சிறிது நேரம் மௌனம் காத்தவள் 'சரி, வரேன்' என்றாள்.
அவள் எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என சொல்லி விட்டு அவளை கூட்டிக்கொண்டு வர பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு க்ரீட்டிங் கார்டையும் ஒரு சிறு கிஃப்ட்டும் தந்தாள். பேசிக்கோண்டே வீடு வரை வந்தோம். என் கல்லூரியில் உடன் படித்தவர்களில் முதலில் என் வீட்டுக்கு வந்தது அவளாகத்தான் இருக்கும். சிரித்த முகத்துடனும், சிறு கூச்சத்துடனும் சிறந்த ஒரு வரவேற்பினை எதிர்பார்த்துதான் வீட்டுக்குள் வீட்டுக்குள் காலடி வைத்தாள். என் வீட்டிலோ எல்லாருக்குமே ஆவரேஜ் எக்ஸ்ப்பிரஷன்தான் இருக்கும்.
'என் க்ளாஸ்மேட் இங்க தண்டையார்பேட்டையில் தான் இருக்கிறாள்' என அறிமுகப்படுத்த,
'அப்படியா, இங்க இருந்து டெய்லி போய்ட்டு வரியாமா' என அம்மா ஆரம்பிக்க,
'இல்ல ஆண்ட்டி நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்' என அவள் பதில் சொல்ல, தொடங்கி விட்டது அவர்கள் இருக்குமான பரிபாஷனை. அதன் பிறகு நான் பேசியது ஓரிரு வார்த்தைகள் தான் இருக்கும். அவளின் வீடு எங்கிருக்கிறது என ஆரம்பித்து கிட்டத்தட்ட அவளின் பூர்வீகத்தையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் அம்மா. சொல்லப்போனால் அவளுக்கும் எனக்கும் ஏதாவது இருக்குமோ ஒரு சிறு விசாரணைக்கமிஷன் தான் நடத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அவளும் சலிக்காமல் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அதுவரை தோழி என்றோ, உடன் படிக்கிறவள் என்றோ எந்த பெண் பிள்ளையையும் வீட்டுக்கு கூட்டி வந்ததில்லை நான். அதனாலேயே அவ்வளவு விசாரிப்புகள். அன்று அண்ணன் வீட்டிலில்லை, அப்பாவும் 'வாம்மா....' என்று மட்டும் சொல்லிட்டு வெளியே கிளம்பி விட்டார். அவள் குடுத்த கிஃப்ட்டை பிரித்துப்பார்த்தேன், சிறிய கண்ணாடி பெட்டிக்குள் செயற்கை மலர்க்கொத்து இருந்தது, மேலே ஹேப்பி பர்த்டே என பொறிக்கப்பட்டிருந்தது. அவள் கொடுத்த க்ரீட்டிங் கார்டை வீட்டில் காட்ட வில்லை, அதன் அட்டைப்படம் கொஞ்சம் ரொமாண்டிக் ஆக இருந்தது. ஒரு 10 வயது மதிக்கத்தக்க ஃப்ராக் போட்ட வெள்ளைக்கார சிறுமி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்க எதிரில் அதே 10 வயது மதிக்கத்தக்க டவுசர் டீசர்ட் போட்ட வெள்ளைக்கார சிறுவன் அவள் எதிரில் அவள் முகத்தை நோக்கியவாறே அதே சுவற்றில் தன் ஒரு கையை ஊன்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அவர்களிருவருக்கும் மேலே ஆங்கிலத்தில் பர்த்டே மெசேஜ் இருந்தது.
ஒரு ஒருமணி நேரம் இருந்திருப்பாள். பிறகு கிளம்பினாள். நான் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன் என கூட சென்றேன். 'உன் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்கே இவ்வளவு தூரம் இருக்கே, டெய்லி இவ்வளவு தூரம் நடந்து வந்துதான் பஸ் ஏறுவியா' என்றாள்.
'ஆமாம்' என்றேன்.
'உங்க அம்மா நல்லா பேசுறாங்களே, நீ ஏன் ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேசுற...' என்றாள்
'எனக்கு அப்டிதான் பேச வருது... அதுவுமில்லாமல் நாம யோசிக்காம பேசி எதுவும் தப்பா ஆயிடக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாக இருப்பேன்....' என்றேன்.
