'ஹாய்.... எப்டி இருக்க?' என்றாள்.
'அக்கா வீட்டுக்கு வந்துட்டியா' என்றேன்.
'ஆமா இப்பதான் வந்தேன். அப்றம் தேங்க்ஸ்' என்றாள்.
'எதுக்கு?' என்றேன்.
'அக்காவுக்கு நைட் ஃபோன் பண்ணதுக்கு' என்றாள்.
'ஆக்ட்ச்சுவலா நான் நேத்து நைட் மறந்தே போய்ட்டேன். நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு இன்னைக்கு காலைல தான் வேகமா போய் ஃபோன் பண்ணா எங்களுக்கு நைட்டே தெரியுமே, சுப்பிரமணி ஃபோன் பண்ணுச்சேன்னு சொன்னாங்க. அப்போதான் எனக்கே தெரியும் நீ நைட் ஃபோன் பண்ணிருக்கன்னு. உன்ன நான் ஃபோன் பண்ணவே சொல்லலியே. நீயா எப்படி பண்ண?' என கேட்டாள்.
'ஏன் சொன்னாதான் பண்ணனுமா?' என்றேன்.
'அதில்ல உனக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?' என என்றாள்.
'அக்கறை எப்பவும் தான் இருக்கு, உனக்கு தான் அதை எல்லாம் தெரிஞ்சிக்க நேரமில்லை' என்றேன்.
'அப்படி எல்லாம் இல்லடா' என்றாள்
'அதான் நேத்து நீ கிட்ட கூட வரலியே' என்றேன். மெல்ல என் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினேன். அவளுக்கு புரிந்ததாய் தெரியவில்லை.
'ஏய், என் ஃப்ரெண்ட்ஸ் என்ன விடவே இல்லடா, உனக்கு தான் தெரியுமே அவங்க எப்பவும் என் கூடவேதான் இருப்பாங்க எங்கயும் தனியா விட மாட்டங்கன்னு' என்றாள்.
அதற்கு மேல் அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. மற்ற சாதாரண விஷயங்களை பற்றி பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன்.
வாரயிறுதி முடிந்து திங்கட்கிழமை கல்லூரி வந்தாகி விட்டது. அவளும் வழக்கம்போல் தான் இருந்தாள். அவளை கூப்பிட்டு நிறுத்தி ஒரு நீண்ட நேரம் எடுத்து என் மனதில் உள்ளவற்றை எல்லாம் சொல்லி புரியவைக்குமளவு பேச்சுத்திறமையும் இல்லை. அவ்வப்போது நான் தரும் சில குறிப்புகளை அவள் புரிந்து கொள்ளவும் இல்லை. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான்கு வருடங்கள் முடிந்தே போய்விடும் போலிருந்தது. ஏதாவது ஒன்றை செய்து அவளுக்கு என்னை புரிய வைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அப்போது முதலாமாண்டு மகேஷ் செய்த காரியம் நினைவுக்கு வந்தது. நாமும் அதே போல் அவளிடம் சொல்ல நினைப்பதை கடிதமாக எழுதி விடலாம் என முடிவு செய்தேன். அறையில் இரவு எல்லோரும் உறங்கிய பின்பு தனி அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தேன். மனதில் நினைத்து வைத்திருந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தேன். எழுதும் முன்பு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக முடிவு செய்து வைத்திருந்தேன். எக்காரணம் கொண்டும் இது காதல் கடிதமாக இருந்து விடக்கூடாது என்பதுதில். காதல் கடிதம் எழுதிய மகேஷின் நிலைமை என்ன ஆனது, அதற்குப்பிறகு அவள் அவனை எவ்வளவு வெறுத்தாள் என கண்கூடாக கண்டவன் நான். அவள் அப்படி என்னை அவள் வாழ்விலிருந்து வெறுத்து ஒதுக்குவதை நிச்சயமாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே காதல் எனும் வார்த்தையை எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எல்லாவற்றையும் யோசித்து யோசித்து எழுதி முடித்த போது நேரம் இரவு 1 மணியை தாண்டியிருந்தது. அடுத்த நாள் எங்களுக்கு ஒரு தேர்வு நாளாக இருந்தது. தேர்வு நாட்களில் தேர்வு தொடங்கும் கடைசி நிமிடம் வரை எல்லோரும் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருப்பது வழக்கம். அப்படிதான் வீணாவும் அன்று தேர்வறைக்கு உள்ளே செல்லும் முன் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்றேன்.
