Friday, September 21, 2018

பிரியக்காதல் - பகுதி 2

அவள் வீடு தேடி

பல நாள் பள்ளி சீருடையிலேயே பார்த்த அவளை வண்ண உடையில் பார்க்க வேண்டும் என ஓர் ஆசை எழுந்தது. அவள் வசிக்கும் பகுதியை சில நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அங்கே எப்படி போகலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது எங்கள் பள்ளியிலிருந்து யானைக்கால் நோய் தடுப்புக்கு மாத்திரை கொடுக்க volunteers மாணவர்களை நகராட்சியிலிருந்து நகர் வாரியாக அனுப்பினார்கள். அப்போது காலை முன் கூட்டியே சென்று அவள் இருக்கும் ஏரியா எனக்கு வருமாரு தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டேன்.  அவள் வசித்து வந்த பகுதி மாணிக்கம் நகர் என பெயரிடப்பட்டிருந்தது, அதில் ஒவ்வொரு வீட்டின் பெயர் லிஸ்ட்டிலும் அவள் பெயரை தேடிக்கொண்டிருந்தேன். உடன் வந்த நண்பனோ சீக்கிரம் போகலாம் என அவசரப்படுத்தினான். ஒவ்வொரு வீடாய் சென்று நகராட்சியில் சொல்லிக்கொடுத்த டயலாக்ஸை சொல்லி (ஒப்பித்து) எதனால் இந்த நோய் வருகிறது என விளக்கி மாத்திரை கொடுக்க வேண்டும். சில வீட்டில் வாசலிலே வந்து வாங்கிக்கொண்டு போனார்கள், சில வீட்டில் படிக்கின்ற பிள்ளைகள் என வீட்டுக்குள் கூப்பிட்டு காபி கொடுத்தார்கள், சில வீட்டில் நாய் துரத்தியது, சில வீட்டில் யாரும் இல்லை நாளைக்கு வாங்க என்று சத்தம் மட்டும் வந்தது - அசரீரி போலும்.... காதலுக்காக என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது.

ப்ரியா என பெயருள்ள வீடுகள் ஒரு ரெண்டு மூன்று இருந்தது அதில் எது என்னவளின் வீடு என குழப்பமாய் இருந்தது. கிட்டத்தட்ட அவள் வீட்டை நெருங்குகையில் அட நம்ம டூப்ளிகேட் கவிதா வீடு அவளும் எங்களை பார்த்து விட்டாள். நம்ம ஸ்கூல் பசங்க எனும் ஆச்சர்ய ரியாக்சன் அவள் முகத்தில், கண்டுகொள்ளவில்லை நான்... உன்னைப்பார்க்கவா வந்தேன் எனும் ரியாக்ஷன் என் முகத்தில். 

இப்போது ப்ரியா வீடு கேட் தட்டுகிறோம் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் (அவள் அப்பாவாக இருந்திருக்க வேண்டும்) வெளியே வந்தார். நண்பன் (நகராட்சி) டயலாக்கை அவரிடம் ஒப்பித்துக்கொண்டிருக்கிறான் நானோ அவள் வெளியே வருவாளா என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், வரவில்லை. சிவாஜி விவேக் போல உங்க வீட்ல ஒரு ஃபிகர் இருக்குமே வர சொல்லுங்க என்று சொல்ல தெரிந்திருந்தால் அப்போது சொல்லியிருப்பேன். மாத்திரையை கொடுத்து விட்டு அந்த வீட்டை கடந்து விட்டோம். வரும் வழியில் நண்பனிடம் 

இந்த வீட்லதான் அவ இருப்பால்ல, 

அவன் 'ஆமாம்'. 

இந்த வழியாதான் அவ நடந்து வருவால்ல, 

அவன் 'ஆமாம்'. 

இந்த மொட்ட மாடிலதான் படிப்பால்ல, 

அவன் 'ஆமாம்'. 