பஸ் ஸ்டாப்பை நெருங்கியதும் 'நான் உன் வீட்டுக்கு வந்ததை காலேஜில் சொல்ல வேண்டாம், அப்றம் சும்மாவே உன்ன ஓவரா ஓட்டுவாங்க, இது தெரிஞ்சா அவ்வளவுதான் கேக்கவே வேணாம்..... ஓக்கேயா....' என்றாள்
'நானும் அதைத்தான் உன்னிடம் எப்படி சொல்வதென யோசித்துக்கொண்டிருந்தேன்....' என்றேன்
சிரித்துக்கொண்டே 'பி....ஃப்ராங்க்.....' என்றாள்
பஸ் ஸ்டாப் வந்தது, மெயின் ரோட்டை கடக்கையில் அவளை அறியாமலே என் கையை பிடித்தாள், கடந்ததும் சட்டென கையை எடுத்து விட்டாள். 'பஸ் ஏறி கூட வருவியா, இல்ல இங்கியே கழட்டி விட்டுடுவியா.... ' என்றாள்
அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட நான்தான் முதலில் ஏறினேன். சிரித்துக்கொண்டே பின்னால் ஏறினான். இடம் இல்லாததால் எனக்கு முன் சீட்டில் அமர்ந்தாள், ஆனால் திரும்பியவாறே என்னுடன் பேசிக்கொண்டேதான் வந்தாள்.
'எப்படி கேட்டதும் வர ஒத்துக்கிட்ட....' என்றேன்.
'வர ஐடியா இல்லதான், ஆனா பர்த்டே அதுவுமா உன்ன டிஸ்அப்பாயின்ட் பண்ண வேணாமேன்னுதான், ஒத்துக்கிட்டேன்..... இப்போ ஹேப்பி தான நீ....' என்றாள்
'கண்டிப்பா..... தேங்ஸ் ஃபார் கமிங்' என்றேன்.
சிரித்தாள். அவள் பஸ்ஸ்டாப் வந்தது இருவரும் இறங்கினோம். 'வா வீட்டுக்கு....' என்றாள். 'இல்ல இன்னொரு நாள் வரேன்...' என சொல்லி விட்டு மீண்டும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.
அடுத்த நாள் கல்லூரி வந்ததும் நானும் சம்பத்தும் இன்னும் சில நண்பர்களும் கேண்டீனில் டீ குடித்துக்கொண்டிருந்தோம். வேக வேகமாக கேண்டீனுக்குள் வந்த கோகுல் நேராக சம்பத்திடம் 'மச்சி, மேட்டர் தெரியுமா, நேத்து சூப்பர் வீட்டுக்கு வீணா வந்துருக்காளாம்..... பர்த்டே ஸ்பெசல் போல' என ஆரம்பித்து வைத்து விட்டான்.
ஏற இறங்க பார்த்தான் சம்பத், 'காலைல பஸ்ல எங்கூடதான வந்தான், வாய தொறந்தானா பாத்தியா.....' என்றான்.
நான் யாரிடமும் சொல்லவில்லை, விஷயம் எப்படி வெளிய போச்சுன்னும் தெரியலை. அவள் மீது கோபம் வரவில்லை, அவள் ஹாஸ்டல் தோழிகள் வேலையாகத்தான் இருக்கும் எனும் புரிதல் மட்டும் வந்தது.
