Friday, December 13, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 1

பகுதி 1 - அலைபாயுதே 

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு, வருடம் 1999, முதல்நாள் வகுப்பு. புதிய வளாகம், புது நண்பர்கள், புதிய கல்வி முறை என வித்தியாசமானதொரு அனுபவத்திற்கு தயாராகி இருந்த சமயம். முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த விரிவுரையாளர் எங்களை ஒவ்வொருவராக எழுந்து நின்று அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார். திக்கென்று இருந்தது, பள்ளிப்படிப்பு வரை வருகைப்பதிவேட்டை பார்த்து ஆசிரியர் பெயர் சொல்லி அழைக்க 'ப்ரெசன்ட் சார்' சொன்னதோடு சரி, மற்றபடி அறிமுகப்படுத்திக்கொள்ளுமளவிற்கெல்லாம் அறிவு கிடையாது, அதுவும் ஆங்கிலத்தில். அப்படியே இருந்தாலும் என்னவென்று அறிமுகப்படுத்திக்கொள்வது? ஆனந்த விகடன் படிப்பவன் என்றா? முதல் நாளே மானம் போகப்போகிறது, அதுவும் பெண்கள் முன்னால், என்றெல்லாம் மனதிற்குள் ஓட.... 

'மை நேம் இஸ் ஆனந்த், ஐ அம் ஃப்ரம் தாம்பரம், ஐ ஸ்டடீய்ட் இன் சென்ட் ஜான்ஸ், மை ஹாபிஸ் ஆர் ப்ளேயிங் க்ரிக்கெட், வாட்சிங் மூவிஸ்' என பளிச்சென்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடடான் முதல் பென்ச் முதல் மாணவன், ஆபத்பாந்தவன், நிறைய அறிமுகம் செய்து கொண்டிருப்பான் போல. அறிமுகம் என்பதை இப்படிதான்  செய்ய வேண்டும் என காட்டிவிட்டான். அவன் சொன்ன அதே ஆர்டரில் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பெயர், எங்கிருந்து வந்திருக்கிறோம், படித்த பள்ளியின் பெயர், பின் ஹாபிஸ், வெய்ட்..... மற்றதெல்லாம் சரி ஹாபிஸ் என்ன சொல்ல அவன் சொன்னதையே சொன்னால் காப்பியடிப்பது போலாகிவிடும். யோசித்துப்பார்க்கிறேன், அந்த சமயங்களில் நான் அதிகநேரம் லயித்திருந்தது A R Rahman இன் இசையை கேட்பதில்தான் மட்டும்தான். ரோஜா முதல் உயிரே வரை அத்தனை கேஸட்டுகளையும் வரிசையாக அடுக்கி வைத்து கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வர அதையே சொல்லி விடுவோம் என முடிவு பண்ணி என் முறை வந்ததும் 

'மை நேம் இஸ் ...... , ஐ அம் ஃப்ரம் திருவொற்றியூர், ஐ ஸ்டடீய்ட் இன் வெள்ளையன் செட்டியார் ஹையர் செகண்டரி ஸ்க்கூல், மை ஹாபி இஸ் லிசனிங் A R Rahman மியூஸிக்' என ஒப்பித்து விட்டு உட்காரப்போன என்னை நிறுத்தினார் ஆசிரியர், 'அதென்ன A R Rahman மியூஸிக்? அப்ப இளையராஜா போட்றதெல்லாம் மியூசிக் இல்லையா? லிசனிங் டு மியூஸிக் னு சொல்லு' என்று சொல்லி அமர சொன்னார். ராஜா ரசிகர் போல.

முதல் நாள் மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். 'வெள்ளஞ்செட்டியா (வெள்ளையன் செட்டியார் பள்ளியின் உள்ளூர் வட்டார சொல்) நீ' என்று ஒரு குரல் கணீரென்று ஒலித்தது, கேட்டவள் வீணா. என் அளவே உயரம், மெலிந்த உருவம், மாநிறத்துக்கும் கூடுதலான வனப்பு, அகன்ற வாய், தடித்த உதடுகள், குறும்புப்பார்வை, பருக்கள் நிறைந்த கன்னம் (இன்றைய சாய் பல்லவியை அன்றே கண்டது போல) நேர்த்தியான ஆடை, சரிந்து விழும் துப்பட்டைவை சரிசெய்து கொண்டே இருக்கும் மேனரிசம் என சக மாணவியாய் புன்னகையுடன்  எதிரில் நின்று கொண்டிருந்தாள் வீணா. அதுதான் அவளுடனான என் முதல் அறிமுகம். 'ஆமாம் நான் வெள்ளஞ்செட்டிதான்' என்றேன். 'நான் முருகதனுஷ்கோடி தண்டையார்பேட்டை, கேர்ள்ஸ் ஸ்க்கூல்' என்றாள். 'ஹ்ம் தெரியும், உன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது கேட்டேன்' என்றேன்.  எங்கள் கல்லூரி சென்னையிலிருந்து வெகு தொலைவில் இருந்ததாலும் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் வந்திருந்தாலும் அவள் இருக்கும் இடத்திற்கு பக்கத்திலிருக்கும் இடத்திலிருந்து வந்தவன் நான் என்கிற ஒரு அண்மை உணர்வு அவளுக்குள் வந்திருக்கலாம்.