'வீணா....., உங்கிட்ட ஒன்னு தரணும்' என்றேன்.
'அப்டியா..... குடு.....' என கையை நீட்டினாள்.
நான் எழுதிய நோட்டை அவள் கைகளில் திணித்தேன். 'இத ரூம் போனப்றம், நீ மட்டும் படி, உன் ப்ரன்ட்ஸ் கிட்ட குடுத்து படிக்க வைக்காத' என்று மட்டும் சொல்லி குடுத்தேன். அதை அப்போதே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததை அவள் கண்களில் கண்டேன். ஆனால் தேர்வறைக்குள் செல்ல வேண்டி இருந்ததனால் அவசரம் அவசரமாக அதை தன் பைக்குள் திணித்துக்கொண்டாள். 'ஓகே... பை... அப்றம் பாக்கலாம்' என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அன்று தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து அவள் இன்று படிப்பாளா, நாளை என்ன சொல்வாளோ என பல சிந்தனைகள் ஓடியது. நேரம் நகரவே இல்லை. இன்று போல் அன்று கைப்பேசிகள் இருந்திருந்தால் உடனே எனக்கு ஃபோன் செய்திருப்பாள். இப்போது வேறு வழி இல்லை. நாளை காலை வரை காத்திருக்க தான் வேண்டும். காலையும் வந்தது, வகுப்பும் ஆரம்பித்தது கடைசி நிமிடம் தான் அவள் உள்ளே வந்தாள். வந்தவள் என்னை ஒரு பார்வை பார்த்ததாய் நியாபகம். முதல் இடைவேளை தொடங்கியதும் என் இருக்கையிலிருந்து எழுந்தேன், அவளும் எழுந்தாள், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்தோம். நீண்ட நேர காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வர இருவருமே காத்திருந்தோம். அவள் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சியும் முகத்தில் அவ்வளவு சிரிப்பும் இருந்தது.
'படிச்சிட்டேன்....' என்றாள்.
'எனக்கு வேற எப்படி சொல்றதுன்னு தெரியல, அதான் எழுதிட்டேன்' என்றேன்.
'இத நீ, மொதல்லயே பண்ணிருக்கலாம்' என்றாள்
'இவ்வளவு இருந்துச்சா உனக்குள்ள, யோசிச்சு பாக்க எனக்கே ஆச்சரியமா இருக்கு.... First of all நீ இவ்வளவு நல்லா எழுதுவன்றதே எனக்கு தெரியாது, படிக்கவே நல்லா இருந்துச்சு' என்றாள்.
முதன் முறையாக என் எழுத்துக்கு ஒரு ரசிகை கிடைத்திருக்கிறாள். அதுவும் வீணாவே என்பது இரட்டிப்பு சந்தோஷமாய் இருந்தது.
'இனிமே பாரு நான் எப்படி நடந்துக்றேன்னு.... நீயே ஆச்சரியப்படுவ...' என்றாள்.
'நடந்தா சந்தோஷம் தான்' என்றேன்.
'அதுக்காக ரொம்பலாம் எதிர்பாக்காத, என்னால முடிஞ்சப்பலாம் கண்டிப்பா பேசுறேன்..... ஓகேயா' என்றாள்.
'எனக்கு அதுவே போதும் ' என்றேன்.
'சரி படிச்சிட்டல்ல, நோட்ட திருப்பி குடு' என்றேன்.
'உனக்கு எதுக்கு அது.... திருப்பிலாம் தர மாட்டேன், நானே வச்சுக்குவேன்' என்றாள்.
'ஏன் அத வச்சி பூஜை பண்ண போறியா?' என்றேன்
'என்னவோ பன்றேன். உனக்கெதுக்கு அதெல்லாம் ' என்றாள்.
எனக்குள் சிரிப்பும் சிறு பெருமை உணர்வும். தோன்றும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிப்பாள் போல என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.
