தோழியுடன் கையில் கிஃப்ட்டுடன் உள்ளே வந்துகொண்டிருந்தாள். அவள் கண்கள் அப்போதே என்னை தேடத்தொடங்கியிருந்தது. அவளுக்கு அங்கு என்னை விட்டால் வேறு யாரையும் தெரியாது. ஓடிச்சென்று அவளை வரவேற்றேன். நண்பர்களிடம் அறிமுகம் செய்தேன். அவர்கள் வம்பு செய்தனர் புன்னகையுடன் எல்லாவற்றையும் கடந்து போனாள். அவள் வரவு அன்றைய என் நாளை சரியாக பூர்த்தி செய்தது போலிருந்தது.

கல்யாண பத்திரிக்கை

காலம் உருண்டோடியது, வேலையின் பொருட்டு நான் வெளியிலேயே சுற்றித்திரிந்த காலம். அப்படி ஒரு முறை வெளியிலிருந்து வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்த போது என் பள்ளித்தோழி ஒருத்தி என் வீட்டுக்கு வந்து அவள் கல்யாண பத்திரிக்கை கொடுத்து விட்டு போனதாக சொன்னார்கள். நான் பேர் என்ன என்று கேட்ட போது சுஜாதா என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது எனக்கு. எனக்காவது அவள் வீடு தெரியும் அவளுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்று கூட தெரியாது. ஆனாலும் என் ஏரியாவிலிருந்த அவளுடைய இன்னொரு தோழியிடம் விசாரித்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. இத்தனை வருடங்கள் கழித்துன் எனக்கு பத்திரிக்கை குடுக்க மெனக்கிட்டிருக்கிறாள் என்று தெரிந்தது.

மணக்கோலம்

அவள் reception க்கு எப்படியும் போய்விட வேண்டும் என்று தோன்றியது. என் இன்னொரு நண்பனையும் கூட்டிக்கொண்டு போனேன். இத்தனை வருடங்கள் கழித்து அவளை பார்க்கப்போகிறோம் என உள்ளூர ஒரு மகிழ்ச்சி இருந்தது. மண்டபம் உள்சென்று மணக்கோலத்தில் அவளைக்கண்டதும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து நின்றேன். அங்கு நின்று கொண்டிருப்பது நாங்கள் பள்ளிக்காலத்தில் கொண்டாடித்தீர்த்த அந்த  சுஜாதாவே அல்ல.

முகம் நீண்டுபோய்,  கன்னம் ஒட்டிப்போய், பற்கள் வெளியே நீண்டுபோய் பார்ப்பதற்கே விகாரமாய் இருந்தாள். ஏன் இப்படி ஆனாள்? என்ன ஆயிற்று இவளுக்கு, இந்த கால இடைவெளியில் என்ன நடந்தது அவள் வாழ்க்கையில் இப்படி விடை காண முடியாத பல கேள்விகள் எனக்குள். அவள் பக்கத்தில் மாப்பிள்ளை என நின்று கொண்டுருந்தவர் சத்தியமாக அவளுக்கேற்றவன் இல்லை. மணமேடையில் சாதாரண சட்டை பேண்டுடன் நின்று கொழ்ன்சிருந்தது அந்த மெல்லிய ஒரு உருவம். மேடையில் கிஃப்ட் குடுக்க ஏறி நின்று அவளிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது 'நீ ஏன் இப்படி ஆயிட்டே சுஜாதா' என கேட்க வந்த வாய் 'ஹேப்பி மேரீட் லைஃப்' என்று மட்டும் சொன்னது.   மறுமொழி எதிர்பார்க்காமல் விறுவிறுவென மேடையில் இருந்து இறங்கி விட்டேன்.

அங்கிருந்து கிளம்ப தயாரானேன் அப்போது ஒரு நிமிடம் என மேடையிலிர்ந்து கை காண்பித்தாள். மீண்டும் மேடை ஏறினேன். மெல்ல காதோரம் வந்து வந்ததற்கு மிகவும் நன்றி என்றாள். புன்சிரிப்புடன் அவ்விடமிருந்து நகர்ந்து விட்டேன்.

அதற்குப்பிறகு அவளை என் வாழ்வில் சந்திக்கவே இல்லை. ஏதோ ஒரு அதிகாலை வேளை நான் பஸ்ஸில் பயணித்த போது ஒரு பஸ்ஸ்டாப்பில் அவள் கையில் பையுடன் நின்றது தெரிந்தது. வேலைக்குப்போகிறாள் என தோன்றியது. அவள் என்னை பார்ப்பதற்குள் பஸ் கடந்து சென்று விட்டது. இப்போது இன்னும் பல வருடங்கள் சென்று விட்டது. என் ஊருக்கு நான் செல்வதே அரிதாகி விட்டது. எப்போதாவது செல்லும்போது அவள் வீட்டை கடக்க நேரும்போது இப்போதும் அந்த பால்கனியிலிருந்து அவள் கையசைப்பது போன்ற ஒரு பிம்பம் தோன்றி மறையும்.