எங்கள் கல்லூரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல பாஷை பேசுபவர்களும் சேர்ந்திருந்தனர். ஒருநாள் காலை வகுப்பிற்குள் ஏறியபோது ஜன்னல் வழியே இறங்கிய சூரியக்கதிர்கள்  வீணாவின் முகத்தில் பட்டு பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அவள் கையில் ஒரு கடிதம் அதை அவள் தன் தோழிகளுக்கு முன் வாசித்துக்கொண்டிருந்தாள். அது ஒரு மலையாளக்கடிதம், மலையாளம் வாசிக்கத்தெரியாத ஏதோ ஒரு தோழிக்காக அவள் வாசித்துக்காண்பித்திருக்க வேண்டும். அழுத்தம் திருத்தமாக அவள் வாசித்ததை கேட்ட போது முதல்முறை மலையாளம் எனும் பாஷை எத்தனை அழகாக, ஈர்ப்பு மிக்கதாக இருக்கிறது என்று அன்றுதான் முதல்முறை புரிந்தது, அவள் மலையாளி என்பதும் அன்றுதான் தெரிந்தது. 'எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுற' என கேட்டே விட்டேன், 'ஏய் நான் சின்ன வயசுலருந்தே சென்னைலதான் இருக்கேன், வீட்டுக்குள்ள மட்டும்தான் மலையாளம் மத்தபடி வெளில எல்லாம் தமிழ்தான்' என்றாள். என்னதான் அவள் தமிழ் சரளமாக பேசினாலும் இடையிடையே வரும் குருவாயூரப்பாவும், ஈஷ்வராவும் அவள் மலையாளி என்பதை அவ்வப்போது நினைவு படுத்தியது.

இன்ஜினீயரிங் ட்ராயிங் முதலாமாண்டு எங்களுக்கு இருந்த பாடம். டிராஃப்டர் வைத்து கேட்கிற கேள்விக்கேற்றாற்போல படம் வரைய வேண்டும். ஒட்டு மொத்த வகுப்பும் அந்த பாடத்தில் திண்டாட எனக்கும் வீணாவுக்கும் அது சர்வசாதாரணமாக வந்தது, வாத்தியார் கேள்வியை கொடுத்து விட்டு, வரைங்க என சொல்லி விட்டு, கையை பின்னால் கட்டிக்கொண்டு குறுக்க மறுக்க நடந்து கொண்டிருப்பார். நான் சட்டென வரைந்து முடித்து விட்டு அவளை பார்ப்பேன், அவள் நானும் முடித்து விட்டேன் என்பது போல ஒரு பார்வை பார்ப்பாள் பிறகு இருவருக்கும் ஒரு புன்னகை வரும், அவ்வளுவுதான் எங்களுக்கிடையே அப்போதிருந்த பரிபாஷை. அவளின் சில குறும்புத்தனங்களை என்ன மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தெரியாது. ஒருநாள் நாள் நான் வரைந்து முடித்த என் ச்சார்ட் பேப்பரை வந்து பார்த்தவள் சட்டென அவள் பென்சிலை எடுத்து அவள் பெயரை எழுதி விட்டு, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு போனாள். கையெழுத்து அழகாக இருந்தது அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