அன்றிலிருந்து அடிக்கடி என்னை பார்ப்பது, மாலை கல்லூரி முடிந்ததும் தோழிகளை அனுப்பி விட்டு என்னுடன் பேச சிறிது நேரம் காத்திருப்பது என சின்ன சின்ன மாற்றங்கள் அவளிடம் தெரிந்தது. நானும் நண்பர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி அவளுடன் நின்று சற்று நேரம் பேசி விட்டு பிறகு சென்றேன். வார இறுதி நாட்களில் அவளிடமிருந்து அதிக ஃபோன் கால்கள் வந்தது. அந்த வாரம் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள், நானும் தான். என் வாழ்வின் தினந்தோறும் நடந்த நிகழ்வுகளை ஒருவரிடம் முழுவதுமாக பகிர்வது என்பது அவளிடமே முதன் முறையாக இருந்தது. அவள் ரசித்துப்பார்க்கும் மலையாள படங்கள், நடிகர் நடிகைகள் எல்வாவற்றையும் கூறினாள். மம்முட்டி மோகன்லால் தவிர வேறு யாரையுமே தெரியாத எனக்கு நந்தனம் நவ்யா நாயர், பிருத்விராஜ், மீஷா மாதவன் திலீப் , காவ்யா மாதவன் என இந்த பெயர்கள் எல்லாம் அவள் மூலமாகவே அறிமுகமானார்கள். பாஷையே புரியா விடினும் ஏசியாநெட்டிலும் சூர்யா டிவியிலும் அவள் சொன்ன படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அதைப்பற்றி போனில் பேசினோம். போன் கால்கள் நிமிடங்களிலிருந்து மணிக்கனக்காக மாறியது. அவள் வீட்டில் தற்போது அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை லைவ் அப்டேட் கொடுக்குமளவுக்கு பேச்சு தொடர்ந்து. 'காஃபி குடிக்கிறேன், சிப்ஸ் சாப்பிடுகிறேன், உனக்கு வேணுமா' என்பாள். 'குடு' என்பேன். 'இந்தா எடுத்துக்கோ' என்பாள். எனக்காக அவளும், அவளுக்காக நானும் எப்போதும் கூடவே இருப்பதை போல உணர்ந்தோம். 'ஏதாவது முக்கியமாக நடந்தால், உடனே அவளிடம் நானும் , என்னிடம் அவளும்' சொல்லி முடித்தால்தான் அது மனதளவில் முழுமை பெறும் போல் இருந்தது இருவருக்குமே. ஒரு கடிதம் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதே என நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். அந்த சந்தோஷம் சில நாட்கள் வரை நீடித்தது.
ஒருநாள் கல்லுரிக்குள் நுழைந்த போது சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். அது வழக்கமான பார்வைக்கு மாறாக இருந்தது. என் வகுப்பில் நான் முதல் மாணவன் என்கிற அடையாளம் சீனியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அன்று ஒரு சீனியர் நான் நடந்து சென்ற போது பின்னாலிருந்து ஒரு கமெண்ட் அடித்தான்.
'என்னடா டாப்பரே.... படிக்கிற வேலை இல்லாம வேற ஏதோ வேலை எல்லாம் பன்ற போல...' என்றாள். எனக்கு அந்த பேச்சு சரியாக படவில்லை. திரும்பிச் சென்று அவரிடமே நேராக கேட்டேன்.
'ஏன்ணா அப்டி சொல்றீங்க...' என்று. அவனோ 'உன்ன என்னமோ சின்ன பையன்னு நெனச்சேன், பெரிய ஆளுதான்டா நீ' என்றான். 'போ .... ஒழுங்கா படிக்ற வேலைய மட்டும் பாரு....' என கொஞ்சம் மிரட்டல் தொனியிலேயே சொல்லி அங்கிருந்து போக சொன்னான்.
எனக்கு ஏன் அவன் அப்படி சொன்னான் என புரியவில்லை. குழப்பத்திலேயே இருந்தேன். சீனியர்கள் மட்டுமில்லை என்வகுப்பிலேயே சில மாணவர்கள் என்னை பார்த்த விதம் சரியில்லை, ஒரு மாதிரி நக்கலாக சிரித்தனர். அன்றைய நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் முன் என் அறை நண்பர்களுடன் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது சேகர் எனும் என் வகுப்பு மாணவன் என்னை பார்த்தான். அவன் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் அவன் வீடு இருந்தது. என்னை தனியே கூட்டிச்சென்று 'மச்சி நீ வீணாவுக்கு லெட்டர் எதுவும் எழுதினியா...?' என்றான். அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.
- தொடரும்.
No comments:
Post a Comment