கேண்டீனிலிருந்து வகுப்பிற்குள் வந்ததும் 'அப்றம் சும்மாவா வந்துருப்பா..., கிஃப்ட் எதாவது தந்துருக்கனுமே' என்றான் சம்பத்
பைக்குள் இருந்து அவள் குடுத்த க்ரீட்டிங் கார்டையும் கிஃப்ட்டையும் மெல்ல வெளியே எடுத்தேன். பட்டென்று பிடுங்கி பார்த்தான் சம்பத், பின் கோகுல்..... பின் அந்த கார்டை பார்த்தான் செழியன் , வகுப்பில் அவனைப்போலொரு விஷமி கிடையாது. வீணாவின் லேப் மேட் வேறு. எந்நேரமும் ஏதாவதொன்றை சொல்லி வகுப்பையே சிரிக்க வைத்து விடும் கல கல பார்ட்டி. கிரீட்டிங் கார்டை வாங்கினவன் நேரே ஓடிச்சென்று வகுப்பிற்கு முன் சென்று அந்த கிரீட்டிங்கார்டின் அட்டைப்படத்தை காட்டி 'இது வீணா, இது சுப்ரமணி.....' என சத்தமாக சொல்லி எங்கள் இருவரையுமே கலாய்க்க ஆரம்பித்து விட்டான். அப்போது வீணாவும் வகுப்பிற்குள் இருந்தாள். 'டேய் சும்மா இருடா....' என சிரித்துக்கொண்டே அவனை நோக்கி சொன்னாள், நானும்தான். அவன் விடுவதாய் இல்லை. வகுப்பிற்குள் அப்போது நிறைய பேரும் இல்லை. இருந்த சிலரும் கமுக்கமாக வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்தனர். கோகுல் 'ஹா...ஹா...ஹாஹா' என சத்தம் போட்டே சிரித்தான். சம்பத் இவனபோய் டாப்பர்னு தூக்கி வச்சி கொண்டாடினனே, மறுபடியும் எனக்கு ஆப்பு வச்சிட்டானேனு என புலம்ப ஆரம்பித்து விட்டான். ஆக மொத்தம் ரகசியமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்த சம்பவம் கல்லூரி முழுவதும் போஸ்டர் அடிக்காத குறையாக பரவி விட்டது.
ஸ்டாஃப் ரூமிலிருந்து என்னை வர சொல்லி இருந்தார்கள். முதல் மார்க் மாணவன் என்பதனால் நீதான் க்ளாஸ் ரெப்ரசென்டேடிவ் பதவி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கெல்லாம் ஒரு தனி தகுதி வேண்டும் என அப்போது எனக்கு தெரியவில்லை, ஏற்றுக்கொண்டேன். பெண்கள் பக்கம் சிவகாமி. அப்போது புதிதாக ஒரு வாத்தி வந்து சேர்ந்திருந்தார். காஜா அகமது அவர் பெயர். எலும்பும் தோலுமான தேகம். இடுப்பில் நிற்காத பேண்ட். தொள தொள முழுக்கை சட்டை, ஏற்கெனவே வழுக்கை விழுந்திருந்த அரை மண்டை, முன் பக்கம் மட்டும் கொஞ்சம் முடி. பார்க்கும் போதே எரிச்சல் வரும் முகத்தோற்றமும், பேச்சும், நடவடிக்கைகளும். நீங்கள் எல்லாம் இன்ஜினீயரிங் படிப்பதற்கே லாயக்கில்லை, யாருக்கும் இங்கே பெரிய அளவில் அறிவில்லை என மட்டம் தட்டி மட்டும்தான் பேசுவார். பெண்கள் தரப்பில் கூட அவர் மீது ஒரு வித வெறுப்புணர்வுதான் இருந்தது. மனதார யாரையும் பாராட்ட மாட்டார். நான் முதல் மார்க் வாங்கிய போது கூட கடமைக்கு கை குடுத்து விட்டு இதெல்லாம் ஒரு மார்க்கா.... அண்ணா யூனிவர்சிட்டி போய் பாரு எல்லாம் எவ்வளவு மார்க் வாங்குறாங்கன்னு தெரியும் என நக்கலாகவே பேசினார்.