இங்கதான் அவ..... 

'டேய் மூட்றியா' அவன். 

மாத்திரை முயற்சி பலனளிக்கவில்லை ... ஏமாற்றம். ஆனால் வீடு இதுவென குத்துமதிப்பாய் தெரிந்து விட்டது.

Physics ட்யூஷன் 

அடுத்து Physics ட்யூஷன். எனக்கு தெரிந்து அவள் எந்த ட்யூஷனிலும் படிக்கவில்லை. ஆனால் அவள் முதல் மதிப்பெண் மாணவி என்பதால் Physics வாத்தியார் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வந்து சந்தேகம் கேட்கலாம் எனும் சலுகை கொடுத்திருப்பார் போலும். அதற்காக அவளும் அன்று வந்திருக்க வேண்டும். அன்று வாரயிறுதி நாள். நான் வழக்கத்தை விட சீக்கிரமாகவே சென்று விட்டேன். அப்படி வந்தால் வாத்தியார் மொட்டை மாடியில் வெய்ட் பண்ண சொல்லுவார். அப்படித்தான் அன்று நானும் நண்பனும் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தோம். அந்த வீடு முதல்மாடியில் வீடும் அதற்கு மேல் மொட்டை மாடியும் கொண்டது. எதற்கோ என் நண்பன் முதல்தளத்துக்கு இறங்க சற்று நிமிடத்தில் மேலே ஓடி வந்தான், 'டேய் உன் ஆள் வந்திருக்காடா!' என்றான்.

நான் வந்து பார்ப்பதற்க்குள் அவள் உள்ளே சென்றிருக்க வேண்டும். அவள் உள்ளே சென்று விட்டாள் ஆனால் காற்றில் பறந்து அவளுக்குப் பின் கடைசியாக உள்ளே சென்ற துப்பட்டா நுனியை மட்டுமே நான் காண முடிந்தது. வாசலில் கழட்டி விடப்பட்ட செருப்பு அவளுடையதாய் இருக்க வேண்டும்.  எப்படியோ அவள் உள்ளே இருக்கிறாள் என்று தெரிந்து விட்டது உள்ளே போகலாமா வேண்டாமா என நான் எத்தனித்த போது சார் கீழ்தளத்தில் இருந்து குரல் கொடுத்து விட்டார். வேறு வழியின்றி கீழே இறங்கி சென்று விட்டேன் அன்று ட்யூஷன் சற்று சீக்கிரமாகவே முடிந்து விட்டது. அவளும் இறங்கி சென்றதாக தெரியவில்லை. மேலே சென்று பார்க்கலாம் என்று நண்பனுடன் மேலே சென்றேன். அந்த வீட்டின் முதல்தளம் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு அவ்வளவாக பொருள்கள் ஏதும் இல்லை. உள்ளே சென்றதும் ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது. அவளை முதல் முறையாக வண்ண உடையில் காணப்போகிறேன், ஆர்வமும் படபடப்பும் கலந்த ஒரு உணர்வு. முதல் தளத்தின் முதல் அறையில் அவள் இல்லை ஒரு வேளை சென்று விட்டாளோ என்ற ஐயத்துடன் அடுத்த அறையின் உள்செல்லாமல் அதை கடந்த போது உள்ளே ஒரு அற்புதக்காட்சி போல் அவள் என் கண்ணில் பட்டாள்.