மகேஷ் என் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவன், முதல் நண்பன். பையன் நல்ல ஸ்மார்ட், காதலர் தினம் குணால் ஹேர்ஸ்டைல். அவன் இருக்கும் உயரத்திற்கு அவன் முதல் பென்ச்சில் உட்க்காரத்தேவை இல்லைதான் இருந்தாலும் உட்காந்திருந்தான், எனக்கு வலப்புறத்தில், அவனுக்கு வலப்புறத்தில் வீணா ஆனால் இருவருக்குமிடையே ஆண் பெண் பாலருக்கான இடைவெளி இருந்தது. மகேஷிடம் கொஞ்சம் ஹீரோயிச நடவடிக்கைகள் இருந்தது, வீணாவிடம் பேனா வாங்குவது, வட்டம் போட வளையல் வாங்குவது, அவள் நோட்டுக்களை எடுத்துச் செல்வது, இவன் நோட்டுக்களை அவளிடம் கொடுத்து படம் வரையச் சொல்வது, அவளின் கைக்குட்டையை, லேப் கோட்டை, துப்பட்டாவை எடுத்து வைத்துக்கொள்வது, அடுத்த நாள் அவளிடம் அவற்றை திருப்பி கொடுப்பது என அவளை இவனுக்கு நெருக்கமானவள் என காட்டிக்கொள்ளும் அத்தனை வேலைகளையும் பார்த்தான். வீணாவும் அவனுக்கு படம் வரைந்து கொடுப்பது , லேபில் அவள் ப்ராஜெட்களை முடித்து விட்டு அவனுக்கு உதவி செய்வது என்றுதான் இருந்தாள். எந்த ஆணிடம் பேசவோ பழகவோ எந்த தயக்கமும் இருந்ததில்லை வீணாவுக்கு. எல்லாவற்றையும் மிக எதார்த்தமாக கையாளும் திறன் அவளிடம் இருந்தது. சிரிப்பும், சிறு அக்கறையும் தான் அவள்.

கல்லூரி தொடங்கி முதல் ஒரு மாதத்திலேயே எங்கள் வகுப்பிலிருந்த ஸ்ரீதேவி எனும் இன்னொரு பெண்ணும் மகேஷும் காதலர்களானார்கள். எங்கள் கல்லூரிக்கு ஒரே ஒரு பஸ்தான்  அதுவும் ஓடி முடிந்து ஓய்வு பெறும் நிலையிலிருந்த பழைய டூரிஸ்ட் பஸ். அதில் இடம் போதாததினால் மிச்சமிருந்த கொசுறு மாணவர்களை ஏற்றிவர ஒரு மஹிந்த்ரா வேனும் விட்டிருந்தார்கள். அதுவும் தாம்பரத்திலிருந்து தான். அந்த வேனில்தான் நான், மகேஷ் ஸ்ரீதேவி இன்னும் சில மாணவர்களும் செல்வோம். அந்த வேனில் ஆரம்பித்தது அவர்கள் காதல் , வழக்கமாக எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஒருநாள் சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள் கைகோர்த்துக்கொண்டு.... புரிந்து விட்டது. கல்லூரி முழுவதும் அவர்களின் காதலைப்பற்றி தெரிந்து விட வீணாவும் மகேஷிடம் ஃபோனில் அதைப்பற்றி விசாரித்ததாக கூறினான். ஆனால் அவள் ஒரு கவலையுடனும், ஏக்கத்துடனும் விசாரித்ததாக கூறினான். என்னால் நம்ப முடியவில்லை. தாம்பரத்திலிருந்து மீட்டர் கேஜ் ட்ரெய்னில் நாங்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவன் பேச்செல்லாம் வீணாவைப் பற்றிதான் இருக்கும். அவள் என்னை காதலிக்கிறாள் போல , நான்தான் அவசரப்பட்டு ஸ்ரீதேவிக்கு ஓக்கே சொல்லி விட்டேன், எங்கள் வீட்டுக்கு ஸ்ரீதேவியை காட்டிலும் வீணாதான் பொருத்தமான மருமகளாய் இருப்பாள் என்றெல்லாம் பேசினான்.  எனக்கெல்லாம் அடுத்தநாள் காலை ரெக்கார்ட் நோட் பொருத்தமாக சப்மிட் செய்ய வேண்டிய எண்ணம் தான் இருக்கும். காதலெல்லாம் எட்டாக்கனி தான் எனக்கு, ஆகவே காதல் புரிபவர்கள் கொஞ்சம் பெருமைக்குரியவர்களாகத்தான் பார்க்கப்பட்டனர். 