நான் ரெப்ரசென்டேடிவ் ஆனதும் முதல் பஞ்சாயத்து என அவரிடம் போய்தான் நின்றேன். கல்லூரி பஸ்ஸில் மாலை பயணத்தின் போது நாங்கள் பாட்டு பாடிக்கொண்டும், தாளம் போட்டுக்கொண்டும் ஜாலியாக போவது வழக்கம். அன்று ஒரு நாள் அப்படி சென்ற போது அவர் பஸ்ஸில் இருந்திருப்பார் போல..... 'என்னடா பாட்டு பாடறீங்க பஸ்ஸுல.... கட்டிப்புடி கட்டிப்புடிடா .... கண்டபடி கட்டிப்புடிடானு பாட்டு பாடறீங்க ..... பஸ்ஸுல அத்தன பொண்ணுங்க வேற இருக்காங்க..... ஒரு மேனஸ் இல்ல .... ' என பெண்கள் குல காவலன் போல ஏகத்துக்கும் பொங்கிக்கொண்டிருந்தார். உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியா விட்டாலும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் (கொஞ்சம் ஜாலி டைப்) 'என்ன ப்ரச்சன சார்' என கேட்க, காஜா அகமது எங்களிடம் சொன்னதையே அவரிடமும் சொல்ல.... ' இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா சார்.... நானும்தான் அன்னக்கி பஸ்ஸுல இருந்தேன்.... பொண்ணுங்களே அத ஜாலியா என்ஜாய் தான் சார் பண்ணிட்ருந்தாங்க.... இதப்போய் பெருசா பேசிகிட்டு .... போங்கப்பா க்ளாஸுக்கு' என என்னையும் என்னுடன் வந்த சில நண்பர்களையும் அனுப்பி விட்டார். செம பல்பாகி போனது காஜா வுக்கு. நான் வெளியே போகும்போது திரும்ப என்னை கூப்பிட்டவர் 'போய், வீணாவ என்ன வந்து பாக்க சொல்லு' என்றார்.
அவ்வப்போது ஸ்டாஃப் ரூமுக்கு வீணாவை கூப்பிட்டு வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது அவரிடம். வகுப்பில் அவளையே கேள்வி கேட்பது, தப்பாக பதில் சொன்னால் சாக்பீஸை தூக்கி செல்லமாக அடிப்பது என அவ்வப்போது சில சில்மிஷ வேலைகளை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் ரெக்கார்ட் நோட்டுகளை கலெக்ட் செய்து ஸ்டாஃப் ரூமில் குடுக்க சென்ற போது அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீணாவை எதிரே நிற்க வைத்து பேசிக்கொண்டிருந்தார். நான் நோட்டுக்களை வைத்து விட்டு நேரே அவரிடம் சென்றேன். 'சார், இது உங்க பீரியட் நீங்க க்ளாஸுக்கு வரணும்' என்றேன். திமிராக என்னை பார்த்தவர் 'தெரியும், போ.... வரேன்' என்றார். திரும்பும் போது வீணா வை பார்த்து நான் கண் காண்பிக்க புரிந்து கொண்டவளாய் என்னுடனேயே வெளியே வந்து விட்டாள்.
'எதுக்கு அந்தாள் கிட்ட சும்மா போய் பேசிட்ருக்க....' என்றேன்.
'நான் என்னடா பண்றது....., சும்மா கூப்ட்டு வச்சி பேசிட்டே இருக்கான். சார் ஆச்சே, எப்டி , அவாய்ட் பண்றதுன்னு தெரில..... ' என்றாள்.
'அப்டி என்னதான் பேசுறான் உங்கிட்ட....' என்றேன்.
'ஒன்னுமே இல்லடா...சும்மா வெட்டியா எதாவது, உங்க ஊர்ல என்ன பேமஸு, நேந்திரம் சிப்ஸ் எப்படி பன்றாங்க, கதகளி ஆடத்தெரியுமா, ஊர்க்கார பையனுக்கு வேல வேணும் உன் அண்ணன் கிட்ட சொல்லி வாங்கித்தர சொல்லுன்னு ..... கண்டதும் பேசுறான்டா' என்றாள்.
அவர் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது. சந்தர்ப்பம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன்.
அந்த நேரத்தில் சில சீனியர்கள் ஜூனியர் பெண்களுக்கு கொக்கி போட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஷீலாவுக்கும் ஏற்கெனவே ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்திருந்தான். ஷீலா யெஸ் சொல்ல வில்லை என்றாலும் நோ சொல்லவில்லை. எவனாவது ஒரு சீனியர் எங்கள் வகுப்பிற்குள் வருவான் குறிப்பிட்ட ஒரு பெண்ணை கைகாட்டி கூட்டிப்போவான், அப்படி போனாலே அந்த பெண்ணுக்கு எவனோ ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்யப்போகிறான் என்று அர்த்தம். அன்று ஒருநாள் அப்படித்தான் வகுப்பிற்குள் வந்து வீணாவை கூப்பிட்டான் ஒரு சீனியர்.
- தொடரும்
No comments:
Post a Comment