கர்ப்பக்கிரகத்தினுள் வீற்றிருக்கும் தங்க விக்ரகம் போல உள்ளே அமர்ந்திருந்தாள். மடியில் விரித்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் மிகுந்த அமைதியான சூழலில் படிக்க வந்திருக்கிறாள் என புரிந்தது. அந்த அறையினுள் செல்ல வேண்டும், ஆனால் அவள் தவறாக எண்ணிவிடக் கூடாது. என்ன செய்வதென யோசித்த போது அந்த அறையின் ஜன்னல் வழி நோக்கினால் எங்கள் பள்ளியின் டென்னிஸ் கோர்ட் தெரிந்தது. உள்ளே ஒரு நண்பனுடன் சென்று அதை காண்பது போல் நின்று கொண்டு அப்படியே அவளையும் பார்த்தேன். பள்ளியில் கண்டதை விட அதிக வனப்பு அவளிடம், இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே நிற்கலாம் என தோன்றினாலும் ஏனோ ஒரு பரபரப்பு அங்கிருந்து உடனே கிளம்ப சொன்னது. அவள் ஒரு நொடி என்னை கண்டுவிட்டு அப்படியே குனிந்து கொண்டாள். இங்கே அவளிடம் பேசவும் முடியாது. அப்படியும் இப்படியுமாக நேரத்தை தள்ளிவிட்டு அவள் கிளம்பும் நேரத்தில் சரியாக நானும் கிளம்பினேன், என் BSA SLR சைக்கிளை தள்ளிக்கொண்டே நண்பனுடன் பேசிக்கொண்டே  அவளுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தேன். அவள் பின்னால் தான் நடந்து வருகிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள அ‌வ்வ‌ப்போது திரும்பி பார்த்துக்கொண்டேன், அப்போது அவளும் தோழியிடம் என்னை கைகாட்டி பேசியது போல தோன்றியது உறுதியாக தெரியவில்லை. சட்டென நின்று பேசி விடலாமா என தோன்றியது ஆனாலும் ஒரு தைரியக்குறைவு. இதோ இந்த வாய்ப்பையும் இழக்கப்போகிறேன் என நினைத்துக்கொண்டே இழந்தும்போனேன். இதெல்லாம் நடந்த போது 12ஆம் வகுப்பு ஏறக்குறைய முடிந்திருந்தது. நான் அவளைக்காண சொற்ப நாட்களே மிஞ்சியிருந்தது.

பள்ளியில் கடைசி நாள் 

12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாள் வந்து விட்டது. அன்று அப்பாவுடன் பள்ளிக்கு போயிருந்தேன். ஆறாம் வகுப்பில் என்னை சேர்த்து விட வந்தவர் அதற்குப்பிறகு இப்போதுதான் வந்திருக்கிறார். அப்படி ஒரு அற்புதமான காலம் அது. மதிப்பெண் பட்டியலில் நான் வாங்கிருந்த மார்க் பல்லிளித்துக்கொண்டிருந்தது. அதனை வாங்கி "என்னப்பா இது" எனும் தொனியில் அவர் என்னை பார்க்க "அவ்வளவுதான் முடிஞ்சுது" எனும் தொனியில் நான் அவரை பார்க்க அவரின் Engineering கனவு தகர்ந்தது. சரி இந்த வேலை முடிந்தது நாம் வந்த வேலையை பார்ப்போம் என பிரியாவை தேட தொடங்கியது மனது. அவளும் வந்தாள் எப்படியும் முதல் இடத்தை பிடித்திருப்பாள் போல வாத்தியார்கள் அவளிடம் காட்டிய முக பாவனையிலேயே அது நன்றாக தெரிந்திருந்தது. பள்ளியில் கடைசியாக அவளை காணும் நாள் இது, அவள் தலைமை ஆசிரியர் அறைக்கும் மற்ற ஆசிரியர்கள் அறைக்குமாக சென்று வந்து கொண்டிருந்தாள், பாராட்டு மழையாய் இருந்திருக்கும். இப்போதும் அவளிடம் பேச முடியாது. சாதாரணமான நாளாக இருந்தாலும் பரவாயில்லை மதிப்பெண்களில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கும் எனக்கும். எப்படிப்போய் பேச முடியும் என்ன தகுதி இருக்கிறது உனக்கு என மனசாட்சி உருத்தியது. எல்லாம் முடிந்து விட்டதென வற்றிய மனதுடன் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

-- தொடரும்