முதல் வருடம் மாணவர்களின் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் வண்ணம் சில ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். சில மாணவர்கள் ஜோக் அடித்தனர், சிலர் மிமிக்ரி செய்தனர், சிலர் சினிமா டயலாக்குகளை அப்படியே பேசினர். மகேஷ் முறை வந்ததும் என்னை கைகாண்பித்து இவன் பாடுவான் என சொல்லி விட்டான், உடனே எல்லாரும் பாடு பாடு என்றார்கள், வகுப்பு கொஞ்சம் அமளியானது, நான் கொஞ்சம் தயங்கினேன், என் பார்வை வீணா பக்கம் திரும்பியது அவள் சும்மா பாடு என்பது போல் கண்களாலெயே என்னை கன்வின்ஸ் செய்தாள், அடுத்த நொடி கண் மூடி பாட ஆரம்பித்தேன் 'சந்தோஷ கண்ணீரே....' பாடல் ஒட்டு மொத்த வகுப்பும் அமைதியானது. பாதி பாடலை பாடி நிறுத்தினேன். சில நிமிடங்கள் ரஹ்மான் ஆகி விட்ட உணர்வு. கைதட்டல்கள் எதிரொலித்தன. ஆசிரியர் நன்றாக பாடினாய் என பாராட்டி விட்டு போனார். மணியடித்து இடைவெளி நேரமும் வந்தது. நான் வீணாவை நோக்கி போனேன் அவளும் சிரிப்புடன் எனை நோக்கி இருந்தாள். சட்டென நடுவே ஒரு கை நீண்டது அது வீணாவுக்கு பின்னால் அமர்ந்திருத்த சவீதா, கைகுடு சுப்பு நீ படம் தான் வரைவன்னு நெனச்சேன் பாட்டும் பாடுவியா என ஆச்சர்யமாக கை கொடுத்தாள். வீணா இடை மறித்தாள், அதென்ன சுப்பு அதான் முழு பெயர் சுப்ரமணினு இருக்குல்ல அப்டியே கூப்ட வேண்டியதான என சவீதாவை நோக்கி சொன்னாள். முதல் முறை என் பெயரை முழுதாக அவள் உச்சரிக்க கேட்கிறேன். அது வரை 'ஏய், நீ, வா, போ' தான். பிறகு 'ஏய், நல்லாயிருந்தது' என புன்னகையுடன் கூறி விட்டு சென்றாள். 

மகேஷ் ஸ்ரீதேவி ஜோடி உருவான அதே நேரத்தில் மற்ற எல்லா வகுப்புகளிலும் பல ஜோடிகள் உருவாகி இருந்தனர். தன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு ஒன்று முதல் மூன்று மாதங்களே தேவைப்பட்டன. அவர்கள் எல்லோரும் அழகானவர்களாகவே இருந்தனர். சரி மீண்டும் மகேஷுக்கு வருவோம். மகேஷ் அவ்வப்போது கல்லூரிக்கு விடுப்பு எடுப்பது வழக்கம். அப்போது அவனிடமிருக்கும் ஏதோ ஒரு வீணாவின் பொருளை என்னிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்வான். அப்படிதான் ஒரு நாள் என்னிடம் ஒரு நோட்டை கொடுத்தான். காலை நான் மீட்டர் கேஜ் ட்ரெய்னில் செல்லும் வழியில் சென்ட் தாமஸ் மவுன்ட் ஸ்டேஷனில் என்னை பார்த்து குடுத்து விட்டு போனான். ஆனால் இது ஒரு பரிசுப்பொருள் போல மேலே பேப்பர் சுற்றியிருந்தது. எனக்கு சந்தேகம்தான் இருந்தாலும் எதுவும் கேட்காமல் வாங்கிக்கொண்டு போய் விட்டேன். அன்று கல்லூரியில் இடைவெளி நேரத்தில் வீணா கையில் ஒரு ஆடியோ கேஸட், அலைபாயுதே, அதன் அட்டையை வெளியே எடுத்தாள் அது நீளமாக விரிந்தது. மாதவனும் ஷாலினியும் தலைகீழாக முகம் பார்த்து படுத்திருக்கும் ஒரு ஸ்டில், மாதவன் எம்பி குதித்து காலை விரித்திருக்கும் ஒரு ஸ்டில், என வரிசையாக இருந்தது. அவள் உடனிருந்த தோழி யாரு இந்த ஹீரோ என கேட்டாள் . மாதவன் sea hawks ஹிந்தி சீரியல்ல வருவான் என விளக்கிக்கொண்டிருந்தாள். வீணா என கூப்பிட்டு மகேஷ் உன்னிடம் இதை குடுக்க சொன்னான் என குடுத்தேன். அப்டியா என சிரிப்புடன் அதனை வாங்கி தன் பைக்குள் திணித்துக்கொண்டாள். அவள் உற்சாகத்தை கண்டதும் ஒரு வேளை அவன் சொன்னது உண்மைதான் என தோன்றியது. இன்று இரவு அதை படிக்கப்போகிறாள் நாளை விடை தெரியும். 

-- தொடரும்

பகுதி 2 

No comments:

Post a Comment